Published:Updated:

என்ன நடக்கிறது? - 100 நாள்களைக் கடந்த ரஷ்யா - உக்ரைன் போர்...

உக்ரைன்
பிரீமியம் ஸ்டோரி
உக்ரைன்

`ரஷ்யா, உக்ரைனின் கிழக்குப் பகுதியைக் கைப்பற்ற பயங்கர ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடும்’ என எச்சரித்திருக்கிறது இங்கிலாந்து அரசு

என்ன நடக்கிறது? - 100 நாள்களைக் கடந்த ரஷ்யா - உக்ரைன் போர்...

`ரஷ்யா, உக்ரைனின் கிழக்குப் பகுதியைக் கைப்பற்ற பயங்கர ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடும்’ என எச்சரித்திருக்கிறது இங்கிலாந்து அரசு

Published:Updated:
உக்ரைன்
பிரீமியம் ஸ்டோரி
உக்ரைன்

ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கிடையேயான போர் 100 நாள்களைக் கடந்தும், வீரியம் குறையாமல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. உலக நாடுகள், ஐ.நா-வின் கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்காமல் ரஷ்ய அதிபர் புதின் விடாப்பிடியாக இந்தப் போரைத் தொடர்ந்து நடத்திவருகிறார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் விட்டுக்கொடுக்காமல் தனது நாட்டுப் படைகள் மூலம் பதிலடி கொடுத்துவருகிறார். சமீபத்தில் இந்தப் போரில் நடந்த சில முக்கியச் சம்பவங்கள் இங்கே...

கிழக்கு உக்ரைனைக் குறிவைக்கும் ரஷ்யா!

உக்ரைனின் லுஹான்ஸ்க் மாகாணத்திலுள்ள செவரோடொனட்ஸ்க் என்னும் நகரில், தீவிரத் தாக்குதல்களை நடத்திவருகிறது ரஷ்யா. அங்கிருக்கும் குடியிருப்புக் கட்டடங்களைக் குறிவைத்து அழித்துவருகிறது ரஷ்ய ராணுவம். அந்தப் பகுதியிலுள்ள ரசாயன ஆலை ஒன்றில் நடத்தப்பட்ட தொடர் தாக்குதலில், ஆலையின் ஒரு பகுதியில் தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதாகவும், அந்த ஆலையிலுள்ள சுரங்கங்களில் சுமார் 800 பொதுமக்கள் சிக்கித் தவித்துக்கொண்டிருப்பதாகவும் உக்ரைன் அரசு தெரிவித்திருக்கிறது. இந்த நிலையில், ஜூன் 12-ம் தேதி அன்று, ``இன்னும் சில வாரங்களில் உக்ரைனின் கிழக்குப் பகுதியை, ரஷ்யா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடும்’’ என்று எச்சரித்திருக்கின்றனர் அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள்.

என்ன நடக்கிறது? - 100 நாள்களைக் கடந்த ரஷ்யா - உக்ரைன் போர்...

முற்றிலும் சேதமடைந்த தானியக் கிடங்கு!

உக்ரைன் தலைநகர் கீவிலுள்ள தானியக் கிடங்கு ஒன்றில், வெடிகுண்டுத் தாக்குதலில் ஈடுபட்டது ரஷ்ய ராணுவம். அந்தத் தாக்குதலில் தானியக் கிடங்கு முழுவதுமாகச் சேதமடைந்திருக்கிறது. இது குறித்து உக்ரைன் வேளாண்துறை அமைச்சகம், ``உக்ரைனின் மிகப்பெரிய கிடங்கான இந்த தானியக் கிடங்கில் சுமார் மூன்று லட்சம் டன் கோதுமை, சோளம் உள்ளிட்ட தானியங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. தற்போது இந்தக் கிடங்கு முற்றிலுமாகச் சேதமடைந்துவிட்டது’’ என்று கூறியிருக்கிறது. உலகின் முன்னணி உணவு ஏற்றுமதி நாடாக இருக்கும் உக்ரைனில், மிகப்பெரிய தானியக் கிடங்கு முற்றிலும் சேதமடைந்திருப்பதால், வரும் வாரங்களில் உலகச் சந்தையில் உணவுப்பொருள்களின் விலை உயரும் என்று சொல்லப்படுகிறது. தங்களுக்கு ஆதரவளிக்கும் மேற்கத்திய நாடுகளுக்கு நெருக்கடி கொடுக்கவே இது போன்று உணவுக் கிடங்குகளில், ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் அரசு குற்றம்சாட்டியிருக்கிறது. ரஷ்யாவின் இந்தத் தாக்குதல்களால், நலிவடைந்த நாடுகளின் உணவுப் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டதாக ஐ.நா அறிக்கை வெளியிட்டிருக்கிறது!

KH-22 ஏவுகணை... எச்சரிக்கும் இங்கிலாந்து!

`ரஷ்யா, உக்ரைனின் கிழக்குப் பகுதியைக் கைப்பற்ற பயங்கர ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடும்’ என எச்சரித்திருக்கிறது இங்கிலாந்து அரசு. இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் இது தொடர்பாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில், `5.5 டன் எடையுள்ள KH-22 ரக ஏவுகணைகளை ரஷ்யா பயன்படுத்த வாய்ப்புகள் இருக்கின்றன. விமானம் தாங்கிக் கப்பல்களை அழிக்கும் சக்தி பெற்ற இந்த ஏவுகணைகளை ரஷ்யா பயன்படுத்தினால், மிகப்பெரிய உயிர்ச்சேதங்களும், சொத்து இழப்புகளும் ஏற்படும்’ என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது!

என்ன நடக்கிறது? - 100 நாள்களைக் கடந்த ரஷ்யா - உக்ரைன் போர்...

போரில் உயிரிழந்த 287 குழந்தைகள்!

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் ஆலோசகர் ஒலெக்சி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ``போரின் முதல் 100 நாள்களில், சுமார் 10,000 உக்ரைன் வீரர்களை நாங்கள் இழந்திருக்கிறோம். அதேநேரத்தில் ரஷ்யப் படையில், சராசரியாக உக்ரைன் வீரர்களைவிட ஐந்து முதல் ஆறு மடங்கு வீரர்கள் உயிரிழந்திருக்கிறார்கள்’’ என்று கூறியிருக்கிறார். மேலும், உக்ரைன் அரசு வெளியிட்டிருக்கும் சமீபத்திய அறிக்கையில், ``இந்தப் போரில் உக்ரைனைச் சேர்ந்த 287 குழந்தைகள் உயிரிழந்திருக்கிறார்கள். 754-க்கும் மேற்பட்ட குழந்தைகள் தீவிர பாதிப்புகளைச் சந்தித்திருக்கிறார்கள். 1,848 கல்வி நிலையங்கள் உருக்குலைந்து போய்விட்டன’’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஜூன் 9 அன்றுஐ.நா சபை, `இந்தப் போர் காரணமாக உக்ரைனில் 4,302 பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். 5,217 பேர் காயமடைந்திருக்கின்றனர். மேலும், போரால் 72 லட்சம் உக்ரைன் மக்கள் வசிப்பிடங்களை இழந்துவிட்டார்கள். அதில் 48 லட்சம் பேர் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைந்திருக்கிறார்கள்’ என்று புள்ளிவிவரம் வெளியிட்டிருக்கிறது.

மூன்று வெளிநாட்டவர்களுக்கு மரண தண்டனை!

உக்ரைனின் டொனட்ஸ்க் பகுதியில் வசித்துவரும் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களும், உக்ரைன் படைகளை எதிர்த்துச் சண்டையிட்டு வருகின்றனர். இந்தக் கிளர்ச்சியாளர்கள், சமீபத்தில் உக்ரைனுக்கு ஆதரவாகச் சண்டையிட்டு வந்த மூன்று வெளிநாட்டு வீரர்களைச் சிறைப்பிடித்தனர். அந்த மூவரையும், டொனட்ஸ்க் மக்கள் குடியரசின்கீழ் இயங்கும் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். ஜூன் 10 அன்று, வெளிநாட்டைச் சேர்ந்த அந்த மூவருக்கும் மரண தண்டனை விதித்திருக்கிறது டொனட்ஸ்க் குடியரசு நீதிமன்றம். இந்த மூவரில், இருவர் பிரிட்டனைச் சேர்ந்தவர்கள். ஒருவர் மொராக்கோ நாட்டைச் சேர்ந்தவர். `சர்வதேச அங்கீகாரம் பெறாத டொனட்ஸ்க் குடியரசின் நீதிமன்றம் விதித்த இந்த தண்டனை செல்லாது’ என்று உக்ரைன் அரசு கண்டனம் தெரிவித்திருக்கிறது. ஜெனீவா ஒப்பந்தத்தின்படி, போர்க் கைதிகள் கொல்லப்படக் கூடாது. இருந்தும், `கைதுசெய்யப்பட்ட மூவரும் வெளிநாட்டைச் சேர்ந்த கூலிப்படைகள், அவர்கள் போர்க் கைதிகள் என்ற வரைமுறைக்குள் வர மாட்டார்கள். எனவே, அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை செல்லும்’ என்று ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் வாதிட்டுவருகிறார்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism