Published:Updated:

`காமராஜர் ஆட்சி எனக் கூறிக்கொண்டு இப்படிப் பேசலாமா?'- நிர்வாகிகளால் டென்ஷனான சஞ்சய் தத்!

காங்கிரஸ் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் தி.மு.க.வின் ஸ்டாலின் பற்றி எப்படிப் பேசலாம் என நிர்வாகிகள் சிலர் எழுந்து சத்தம்போட்டனர். சிலர் விசிலடித்தும், கூக்குரலிட்டும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

sanjay dutt
sanjay dutt

தமிழக காங்கிரஸ் சார்பில் அக்டோபர் 2-ம் தேதி கன்னியாகுமரியில் நடக்கும் காந்தியடிகளின் 150-வது பிறந்ததின நிறைவு விழா பாதயாத்திரை குறித்த ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவிலில் இன்று நடைபெற்றது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்ட இந்த ஆலோசனைக்கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி, அகில இந்தியச் செயலாளர் சஞ்சய் தத், மாநில செயல்தலைவர் வசந்தகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

congress meeting
congress meeting

இதில் அகில இந்தியச் செயலாளர் சஞ்சய் தத் காந்தி ஜெயந்தி விழா பாத யாத்திரையைச் சிறப்பாக நடத்துவது குறித்து பேசினார். தொடர்ந்து பேசிய சஞ்சய் தத், "தமிழகத்தில் ஸ்டாலின் முதல்வராக நாம் பாடுபடுவோம்" என்றார். இதற்கு நிர்வாகிகள் கூட்டத்திலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.

``காமராஜர் ஆட்சி அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் பாடுபட்டுக்கொண்டிருக்கும்போது ஸ்டாலினை முதல்வர் ஆக்க வேண்டும் என நீங்கள் எப்படிச் சொல்லலாம். அதிலும் காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் தி.மு.க வைச் சேர்ந்த ஸ்டாலின் பற்றி எப்படிப் பேசலாம்'' என நிர்வாகிகள் சிலர் எழுந்து கூச்சல் இட்டனர்.

congress meeting
congress meeting

சிலர் விசிலடித்தும், கூக்குரலிட்டும் எதிர்ப்பு தெரிவித்தனர். விவகாரம் பெரிதாக கூச்சலிட்டவர்களை மேடையில் இருந்தவர்கள் சமாதானப்படுத்தினர். பின்னர் பேச்சை தொடர்ந்த சஞ்சய் தத், "நமக்கு இப்போது ஏழு எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள். அவர்களை வைத்துக்கொண்டு நாம் எப்படி காமராஜர் ஆட்சி அமைக்க முடியும். எம்.எல்.ஏ-க்கள் எண்ணிக்கை நாளையே எழுபதாக மாறினால் காமராஜர் ஆட்சி அமைக்க முடியும். இதுதான் காந்தி ரூல்" என டென்சனாகப் பேசிவிட்டு அமர்ந்துவிட்டார். இதனால் காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.