Published:Updated:

` நெல்லை கண்ணன் பாணியில் சேலம் பெண்!' - ஃபேஸ்புக் பதிவால் கொந்தளித்த பா.ஜ.க நிர்வாகிகள்

சேலம் பெண்
சேலம் பெண்

சேலத்தில் நீதிமன்ற பெண் ஊழியர் ஒருவரின் ஃபேஸ்புக் பதிவு, சேலம் மாவட்ட பா.ஜ.க நிர்வாகிகளைக் கொந்தளிக்க வைத்திருக்கிறது.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேலப்பாளையத்தில் நடந்த கூட்டத்தில் பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோர் குறித்து நெல்லை கண்ணன் பேசிய பேச்சு, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வரிசையில் சேலத்தில் நீதிமன்ற பெண் ஊழியர் ஒருவரின் ஃபேஸ்புக் பதிவு, பா.ஜ.க நிர்வாகிகளைக் கொந்தளிக்க வைத்திருக்கிறது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

சேலம் கன்னங்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் அந்தப் பெண். இவர் சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இருக்கும் இலவச சட்டப் பணிகள் ஆணைய அலுவலக உதவியாளராகப் பணியாற்றி வருகிறார். இவர் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில், பிரதமர் குறித்துப் பதிவிட்டிருந்த சில வாசகங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

` தனியார் விடுதி ஊழியரால் சிக்கிய நெல்லை கண்ணன்!' -பெரம்பலூரில் நடந்தது என்ன?

இந்தப் பதிவு ஃபேஸ்புக், வாட்ஸ் அப் குரூப்பில் வைரலாகப் பரவியது. இப்பதிவைப் பார்த்த பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள், தலைமைக்குத் தகவல் கொடுத்தனர். பின்னர், சேலம் மாநகரக் காவல் ஆணையாளர் செந்தில்குமாரை நேரில் சந்தித்து அந்தப் பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று புகார் மனு கொடுத்திருக்கிறார்கள்.

இதையடுத்து ஆணையாளர் உத்தரவின் பேரில் சேலம் சைபர் கிரைம் போலீஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. காவல் ஆய்வாளர் சரோஜா மற்றும் காவலர்கள் அந்த நீதிமன்றப் பெண் ஊழியரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

கோபிநாத்
கோபிநாத்

இதுபற்றி சேலம் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் கோபிநாத் கூறுகையில், `` நீதிமன்ற ஊழியரின் ஃபேஸ்புக் பதிவு மிகவும் ஆபத்தானது. அவரை உடனே கைது செய்ய வேண்டும். இதுகுறித்து காவல்துறையில் புகார் கொடுத்திருக்கிறோம்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு