Published:Updated:

ஜாமியா, அலிகர், ஷாகின் பாக் - பி.ஜே.பி அரசின் மீது வைக்கப்படுகிற குற்றச்சாட்டு என்ன?

பி.ஜே.பி
பி.ஜே.பி

குடியுரிமை சட்ட எதிர்ப்புப் போராட்டங்களில், மத்திய பி.ஜே.பி அரசு சிறுபான்மை நிறுவனங்களை மட்டும் குறிவைப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்தியாவில், இந்து - முஸ்லிம் (us vs them) அரசியல் நூற்றாண்டுப் பழைமையானது. இதற்கான தொடக்கப் புள்ளியாக வங்கப் பிரிவினையே அமைகிறது. நிர்வாகக் காரணங்களுக்காக வங்கம் பிரிக்கப்பட்டதாக பிரிட்டிஷ் தெரிவித்தது. இந்து - முஸ்லிம் பிரிவினை மோதலை உருவாக்கி ஆட்சி செய்வதற்காக, பிரிட்டிஷ் கையாண்ட பிரித்தாளும் சூழ்ச்சியாகவும் (Divide and Rule) இது பார்க்கப்பட்டது. தற்போது, இதே குற்றச்சாட்டை இந்திய அரசும் எதிர்கொள்கிறது. அதற்குப் பிறகு, தேச விடுதலையின்போதும் இந்து - முஸ்லிம் அரசியல் தலைதூக்கி, மத ரீதியாக தேசம் இரண்டாகப் பிளவுண்டது, பாகிஸ்தான் உருவானது.

சி.ஏ.ஏ.க்கு எதிரான போராட்டம்
சி.ஏ.ஏ.க்கு எதிரான போராட்டம்

தேசப் பிரிவினை, இன்று வரை இந்திய அரசியலின் விவாதப் பொருளாக இருந்துவருகிறது. பாகிஸ்தான், தன்னை இஸ்லாமிய நாடாகவும், இஸ்லாமை அரச மதமாகவும் அறிவித்துக்கொண்டது. இந்தியா, தன்னை ஒரு மதச்சார்பற்ற நாடாக நிர்மானித்துக்கொண்டது. ஆனால், சுதந்திர இந்திய வரலாற்றில் இந்து - முஸ்லிம் அரசியல் உயிர்ப்புடனே இருந்து வந்தது. இது, 90-களில் உச்சம்பெற்றது. பி.ஜே.பி-யின் ராம ஜென்ம பூமி இயக்கம், பாபர் மசூதி இடிப்பு ஆகியவற்றைத் தொடர்ந்து இது மிகவும் தீவிரமடைந்தது. தற்போது, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் - சி.ஏ.ஏ சட்டம் போன்றவற்றால், இந்து - முஸ்லிம் அரசியல் மீண்டும் உச்சம் பெற்றுள்ளது. சி.ஏ.ஏ சட்டம் முஸ்லிம்களைக் குறிவைக்கிறது என எதிர்த்தரப்பு வாதிட, முஸ்லிம்கள் பயப்பட வேண்டும் என பி.ஜே.பி கூறிவருகிறது.

நாடு முழுவதும் சி.ஏ.ஏ எதிர்ப்புப் போராட்டத்தில் பரவலாகக் காணப்பட்ட பதாகைகளில், "இந்து நண்பர்களே நாங்கள் 1947-ல் இஸ்லாமிய நாட்டை நிராகரித்தோம். இந்த முறை ஒரு இந்து நாட்டை நீங்கள் நிராகரிக்க வேண்டும்” என்பது முதன்மையானதாக இருந்தது. பி.ஜே.பி அரசு, சிறுபான்மையினரைக் குறிவைத்து அரசியல் செய்துவருகிறது என்கிற குற்றச்சாட்டு, எதிர்க்கட்சிகளால் மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் தொடர்ந்து முன்வைக்கப்பட்டுவருகிறது.

இந்த நிலையில், அரசின் நடவடிக்கைகளும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன. சி.ஏ.ஏ எதிர்ப்புப் போராட்டங்களை உத்தரப்பிரதேச அரசு அடக்குமுறை கொண்டு கையாண்டது சர்வதேச அளவில் கண்டிக்கப்பட்டது. அந்தப் போராட்டங்களில் சுட்டுக் கொல்லப்பட்ட பெரும்பான்மையானவர்கள் இஸ்லாமியர்களே. சி.ஏ.ஏ எதிர்ப்புப் போராட்டங்களில் ஏற்பட்ட சேதங்களுக்காக, இஸ்லாமியப் பிரதிநிதிகளிடமிருந்து உ.பி அரசு இழப்பீடு பெறப்பட்டதாகச் செய்திகள் வந்தன. இது, சட்டத்துக்குப் புறம்பானது என்று கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

மோடி
மோடி
தேசத்துரோக வழக்கு... குழந்தைகளிடம் விசாரணை..! சி.ஏ.ஏ நாடகம் உருவாக்கிய சர்ச்சைகள்

இதே காலகட்டத்தில், ஜார்க்கண்ட் தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடி, "போராட்டம் செய்பவர்களை அவர்களுடைய உடைகளை வைத்தே அடையாளம் கண்டுகொள்ளலாம்” என்று பேசி சர்ச்சையில் சிக்கினார். சி.ஏ.ஏ-வை எதிர்த்து மங்களூருவில் நடைபெற்ற போராட்டத்தின்போது, காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்தனர். இவர்கள் இருவரும் இஸ்லாமியர்கள். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு அறிவிக்கப்பட்ட பிறகு, கர்நாடக பி.ஜே.பி அரசு அதைத் திரும்பப் பெற்றுக்கொண்டது.

இதேசமயத்தில், டெல்லி ஜாமியா பல்கலைக்கழகம் மற்றும் உ.பி-யில் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில், நிர்வாகத்தின் அனுமதி இல்லாமலே நுழைந்த காவல்துறை, மாணவர்களைத் தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதேசமயம் ஜே.என்.யூ -வில் முகமூடிக் கும்பல் நிகழ்த்திய வன்முறையின்போது, நிர்வாகம் கேட்டுக்கொண்ட போதும் சம்பவ இடத்தில் டெல்லிக் காவல்துறை இல்லாமல்போனது. இவை யாவும் பி.ஜே.பி அதிகாரத்தில் உள்ள பகுதிகளில் மட்டுமே நடக்கின்றன என்கிற குற்றச்சாட்டும் அதன்முன் உள்ளது. டெல்லி காவல்துறை, மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது.

ஜாமியா
ஜாமியா

டெல்லி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய மோடி, "சீலாம்பூர் - ஜாமியா நகர் - ஷாகின் பாக் பகுதிகளில் நடைபெறுகிற போராட்டங்கள் தற்செயலானது அல்ல. அதற்குப் பின்னால் தேசத்தின் நல்லிணக்கத்தைக் குலைக்க வேண்டும் என்கிற அரசியல் திட்டம் உள்ளது” என்று பேசி, மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். வன்முறை நடந்த ஜே.என்.யூ போன்ற மற்ற பல்கலைக்கழகங்களைப் பிரதமர் குறிப்பிடவில்லையே எனச் சமூக ஊடகங்களில் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. மத்திய அரசின் கீழ் வரும் டெல்லி காவல்துறையின் நடவடிக்கைகளுமே கடுமையான விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது.

ஜாமியா, அலிகர் போன்ற சிறுபான்மை நிறுவனங்களை மட்டுமே காவல்துறை குறிவைத்ததாகவும் பரவலாகக் குற்றம் சுமத்தப்பட்டது. தற்போது, கர்நாடகாவில் சி.ஏ.ஏ தொடர்பாக நாடகம் இயற்றினார்கள் என்பதற்காக, ஷாகின் பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள்மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பெற்றோர் மற்றும் தலைமை ஆசிரியர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குழந்தைகளிடம் காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறது.

மங்களூர் பள்ளி நிகழ்ச்சி
மங்களூர் பள்ளி நிகழ்ச்சி
தேசத்துரோக வழக்கு... குழந்தைகளிடம் விசாரணை..! சி.ஏ.ஏ நாடகம் உருவாக்கிய சர்ச்சைகள்

அந்தப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்களின் பெற்றோர் ஒருவர் அளித்த பேட்டி ஒன்றில், "ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்திலும், ஷாகின் பாகிலும் குற்றவாளிகள் துப்பாக்கிகளுடன் சுதந்திரமாக வந்தனர். அவர்கள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மங்களூருவிலும், ஒரு பள்ளியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை மாணவர்களை வைத்து ஒரு கொண்டாட்டமாக நிகழ்த்திக்காட்டினர். அங்கெல்லாம் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஷாகின் பள்ளி, சிறுபான்மையினரைச் சார்ந்தது என்பதற்காக மட்டுமே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன” என்று தெரிவித்திருந்தார்.

மங்களூர் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி, மத்திய அமைச்சர் சதானந்த கவுடா ஆகியோரும் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு