Election bannerElection banner
Published:Updated:

எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து போட்டியிடும் தி.மு.க-வின் இளம் வேட்பாளர்-சம்பத்குமாரின் பின்னணி என்ன?

சம்பத்குமார்
சம்பத்குமார்

பொதுமக்களும், எடப்பாடி பழனிசாமியின் கட்சிக்காரர்களும் அதிருப்தியில் இருப்பதால் நாங்கள் எளிதாக வெற்றிபெறுவோம்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து, எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட தி.மு.க சார்பாக சம்பத்குமார் என்ற 37 வயது இளைஞர் களமிறக்கப்பட்டிருக்கிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்துப் போட்டியிடும் இளைஞர் சம்பத்குமார் யார் என்ற கேள்விதான் சேலம் மாவட்ட மக்களின் ஆயிரம் வாட்ஸ் கேள்வியாக இருப்பதோடு, அவரைப் பற்றிய தேடலும் அதிகமாக இருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

யார் இந்த இளைஞர் சம்பத்குமார்?

தந்தை பெயர் தமிழரசன். அம்மா பெயர் புஷ்பா. பெற்றோருக்கு ஒரே மகன். எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கொங்கணாபுரம் அத்தப்பனூர் கிராமத்தைச் சேர்ந்தவர். பாரம்பர்ய தி.மு.க குடும்பத்தைச் சேர்ந்தவர். சம்பத்குமார் எம்.சி.ஏ முடித்திருக்கிறார். வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இன்னும் திருமணம் ஆகவில்லை. தி.மு.க கட்சியில் 2003-ம் ஆண்டு உறுப்பினராகச் சேர்ந்தார். கொங்கணாபுரம் பேரூர் முன்னாள் இளைஞரணிச் செயலாளராக இருந்திருக்கிறார்.

2015-ம் ஆண்டு முதல் சேலம் மேற்கு மாவட்ட துணைச் செயலாளராக இருந்துவருகிறார். சம்பத்குமார் தீவிரமாக கட்சிப் பணி செய்யக்கூடியவர். கொரோனா காலகட்டத்தில் வீடு வீடாகச் சென்று மக்களுக்கு பல உதவிகளைச் செய்திருக்கிறார். சேலம் தி.மு.க மேற்கு மாவட்டச் செயலாளர் செல்வகணபதியின் நிழலாக இருக்கக்கூடியவர். அதனால் செல்வகணபதியின் பரிந்துரையின் பேரில் எடப்பாடி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

கொங்கணாபுரம் சம்பத்குமார்
கொங்கணாபுரம் சம்பத்குமார்

இது பற்றி சம்பத்குமாரிடம் கேட்டதற்கு, `` முதலாவதாக எனக்கு சீட் வழங்கிய தலைவருக்கும், மாவட்டக் கழக நிர்வாகிகளுக்கும் நன்றியைத் தெரிவித்துகொள்கிறேன். எங்க கழகத் தலைவரின் சாதனைகளைச் சொல்லி வெற்றிபெறுவேன். எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவியைப் பயன்படுத்தி அவர் குடும்பத்தை வளர்த்துக்கொண்டாரே தவிர, கட்சிக்காரர்களையும் பொதுமக்களையும் கண்டுகொள்ளவில்லை. அதனால் அவர்மீது பொதுமக்களும், அவருடைய கட்சிக்காரர்களும் அதிருப்தியில் இருப்பதால் நாங்கள் எளிதாக வெற்றிபெறுவோம்'' என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு