Published:Updated:

`இதை ஆளும்கட்சியினர் உள்ளூர் அரசியலுக்குப் பயன்படுத்தக்கூடாது'- கே.எஸ் அழகிரி!

”உலகத் தலைவர்கள் வருகின்ற விசயங்களை, உலக விசயங்களை விசயமாகவே வைத்துக் கொள்ள வேண்டும். அதை உள்ளூர் அரசியலுக்குப் பயன்படுத்தக்கூடாது என்பதை ஆளும் கட்சியினர் உணர வேண்டும்”

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “சீனாவிற்கும், இந்தியாவிற்கும் இடையே 5 ஆயிரம் ஆண்டு கால கலாச்சார பாரம்பரியம் உண்டு. நவீன காலத்தில் பண்டித ஜவஹர்லால் நேரு, பஞ்சசீலக் கொள்கையை உருவாக்கி இந்தியாவிற்கும் சீனாவிற்கும் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தினார். இன்று அதனுடைய தொடர்ச்சியாக சீன அதிபர் வந்திருக்கிறார். இதனால், அவருக்கும் நமக்கும் தொழில் ரீதியாக, தொழில்நுட்ப ரீதியாக பல உடன்பாடுகள் ஏற்பட்டால் அது ஏற்றுக்கொள்ளக்கூடியது. நமக்கும் சீனாவுக்கும் இடையே எல்லைப் பிரச்சினை, தலாய்லாமா பிரச்சனை, வரி விதிப்பு ஆகியவை இருக்கிறது.

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

எனவே, இரு நாட்டு அரசாங்கத்திற்கும் இடையே அதைப் பற்றி ஏதாவது உடன்படிக்கைகள் ஏற்பட்டால் அது குறித்து கருத்து சொல்லலாம். பிரதமர் மோடி தமிழ் பண்பாடு கலாச்சாரத்தை ஏற்றுக் கொண்டால் அது மகிழ்ச்சி. ஆனால், அதற்காக பா.ஜ.கவினர் பிறமொழிகளை நம் மீது திணிக்கக் கூடாது. உலகத் தலைவர்கள் வருகின்ற விசயங்களை, உலக விசயங்களை நான் விசயமாகவே வைத்துக் கொள்ள வேண்டும். அதை உள்ளூர் அரசியலுக்குப் பயன்படுத்தக்கூடாது என்பதை ஆளும்கட்சியினர் உணர வேண்டும்.

வெறும் மதத்தை மட்டுமே வைத்து அரசியல் செய்கிறவர்கள் பா.ஜ.கவினர். நானோ, தி.மு.க தலைவர் ஸ்டாலினோ நாங்கள் இந்துக்கள் அல்ல என்று கூறிக் கொண்டது கிடையாது. ஆனால், எல்லாவற்றையுமே மதம், ஜாதி என்று பார்க்க முடியாது. வேற்றுமையில் ஒற்றுமை காண்கின்ற உலகம்தான் இது. எனவே எல்லா கலாச்சாரத்தையும் அங்கீகரிப்போம், ஏற்றுக் கொள்கிறோம். எனவே இவர் இந்து விரோதி, இவர் முஸ்லிம் விரோதி, இவர் கிறிஸ்தவ விரோதி என்றுச் சொன்னால் அதைவிட இழிவானது மலிவான அரசியல் பிரசாரம் எதுவும் இல்லை. மதசார்பற்ற கூட்டணி என்பது மக்களை ஒன்றுபடுத்துகிற கூட்டணி. ஜாதியின் பெயரால் மதத்தின் பெயரால் மக்களை பிரிக்ககூடிய கூட்டணி அல்ல. அதிமுக கூட்டணி என்பது ஒரு விசித்திரமான கூட்டணி. பா.ஜ.கவின் நிலைப்பாடு என்ன?

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

பா.ம.கவின் நிலைப்பாடு என்ன என்பதெல்லாம் நமக்கு புரியாத ஒன்று. ஆனாலும், ஒரு விதி வசத்தால் அந்தக் கூட்டணி ஓடிக் கொண்டிருக்கிறது. கொள்கை வசத்தால் ஓடவில்லை. அவர்களுடைய கூட்டணிக் கட்சிகள் பற்றி அவர்களுக்கே ஒன்றும் தெரியாத பொழுது நாம் என்ன சொல்ல முடியும்? நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்களில் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணியே வெற்றி பெறும்.” என்றார்.