Election bannerElection banner
Published:Updated:

அம்பானி வீட்டின் அருகே வெடிகுண்டு நிரம்பிய கார் - ஸ்டார் ஹோட்டலில் தங்கி, திட்டம் தீட்டிய அதிகாரி

சச்சின் வாஸ்
சச்சின் வாஸ்

வெடிகுண்டு நிரம்பிய கார் கண்டுபிடிக்கப்பட்டதற்குச் சில நாள்களுக்கு முன்னர் போலீஸ் அதிகாரி சச்சின், தெற்கு மும்பையிலுள்ள ஸ்டார் ஹோட்டலில் ஐந்து நாள்கள் தங்கியிருந்து திட்டம் தீட்டியிருக்கிறார் என்று கூறப்படுகிறது. அவருடன் பெண் ஒருவரும் இருந்திருக்கிறார்.

மும்பையில் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இல்லத்துக்கு அருகில் வெடிகுண்டுகளுடன் கடந்த மாத இறுதியில் கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இது மகாராஷ்டிரா அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியிருக்கிறது. இந்தச் சதிச் செயலில் தொடர்புடையவராகக் கூறப்படும் குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரி சச்சின் வாஸ் உட்பட மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டுள்ள சச்சினிடம் மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் ஒவ்வொரு மாதமும் மும்பை பப்கள், பார்கள் மற்றும் ஹோட்டல்களின் உரிமையாளர்களிடம் 100 கோடி ரூபாய் லஞ்சத்தை வசூலித்துக் கொடுக்க வற்புறுத்தியதாக, பணியிட மாற்றம் செய்யப்பட மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் குற்றம் சாட்டினார். இது குறித்து முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எட்டு பக்கக் கடிதம் ஒன்றை எழுதினார். இதைக் காரணம் காட்டி, மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று பா.ஜ.க காய்நகர்த்திவருகிறது.

சச்சின் வாஸ்
சச்சின் வாஸ்

ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் ரகசிய பிளான்

வெடிகுண்டு நிரம்பிய கார் கண்டுபிடிக்கப்பட்டதற்குச் சில நாள்களுக்கு முன்பு போலீஸ் அதிகாரி சச்சின், தெற்கு மும்பையிலுள்ள ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் ஐந்து நாள்கள் தங்கியிருந்து திட்டம் தீட்டியிருக்கிறார் என்று கூறப்படுகிறது. அவருடன் பெண் ஒருவரும் இருந்திருக்கிறார். அந்தப் பெண் யார் என்று அடையாளம் தெரியவில்லை. சச்சின் அந்தப் பெண் குறித்த தகவலைக் கூற மறுப்பதாக விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஹோட்டலின் சிசிடிவி காட்சிகளில் பெண்ணின் முகம் சரியாகப் பதிவாகவில்லை. ஆனால் அவர் குஜராத்தைச் சேர்ந்தவர் என்று மட்டும் அடையாளம் காணப்பட்டிருப்பதாகக் காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். அவரைப் பிடிக்கும் பணியில் தேசியப் புலனாய்வு அமைப்பு தீவிரமாக இருக்கிறது.

ஹோட்டலில் அறை முன்பதிவு செய்வதற்கு போலி ஆவணங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. மேலும், அடிக்கடி சச்சின் தனது மொபைல் நம்பர்களை மாற்றிக்கொண்டே இருந்ததும் தெரியவந்திருக்கிறது.

கையிலிருந்த ஐந்து பேக்குகள்:

ஹோட்டலுக்கு வரும்போது சச்சின் தன்னுடன் ஐந்து பேக்குகளை எடுத்துச் சென்றிருக்கிறார். அவற்றில் என்ன இருந்தது, அந்த பேக்குகள் இப்போது எங்கே இருக்கின்றன என்று கண்டுபிடிக்கப்படவில்லை. இது குறித்து ஹோட்டல் ஊழியர்களிடம் விசாரிக்கப்பட்டுவருகிறது. முகேஷ் அம்பானி இல்லத்துக்கு வெளியில் நின்ற கார் தானேவைச் சேர்ந்த மன்ஷுக் ஹெய்ரன் என்பவருக்குச் சொந்தமானது. வெடிகுண்டுகளுடன் கார் பறிமுதல் செய்யப்பட்ட சில நாள்களில் ஹெய்ரன் கடலில் பிணமாகச் செத்து மிதந்தார். அவரது கொலையிலும் போலீஸ் அதிகாரி சச்சினுக்குத் தொடர்பு இருப்பதாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

ஹெய்ரன் தனது காரைக் காணவில்லை என்று போலீஸில் புகார் செய்திருக்கிறார். இது நடந்த மறுநாள்தான் சச்சின் ஹோட்டலில் அறையெடுத்துத் தங்கியிருக்கிறார். அந்த ஐந்து நாள்களில் சச்சினைச் சிலர் வந்து பார்த்துச் சென்றிருக்கிறார்கள் என்பதும் சிசிடிவி-யில் பதிவாகியிருக்கிறது.

மகாராஷ்டிரா: அரசுக்கு எதிராகத் திரும்பிய அடுத்த போலீஸ் அதிகாரி - கடும் நெருக்கடியில் சிவசேனா அரசு!

இதற்கிடைய சச்சினை நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். அப்போது, தான் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்றும், தன்மீது வீண்பழி சுமத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால், சச்சின் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாகக் கூறி, போலீஸ் காவலை நீட்டிக்க வேண்டும் என்று தேசியப் புலனாய்வு அமைப்பு நீதிமன்றத்திடம் கோரியது. அதை ஏற்று வரும் ஏப்ரல் 3-ம் தேதி வரை சச்சினை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

மும்பை முன்னாள் கமிஷனர் பரம்பீர் சிங் தெரிவித்திருக்கும் ரூ100 கோடி லஞ்சப் புகாரில், அனில் தேஷ்முக்குக்கு எதிராக சச்சினிடம் புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் வாக்குமூலம் பெற முயன்றுவருகின்றனர். ஆனால், சச்சின் அவ்வாறு வாக்குமூலம் கொடுக்க மறுத்துவருவதாகக் கூறப்படுகிறது. இதனால் மேலும் விசாரணையைத் தீவிரப்படுத்த அதிகாரிகள் முடிவுசெய்துள்ளனர். பரம்பீர் சிங் வழக்கு மும்பை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் முன்பாக சச்சினிடம் வாக்குமூலம் பெற வேண்டும் என்பதில் அதிகாரிகள் தீவிரமாக இருக்கின்றனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு