Published:Updated:

``மக்கள் தொகைப் பெருக்கம் நாட்டின் வளர்ச்சியை பெரிதும் பாதிக்கும்!''- மோகன்பகவத் இப்படி பேசியது ஏன்?

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்

இந்தியக் குடும்பங்களில் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ள வேண்டாம் எனகிற ரீதியில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் சமீபத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து மத்திய அரசு சட்டம் ஒன்றைக் கொண்டு வரவேண்டுமென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

``மக்கள் தொகைப் பெருக்கம் நாட்டின் வளர்ச்சியை பெரிதும் பாதிக்கும்!''- மோகன்பகவத் இப்படி பேசியது ஏன்?

இந்தியக் குடும்பங்களில் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ள வேண்டாம் எனகிற ரீதியில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் சமீபத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து மத்திய அரசு சட்டம் ஒன்றைக் கொண்டு வரவேண்டுமென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Published:Updated:
ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் நடத்தி வரும் பெரும் போராட்டங்கள் இன்னும் ஓய்ந்தபாடில்லை. முன்னதாக, முத்தலாக் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது, காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்து அந்த மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்புச் சட்டப்பிரிவு 370- ஐ நீக்கிவிட்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றியது. தற்போது, காஷ்மீரில் மத்திய அரசே நேரடியாக ஆட்சி செய்து வரும் நிலையில், இது குறித்த விவாதங்கள் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் எதிரொலித்துக்கொண்டிருக்கின்றன. சர்ச்சைக்குரிய விஷயங்களில் கவனம் செலுத்தி நாட்டின் பொருளாதாரத்தை பா.ஜ.க பாழ்படுத்தி வருகிறது என்ற குற்றச்சாட்டு வலுத்து வரும் நிலையில், பா.ஜ.க.வின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், குடும்பக் கட்டுப்பாடு விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளார்.

மோகன் பகவத்
மோகன் பகவத்

கடந்த ஞாயிற்றுக்கிழமை உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில் நடைபெற்ற `எதிர்கால இந்தியா' என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய மோகன் பகவத், ``இந்தியக் குடும்பங்களில் இனி இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ள வேண்டாம். இதுகுறித்து மத்திய அரசு சட்டம் ஒன்றைக் கொண்டு வரவேண்டும். மக்கள்தொகை குறித்த தெளிவான கொள்கை வகுக்கப்பட வேண்டும். மக்கள்தொகை பெருக்கம் என்பது நாட்டில், உள்ள வளங்களை முற்றிலும் பாதிக்கும் என்பதால் மக்கள்தொகை குறித்த ஒரு கொள்கை விளக்கம் தேவை' எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிகழ்ச்சிக்கு இரண்டு நாள்களுக்கு முன்னதாக மொராதாபாத்தில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களுக்கான கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய மோகன் பகவத், ``நாடு சரியான வளர்ச்சிப்பாதையை நோக்கிச் செல்ல வேண்டுமென்றால் இரண்டு குழந்தைகள் திட்டத்தை உடனடியாக அரசு கொண்டு வரவேண்டும். இந்தச் சட்டத்தை ஆர்.எஸ்.எஸ் அமைப்பு வரவேற்கும். குடும்பத்துக்கு இரண்டு குழந்தைகள் என்பதுதான் ஆர்.எஸ்.எஸ் கொள்கையும் கூட.

மோகன் பகவத் - மோடி
மோகன் பகவத் - மோடி

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்கிறேன். அதன்மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கிறேன். இந்தியாவிலுள்ள பல்வேறு மதத்தைப் பின்பற்றுபவர்களை மதமாற்றம் செய்ய வேண்டுமென்ற எண்ணம் எங்கள் அமைப்புக்கு இல்லை. ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் உள்ள உறுப்பினர்கள் இந்தியா இந்துக்களுக்கானது என்றும் 130 கோடி மக்களும் இந்துக்கள் என்றும் கூறுவதன் அர்த்தம் இங்குள்ள மக்களை மதமாற்றம் செய்வதற்காக இல்லை. ஆர்.எஸ்.எஸ் எந்த ஒரு தனிமனிதனின் மொழியையோ, மதத்தையோ மாற்ற முயற்சிப்பது இல்லை. இந்திய அரசியலமைப்பைத் தவிர்த்து வேறொரு அதிகார மையத்தை நாங்கள் விரும்பவில்லை. ஹிந்துத்துவா என்பது வேற்றுமையில் ஒற்றுமையுடன் ஒன்றாக வாழ்வதுதான்.

இந்திய அரசியலமைப்பு உணர்வுபூர்வமாக ஒன்றிணைய வேண்டுமென்கிறபோது, அந்த ``உணர்வு" என்பது என்ன என்கிற கேள்வி எல்லோர் மனதிலும் எழுகிறது அல்லவா? இந்த நாடு நம்முடையது என்கிற எண்ணம் ஒவ்வொருவருக்குள்ளும் ஏற்படவேண்டும். நாம் அனைவரும் நம்முடைய முன்னோர்களின் வழித்தோன்றல்கள், எவ்வளவுதான் கருத்து வேறுபாடு இருந்தாலும், நாம் அனைவரும் ஒற்றுமையாக ஒன்றிணைந்து வாழ்வதுதான் இந்துத்துவாவின் கொள்கை. நாட்டில் மக்கள் தொகை பெருக்கம் கவலை அளிக்கிறது'' என்றார்.

மோகன் பகவத் - அமித் ஷா
மோகன் பகவத் - அமித் ஷா

மேலும் பேசிய மோகன் பகவத், ``மக்கள் தொகை கட்டுப்பாடு தொடர்பாக மத்திய அரசுதான் முடிவு எடுக்க வேண்டும் கட்டுப்பாடற்ற மக்கள்தொகை வளர்ச்சி நாட்டின் வளர்ச்சிக்கு நல்லதல்ல. இது குறித்து சிந்தித்து ஒரு சிறப்பான சட்டம் கொண்டு வருவது காலத்தின் தேவை என்று நாங்கள் கருதுகிறோம். இந்தச் சட்டம் எந்தவொரு குறிப்பிட்ட மதத்துடனும் தொடர்புபடுத்தாமல், அனைவருக்கும் பொருந்தும் விதமாக இருக்க வேண்டும்.

குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த தவறான புரிதல் காரணமாக தேவையற்ற போராட்டங்கள் நடந்து வருகின்றன. குடியுரிமை சட்டத்தைத் திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பே இல்லை '' என்று பேசினார்.

ஆர்.எஸ்.எஸ் கையில் எடுத்துள்ள குடும்பத்திற்கு இரண்டு குழந்தைகள் என்ற திட்டம் இந்திய அரசியலில் மீண்டும் புயலைக் கிளப்பும் என்று தெரிகிறது. கருவுறுதலை இயற்கையான முறையில்தான் தள்ளிப்போட வேண்டும். செயற்கையான முறையில் அதை அழிப்பதும் தடுப்பதும் இறைநெறிக்கு எதிரானது என்கிற கருத்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதங்களில் உள்ளது. அதனால் இந்தத் திட்டமும் சிறுபான்மையினரைக் குறி வைத்துக்கொண்டு வரப்படும் திட்டமாகவே கருதப்படும் வாய்ப்புண்டு.

மோகன் பகவத்
மோகன் பகவத்

1975 -ஆம் ஆண்டில் எமர்ஜென்ஸி நேரத்தில் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் கட்டாயமாக அமல்படுத்தப்பட்டது. அந்த வரலாறு மீண்டும் ஆர்.எஸ்.எஸ் மூலம் திரும்புகிறதோ என்ற கேள்வி எழுகிறது. பொது சிவில் சட்டம், குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் இவற்றில் எது பா.ஜ.க அரசின் அடுத்த அதிரடியாக இருக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது. பட்ஜெட் முடிந்த பின், ஜெட் வேகத்தில் பாயப்போவது எந்தத் திட்டமோ?

- மாயா