தமிழகம் முழுவதும் கடந்த வாரம் அதிமுக மாவட்ட செயலாளர்களுக்கான தேர்தல் நடந்து முடிந்தது. இதில், தேர்வு செய்யப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் பட்டியல் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு வெளியானது. இதில் யாரும் எதிர்பார்க்காத விதமாக சேலம் புறநகர் மாவட்ட செயலாளராக ஆத்தூர் இளங்கோவன் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.

இது கட்சி நிர்வாகிகளுக்கும், கட்சி சீனியர்களுக்கும் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம். இதுதொடர்பாக கட்சி தொண்டர்களிடம் விசாரித்தோம், ``இளங்கோவன் எடப்பாடியாரின் நம்பிக்கையான நபர்களில் ஒருவர். நெருங்கிய நண்பராகவும் இருப்பதால் சேலத்தில் கட்சியை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டுபோக இளங்கோவன் தான் சரியான நபர் என எடப்பாடியார் நம்புகிறார். சேலத்தை பொறுத்தவரை என்னதான் புறநகர் மாவட்டச் செயலாளர் பதவியை இத்தனை ஆண்டுகாலம் எடப்பாடி பழனிசாமி வைத்திருந்தாலும், மாவட்ட செயலாளர் வேலைகள் முழுவதும் இளங்கோவன் தான் பார்த்து வருகிறார்.
கட்சியில் நடக்கும் பிரச்னைகள் முதற்கொண்டு இளங்கோவனிடம் தான் விசாரிக்க அனுப்பி வைப்பார் எடப்பாடியார். தமிழக முதல்வராக பழனிசாமி இருந்தபோது சேலத்தில் அவர் பெயர் போட்டு நடக்கும் அனைத்து பொதுகூட்டத்திற்கும் தலைமையேற்று நடத்தியவர் இளங்கோவன். சேலத்தில் நடக்கும் ஒரு பொதுக்கூட்டத்துக்கு ஐம்பதாயிரம் பேர் திரட்ட வேண்டுமென்றாலும் சர்வ சாதரணமாக திரட்டும் நபர் என்பதால் தலைமை மாவட்ட செயலாளர் பதவியை வழங்கியுள்ளது” என்றனர்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஇத்தனை ஆண்டுகாலம் புறநகர் மாவட்டச் செயலாளர் பதவியை யாருக்கும் விட்டுக்கொடுக்காமல் பூட்டிப் பாதுக்காத்து வந்த எடப்பாடி பழனிசாமி திடீரென அந்த பதவியை தூக்கி கொடுப்பதற்கான காரணம் குறித்து மற்றொரு கட்சி தொண்டரிடம் விசாரித்தோம், ``சேலம் அதிமுக கோட்டையாக இருந்து வருகிறது. இதில் திமுக நுழைந்திடாமல் இருக்க வேண்டும் என்றால் கட்சியை வலுபடுத்த வேண்டும். எடப்பாடியார் ஏற்கனவே எதிர்கட்சித்தலைவர், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் போன்ற பதவிகளை வகித்து வருவதால் அவரால் சேலத்தில் கட்சியை வலுப்படுத்துவதற்கான வேலைகளை செய்யமுடியாது. ஆகையால் எடப்பாடியாருடைய நிழலாக மாவட்ட செயலாளர் பொறுப்பினை இத்தனை ஆண்டுகளாக கவனித்து வந்த இளங்கோவனுக்கு இந்த பொறுப்புகள் கொடுத்தால் கட்சியை வளர்ப்பார் என்று தலைமை முடிவு செய்துதான் பொறுப்பினை அளித்துள்ளது” என்றார்.

இதுகுறித்து முன்னாள் கட்சி நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம், ``கட்சியில் எத்தனையோ சீனியர்கள் இருந்து வருகின்றனர். அவர்களுக்கு வழங்க வேண்டிய பொறுப்பினை இப்படி தூக்கி இளங்கோவனுக்கு கொடுத்தது வேதனையளிக்கிறது. கண்டிப்பாக எடப்பாடியாராக இந்த பொறுப்பினை கொடுத்ததற்கு வாய்ப்பு கிடையாது. இதற்குபின் எதோ ஒரு அரசியல் செய்துள்ளார் இளங்கோவன். ஒரு பக்கம் கொடநாடு வழக்கு சூடுபிடிக்க தொடங்கிருக்கு. அதுல இளங்கோ பெயரும் அடிபடுது, அதனால எடப்பாடியார் பக்கம் எந்த நேரத்திலும் விசாரணை திருப்பப்படலாம் என்பதால் மாவட்ட செயலாளர் பொறுப்பினை அதனை காட்டியே வாங்கியதற்கான வாய்ப்புகள் இருக்கு. ஏற்கனவே கூட்டுறவு வங்கி மாநில தலைவர், சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் எனும் முக்கிய பதவிகளை தன்வசப்படுத்திக்கொண்டார். அதேப்போன்று தான் இப்போது ஜெயலலிதா அம்மா இறந்த பிறகு கட்சியில் ஐந்துக்கும் மேற்பட்ட பொறுப்புகளை யாருக்கும் வழங்காமல் வைத்து வந்த எடப்பாடியாரிடமிருந்தே மாவட்ட செயலாளர் பதவியையும் பறித்துள்ளார்” என்கின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்நிலையில் நேற்று சேலம் அ.தி.மு.க., ஒன்றியச்செயலாளர் வையாபுரி என்பவர், இளங்கோவனுக்கு வழங்கப்பட்டிருக்கும் புறநகர் மாவட்ட செயலாளர் பதவியை கண்டித்து, ஒன்றியச் செயலாளர் பதவியிலிருந்து விலகுவதாக பத்திகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஒன்றியச் செயலாளர் வையாபுரியிடம் பேசினோம், ``கடந்த 23 வருடமாக அ.தி.மு.கவில் பல்வேறு பதவிகளை வகித்து வருகின்றேன். இளங்கோவன் ஏற்கனவே கட்சிகாரர்களுக்கு எதிராக செயல்பட்டவர், இத்தனை நாள்களாக 4 தொகுதி பொறுப்பாளராக இருந்து எல்லாவற்றையும் அவர் தான் கவனித்து வந்தார். இதுவரைக்கும் 4 சேர்மேன் பதவிகளையும் தி.மு.க.,காரர்களுக்கு தான் விட்டுகொடுத்துள்ளார். எங்க பதவியெல்லாம் வியாபாரம் செய்கிறார். என்னுடைய பதவிக்கும் இன்னொரு நபரிடம் பணம் கேட்கிறார். நான் பொறுப்புக்கு வந்தபோது எடப்பாடியார் தான் எனக்கு நாமினேசன் செய்தார். அப்ப அவர் தான் மாவட்ட செயலாளர், நாங்க சந்தோஷமா நிம்மதியா இருந்தோம். திடீர்னு சென்னையிலிருந்து இப்படி ஒரு அறிவிப்பு வந்தது எங்களால ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால இளங்கோவன் மாவட்ட செயலாளராக இருக்கிற வரைக்கும் நான் ஒன்றிய செயலாளர் பதவியை கூட ஏற்றுக்கொள்ள விருப்பமில்லை என்று தலைமைக்கு மனு அளித்துள்ளேன்” என்றார்.

வருகின்ற ஜூன் மாதத்துடன் தமிழகத்தில் ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவியிடங்கள் காலியாகின்றன. இதில் அ.தி.மு.கவுக்கு இருக்கும் எம்.எல்.ஏ- க்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் இரண்டு எம்.பி., சீட்டுகள் கிடைக்கும். ஆகையால் ஆத்தூர் இளங்கோவன் ரொம்ப நாளாகவே எடப்பாடியாரிடம் இதற்காக காய் நகர்த்தி வருவது எல்லோருக்கும் தெரியும். ஆனால் எம்.பி., பதவியை இளங்கோவனுக்கு கொடுத்தால் கட்சி சீனியர்களுக்கிடையே பெரும் குழப்பம் ஏற்பட்டுவிடும் என்பதால் எடப்பாடி பழனிசாமி, தன் மாவட்ட செயலாளர் பொறுப்பினை இளங்கோவுக்கு அளித்துள்ளார் என்கிறார்கள் அதிமுக அரசியலை உற்று நோக்கும் சிலர்.