Published:Updated:

“முதல்வருக்கு 500 கோடி... அமைச்சருக்கு 300 கோடி!” - அதிரவைக்கும் எஸ்.ஆர்

குவாரி
பிரீமியம் ஸ்டோரி
குவாரி

வியாபாரத்தை கவனிக்க அனுமதி கிடைத்தாலும், தொழிலில் முதலீடு செய்யும் அளவுக்கு ராமச்சந்திரனிடம் அப்போது பணமில்லை.

“முதல்வருக்கு 500 கோடி... அமைச்சருக்கு 300 கோடி!” - அதிரவைக்கும் எஸ்.ஆர்

வியாபாரத்தை கவனிக்க அனுமதி கிடைத்தாலும், தொழிலில் முதலீடு செய்யும் அளவுக்கு ராமச்சந்திரனிடம் அப்போது பணமில்லை.

Published:Updated:
குவாரி
பிரீமியம் ஸ்டோரி
குவாரி

“எங்களால் குவாரி தொழிலே நடத்த முடியவில்லை. ‘முதலமைச்சருக்கு ஐந்நூறு கோடி ரூபாயும், கனிமவளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு முந்நூறு கோடி ரூபாயும் முன்பணமாகக் கொடுத்திருக்கிறோம். அதுபோக, ஒவ்வொரு மாதமும் முந்நூறு கோடி ரூபாய் கொடுக்கவேண்டியிருக்கிறது. அதனால், ஒவ்வொரு குவாரிக்கும் நடைச்சீட்டு ஒன்றுக்கு முந்நூறு ரூபாய் எங்களுக்குக் கொடுக்க வேண்டும். இல்லையென்றால், கனிமவள உதவி இயக்குநரிடமிருந்து அனுப்புகைச் சீட்டு கிடைக்காது. எங்களை மீறி நீங்கள் குவாரி நடத்த முடியாது’ என்று புதுக்கோட்டை எஸ்.ராமச்சந்திரனின் ஆட்கள் மிரட்டுகிறார்கள். இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்...” - இப்படியொரு புகாரை முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பியிருக்கிறார்கள் விருதுநகர் மாவட்ட குவாரி உரிமையாளர்கள் சங்கத்தினர். தமிழக அரசியலில் நெருப்பைப் பற்றவைத்திருக்கும் இந்தப் புகாரில் புதுக்கோட்டை எஸ்.ராமச்சந்திரன் மீதுதான் பலமான குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது!

யார் இந்த எஸ்.ஆர்?

2001-ல் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சிறு கிராவல் குவாரிகளைக் குத்தகைக்கு எடுத்து தொழில் செய்துவந்த எஸ்.ராமச்சந்திரனின் வளர்ச்சி, கடந்த பத்து வருடங்களில்தான் அபரிமிதமாகியிருக்கிறது. இன்று இவர் கைகாட்டுபவர்களுக்கு மட்டுமே குவாரிகளுக்கான அனுப்புகைச் சீட்டு வழங்கப்படுவதால், ராமச்சந்திரனை மீறி யாரும் இந்தத் தொழிலில் ஒரு இன்ச்கூட மணலை எடுக்க முடியாது என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

நம்மிடையே பேசிய குவாரி ஒப்பந்ததாரர்கள் சிலர், “சிறிய அளவில் கிராவல் குவாரி தொழிலில் ஈடுபட்டுவந்த ராமச்சந்திரன், 2006-ல் தி.மு.க ஆட்சி அமைந்தவுடன் தாமிரபரணி, திருச்சிப் பகுதிகளில் ஆற்று மணல் எடுக்கும் தொழிலிலும் கால்பதித்தார். ஆனால், பெரிய அளவுக்குச் சம்பாதிக்கவில்லை. அந்தச் சமயத்தில் முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் ஒருவரின் அறிமுகம் அவருக்குக் கிடைத்தது. முன்னாள் ‘சர்வேயர்’ பிரமுகர் ஒருவரும் இவர்களுடன் நட்பை ஏற்படுத்திக்கொண்டார்.

 “முதல்வருக்கு 500 கோடி... அமைச்சருக்கு 300 கோடி!” - அதிரவைக்கும் எஸ்.ஆர்

2011-ல் ஜெயலலிதா ஆட்சி அமைந்தபோது, மணல் விற்பனையை திருச்சிக்கு வடக்கே ‘சாமியான’வரும், திருச்சிக்கு தெற்கே ‘காசு’ பிரமுகரும் பார்த்துக்கொண்டனர். இவர்களில், ‘சாமியானவர்’ ஜெயலலிதாவுடன் நேரடியாகப் பேசும் அளவுக்குத் தொடர்புள்ளவர். இது அன்றைய அ.தி.மு.க-வின் ஐவர் அணியிலிருந்த சிலருக்குப் பிடிக்கவில்லை. இந்தச் சமயத்தில்தான், 2013-ல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மணல் குவாரி சம்பந்தமாக ஒரு விவகாரம் வெடித்தது. இந்த விவகாரத்தில், ‘சாமியானவர்’ தரப்பு தவறு செய்துவிட்டதால் ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்டது என ஐவர் அணியிலிருந்தவர்கள் போட்டுக்கொடுத்துவிட்டார்கள். இதனால் கடுப்பான மேலிடம், ‘சாமியான’வருக்கு மாற்றாக மணல் வியாபாரத்தை கவனிக்க புதிய ஆளை கொண்டுவரச் சொன்னது. அப்படி அழைத்து வரப்பட்டவர்தான் எஸ்.ராமச்சந்திரன்.

வியாபாரத்தை கவனிக்க அனுமதி கிடைத்தாலும், தொழிலில் முதலீடு செய்யும் அளவுக்கு ராமச்சந்திரனிடம் அப்போது பணமில்லை. அந்தச் சமயத்தில், ஆட்சியில் கோலோச்சிய மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரிடமிருந்து ராமச்சந்திரனுக்கு ஆதரவுக்கரம் நீண்டது. தொடர்ந்து இதே வியாபாரத்தில் அனுபவம்மிக்க முக்கியப் பிரமுகர்கள் இருவரை ராமச்சந்திரனுடன் கைகோக்க வைத்தார் அந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி. இந்த மூவர் கூட்டணி அமைந்த பிறகு மளமளவென ராமச்சந்திரனின் தொழில் கிராப் எகிறியது. அந்தக் காலகட்டத்தில்தான் ‘எஸ்.ஆர்’ என்று அடைமொழியிட்டு அழைக்கப்பட்டார் ராமச்சந்திரன். அவர் தரப்பிலிருந்து ஒப்புதல் அளித்தால் மட்டுமே, குவாரியிலிருந்து மண் எடுக்க அனுப்புகைச் சீட்டு வழங்கப்படும். அதன் பிறகு தமிழ்நாட்டின் மொத்த மணல் வியாபாரத்தையும் எஸ்.ஆர் தரப்பே கட்டுப்படுத்தியது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமிக்குப் பக்கபலமாக இருந்த இந்த மூவர் கூட்டணி தற்போதைய தி.மு.க ஆட்சியிலும் தொடர்கிறது” என்றனர்.

கிராவல் மண் பிரச்னை

தி.மு.க ஆட்சியமைந்த மே 2-ம் தேதியிலிருந்து, சமீபகாலம் வரை கிராவல் மண் எடுப்பதற்கு மறைமுகத் தடை இருந்ததாகவும், சமீபத்தில் பெரும் தொகையை மேலிடத்துக்கு எஸ்.ஆர் தரப்பு செட்டில் செய்துவிட்டதால், மண் வியாபாரத்தை கவனிக்கும் பொறுப்பு அவர்களிடம் தரப்பட்டிருப்பதாகவும் சொல்கிறார்கள் இந்தத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள். நம்மிடம் பேசிய க்ரஷர் தொழிலதிபர் ஒருவர், “மண் எடுக்கும் தொழிலில் எஸ்.ஆர் தரப்பு நேரடியாக ஈடுபட மாட்டார்கள். ஆனால், மேலிடத்துக்குப் பெரும் தொகையை செட்டில் செய்துவிட்டு, ‘எங்கள் அனுமதி இல்லாமல், யாருக்கும் அனுப்புகைச் சீட்டு தரக் கூடாது. நாங்கள் நிர்ணயிக்கும் விலையைக் கொடுத்துவிட்டுத்தான் ஒப்பந்ததாரர்கள் மண் எடுக்க வேண்டும்’ என்று வாய்மொழி உத்தரவு போடச் சொல்வார்கள். மேலிடமும் அவ்வாறே கனிமவள அதிகாரிகளுக்கும் உத்தரவு போட்டுவிடும். இதனால், எஸ்.ஆர் தரப்பின் ஒப்புதல் இல்லாமல் ஒரு பிடி மண்ணைக்கூட எடுக்க முடியாத நிலை இருந்தது.

தி.மு.க ஆட்சியமைந்தவுடன் எல்லாம் வெளிப்படையாக நடக்கும் என்று நினைத்தோம். ஆனால், என்றும் இல்லாத வழக்கமாக கிராவல் மண் எடுப்பதிலேயே மூக்கை நுழைக்கிறது எஸ்.ஆர் தரப்பு. கட்டடங்களின் அடித்தளம் அமைப்பதற்கும், சாலைப் பணிகளுக்கும் கிராவல் மண் பயன்படுத்தப்படுகிறது. வழக்கமாக பட்டா நிலங்களில் கிராவல் மண் எடுப்பதற்கு உரிமம் பெற்றவர்கள்தான் இந்த மண்ணை எடுத்து விற்றுவந்தனர். இதற்கான வரியைச் செலுத்திவிட்டு, உதவி இயக்குநரிடமிருந்து அனுமதி பெறுவது வழக்கம். இப்போது, ‘கிராவல் மண்ணை எடுப்பதாக இருந்தாலும், எங்களுக்கு கமிஷன் கொடுக்க வேண்டும்’ என்கிறது எஸ்.ஆர் தரப்பு. இந்தப் பிரச்னை ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கிறது. ஆனால், விருதுநகர் குவாரி உரிமையாளர்கள்தான் இந்த விவகாரத்தை வெளியே கொண்டு வந்திருக்கிறார்கள்” என்றார்.

புகாரின் பின்னணியை நம்மிடம் விவரித்தார் விருதுநகர் மாவட்ட குவாரி உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் செயலாளர் நாராயணப் பெருமாள்சாமி. “விருதுநகர் உதவி இயக்குநர் செல்வகுமாரிடம் கிராவல் மண் அனுமதிக்காக எங்கள் சங்க உறுப்பினர்கள் அணுகியபோது, ‘நீங்க கம்பெனி ஆட்களிடம் ஒப்புதல் வாங்கிட்டு வாங்க’ என்றிருக்கிறார். அலுவலகத்தின் வாசலில் தங்களை கம்பெனி ஆட்களாக அறிமுகப்படுத்திக்கொண்ட இருவர், ‘முதல்வருக்கு 500 கோடி ரூபாயும், துரைமுருகனுக்கு 300 கோடி ரூபாயும் கொடுத்து இந்தத் தொழிலை எடுத்திருக்கிறோம். எங்கள் அனுமதி இல்லாமல் நீங்க தொழில் பண்ண முடியாது. ஒரு நடைச்சீட்டுக்கு 300 ரூபாய் தாங்க’ என்று கேட்டிருக்கிறார்கள். புதுக்கோட்டை எஸ்.ராமச்சந்திரனின் ஆட்கள்தான், உதவி இயக்குநரின் அலுவலகத்தில் இருந்த கொண்டு இப்படிப் பணம் கேட்டு மிரட்டுகிறார்கள். இந்தக் கும்பலுக்கு கம்பெனி என்று பெயர் வேறு.

எஸ்.ராமச்சந்திரன், நாராயணப் பெருமாள் சாமி
எஸ்.ராமச்சந்திரன், நாராயணப் பெருமாள் சாமி

ஒரு குவாரிக்கு வாரம் 100 நடைச்சீட்டு வரை வழங்கலாம். அப்படிப் பார்த்தால் வாரத்துக்கு 30,000 ரூபாயும், மாதத்துக்கு 1,20,000 ரூபாயும் கமிஷனாக எஸ்.ஆர் கும்பலுக்குக் கொடுக்க வேண்டும். விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 118 குவாரிகள் செயல்படுகின்றன. அதன்படி மாதத்துக்கு கமிஷன் தொகையாக மட்டுமே 1.41 கோடி ரூபாயைச் சுருட்டப் பார்க்கிறது எஸ்.ஆர் தரப்பு. தமிழ்நாடு முழுவதும் எத்தனை குவாரிகள் இருக்கின்றன, எவ்வளவு கமிஷன் தொகை வசூலாகும் என்பதை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள். நாங்கள் எதற்கு சட்ட விரோதமாகப் பணம் கொடுக்க வேண்டும்? இந்த விவகாரத்தில் நடவடிக்கை கோரி, 40 ரிஜிஸ்டர் தபால்களில் முதலமைச்சர், அமைச்சர் துரைமுருகன், விருதுநகர் மாவட்ட ஆட்சியருக்குப் புகார் அனுப்பியுள்ளோம். அரசு இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இது தொடர்பாக விளக்கம் அறிய எஸ்.ராமச்சந்திரன் தரப்பைத் தொடர்பு கொண்டோம். அவர் தரப்பில் பேசியவர்கள், “நாங்கள் எங்கேயாவது அரசு ஒப்பந்தத்தை ஏலம் எடுத்திருக்கிறோமா? ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளைப் பரப்பி களங்கத்தைப் பூசுகிறார்கள். மணல் வியாபாரத்தில் ஒரு சிலருக்குள் எழுந்திருக்கும் போட்டியால், இந்தத் தவறான தகவல் பரப்பப்படுகிறது” என்றதோடு முடித்துக் கொண்டனர்.

ஆட்சியின் நற்பெயர்மீது சேறு பூசப்படுவதற்கு முன்னால், அரசு உரிய நடவடிக்கை எடுத்தால் சரிதான்!