Published:Updated:

“அடைவதற்கு பொன்னுலகம் காத்திருக்கிறது!”

 தோழர் சங்கரய்யா
பிரீமியம் ஸ்டோரி
தோழர் சங்கரய்யா

- தோழர் சங்கரய்யா - 100

“அடைவதற்கு பொன்னுலகம் காத்திருக்கிறது!”

- தோழர் சங்கரய்யா - 100

Published:Updated:
 தோழர் சங்கரய்யா
பிரீமியம் ஸ்டோரி
தோழர் சங்கரய்யா

“மதுரை பஞ்சாலைத் தொழிலாளர் போராட்டத்தை வைத்து ஜோடிக்கப்பட்ட சதிவழக்கில், 1947, ஆகஸ்ட் 14 வரை நானும் தோழர்களும் சிறையில் இருந்தோம். அந்த ஆகஸ்ட் 14-ம் தேதி மாலை 6 மணிக்கு, நாங்கள் இருந்த சிறைக்கு நீதிபதி அலீம் வந்தார். இந்தச் சதிவழக்கின் விசாரணை முடிவில், ‘இது கையாள் வைத்து காவல் துறையால் போடப்பட்ட பொய் வழக்கு’ என உறுதியாகிவிட்டதாகத் தீர்ப்பு கூறினார். அதைத் தொடர்ந்து, நானும் தோழர்களும் விடுதலை செய்யப்பட்டோம். அப்படியே ஆயிரக்கணக்காகக் கூடிய மக்களோடு, சிறையிலிருந்து ஊர்வலமாக வந்து, திலகர் திடலில் பொதுக்கூட்டம் நடத்தினோம். நாங்கள் பேசி முடிக்கும்போது, எல்லாக் கோயில்களிலும் இந்தியா சுதந்திரம் அடைந்துவிட்டதை அறிவிக்கும் சுதந்திர மணி ஒலிக்கிறது… உடனே அந்தப் பொதுக்கூட்டத்தில், சுதந்திரம் வந்துவிட்ட செய்தியை நாங்களும் அறிவித்தோம்… நான்தான் அறிவித்தேன்.’’

- ‘இந்தியா சுதந்திரம் அடைந்த தருணத்தில் என்ன செய்துகொண்டிருந்தீர்கள்..?’ என்ற கேள்விக்கு, தோழர் சங்கரய்யாவின் பதில் இது. 25 வயது இளைஞனாகச் சிறையிலிருந்து வந்து நின்று, பெரும் மக்கள் திரளில் நமது சுதந்திரத்தை அறிவித்த அந்தப் போராளி இளைஞனுக்கு இன்று வயது 100. ஆனால், இப்போதும் அவரது கண்களில், அந்தப் போராளி இளைஞன் ஓயாமல் ஒளிர்கிறான். நூறாவது பிறந்தநாளை ஒட்டி அந்த மகத்தான தோழரைச் சந்திக்கும் விருப்பத்தை, ஜி.ஆர் தோழர் சாத்தியமாக்கித் தந்தார். குரோம்பேட்டையிலுள்ள அவரது எளிய வீட்டில், எனக்கென நேரம் ஒதுக்கி வந்தமர்ந்தார். “நவம்பர் புரட்சி நூற்றாண்டு விழால உங்களுக்கு முன்னாடி பேசினாரே…’’ என அவரது மகன் நரசிம்மன் தோழர் என்னைப் பற்றி நினைவுபடுத்த, “ஆமா… ஆமா…’’ என மெலிந்த கரங்களைத் தூக்கி ஆசீர்வாதம்போல் சொல்கிறார். 25 வருடங்களுக்கு முன்பு தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் ஓங்கி ஒலித்துக் கேட்ட அந்தக் குரல், இப்போதும் அப்படியே மனதை அதிரவைக்கிறது. சத்தியத்தின் குரல் எப்போதும் அப்படியேதான் இருக்கும் என நினைத்துக்கொண்டேன்.

 “அடைவதற்கு பொன்னுலகம் காத்திருக்கிறது!”

இந்த நூறு வயதில், அறத்தின் ரத்தசாட்சியைப்போல என் முன் அமர்ந்திருக்கிறார் தோழர் சங்கரய்யா. எளிய வீட்டில் வசிப்பதும், இழப்புகளைப் புன்னகையாக்கிக்கொண்டு போராட்டங்களில் வாழ்வதும் பொதுவுடைமை இயக்கத் தலைவர்களின் இயல்பு. ஆனால், நமக்கு அது ஆச்சர்யம். ஊழலையும், மலினங்களையும், அபத்தங்களையுமே அரசியலாகப் பார்க்கும் இன்றைய தலைமுறைக்கு மகா ஆச்சர்யம். `என்.எஸ்’ எனத் தோழர்களால் செல்லமாக அழைக்கப்படும் சங்கரய்யா தோழரின் வாழ்வும் இருப்பும் உண்மையில் அபூர்வமானதுதான். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-ஐ உருவாக்கிய 32 தலைவர்களில் ஒருவர். எட்டு ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையிலிருந்து, மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகத் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து, 80 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் பணி செய்து, ராஜாஜியிலிருந்து ஸ்டாலின்வரை பார்த்து, பி.சி.ஜோஷியிலிருந்து நல்லகண்ணு வரை தோழமைகொண்டு, 100 வயதிலும் சமரசமில்லாத போராளியாக, அப்பழுக்கில்லாத அரசியல் தலைவராக இருக்கும் இவரைப் போன்ற ஒருவரை இனிவரும் தலைமுறையால் பார்க்க முடியுமா தெரியவில்லை!

இதைப் பற்றிக் கேட்டால், புன்னகையோடு “மார்க்சிய நெறியை உண்மையாக உணர்ந்த யாரும் அப்படித்தான் இருப்பார்கள். இன்னொன்று அறம், நியாய சிந்தனையெல்லாம் தன்னியல்பான ஒன்று. அதை விளம்பரப்படுத்தி தனிமைப்படுத்தாதீர்கள்… உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின், வாக்கினிலே ஒளி உண்டாம்... நான் எப்போதும் ஆழமாக நம்புவது இந்த வரிகளைத்தான்’’ என்கிறார்.

 “அடைவதற்கு பொன்னுலகம் காத்திருக்கிறது!”

மக்கள் அரசியல் களத்தில், கலைகளின் பங்கு முக்கியமானது என்பதை ஆழமாக நம்புகிறவர் சங்கரய்யா தோழர். அதற்கான முன்னெடுப்புகளை எப்போதும் தீவிரமாகச் செய்துவந்திருப்பவர். ‘ஜனசக்தி’யின் பொறுப்பாசிரியர், ‘தீக்கதிர்’ இதழின் முதல் ஆசிரியர் எனத் தொடங்கி, ‘தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க’த்தின் உருவாக்கம் வரை அவரது பங்களிப்பு என்பது பரந்துபட்டது. அதேபோல ஆழமான, ஆக்ரோஷமான பேச்சாளராக, தேர்ந்த எழுத்தாளராக ஏராளமான இளைஞர்களை, பொதுவுடைமை இயக்கத்தின் பக்கம் ஈர்த்தவர். “தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சிக்குக் கலையும் இசையும் பெரிய பங்காற்றியிருக்கின்றன… அதில் சங்கரய்யாவின் உறுதுணைக்கும் பெரும் பங்குண்டு. 40-களில் மதுரையில் காலை 10 மணிக்கெல்லாம் ஏதேனும் ஒரு தெருமுனையில் கரகாட்டம் ஆரம்பிக்கும், கும்பத்தின் உச்சத்தில் செங்கொடி பறக்கும்… அது ஆரம்பித்த பத்து நிமிடங்களில் சங்கரய்யா அங்கே சைக்கிளில் வருவார். கரகாட்டம் அடுத்த தெருவுக்குச் சென்றுவிட, இங்கே சங்கரய்யா கட்சியின் கொள்கை, லட்சியங்கள் குறித்து உரையாற்றுவார்… இப்படியே மாலைக்குள் பத்து, பதினைந்து தெருமுனைக் கூட்டங்களை நடத்திவிடுவார். அடிப்படையிலேயே அவர் கலையிலும் இசையிலும் கரையும் மனசுக்காரர். சுதந்திரப் போராட்ட தியாகிகளைப் பற்றி தோழர் மணவாளன் எழுதிய, ‘விடுதலைப் போரினில் வீழ்ந்த மலரே தோழா… தோழா’ என்ற பாடலை எப்போது கேட்டாலும் அழுதுவிடுவார்…’’ என்கிறார்கள் தோழர்கள். இது பற்றிக் கேட்கும்போது, “நல்ல கலையால் உங்களைக் கண்ணீர்விடவைக்க முடியும்… அதே மாதிரி நல்ல சிந்தனையை, எழுச்சியை, மாற்றத்தை உருவாக்குற சக்தியும் கலைக்கு இருக்கு. சார்லி சாப்ளின்லேருந்து ‘நைட்டிங்கேல் ஆஃப் இந்தியா’ சரோஜினிதேவி வரைக்கும் எத்தனை பேர் இருந்திருக்காங்க… ‘நீ என்னை கம்யூனிஸ்ட் ஆக்கி’ங்கற நாடகம் கேரள கம்யூனிஸ்ட் இயக்கத்துக்குப் பெரிய பங்களிப்பு செஞ்சுருக்கு. இங்கே தமிழ்நாட்லயும் நாடகமும், சினிமாவும், இசையும் அரசியல் களத்துல பங்களிப்பு செஞ்சுருக்கு. அதனாலதான் நான், எப்பவும் நாடகம், சினிமாத்துறைகள்ல முற்போக்குவாதிகள் திட்டமிட்டு உள்ளே நுழையணும்னு சொல்லுவேன்… இப்போ அதுக்கான தேவை ரொம்ப அதிகமாகியிருக்கு. அது இங்கே முழுமையா நடக்கலைங்கற கவலை எனக்கிருக்கு. தனக்கான வசதிகளை மட்டும் ஏற்படுத்திக்கிட்டு, ஒரு கோபுரத்துல போய் உட்கார்ந்துக்கிறவன் நல்ல கலைஞன் இல்லை. அவனுக்கு லட்சியங்கள் இருக்கணும், உங்களை மாதிரி ஆளுங்கள்லாம் நிறைய வரணும்… இன்னும் நிறைய செய்யணும்’’ என்கிற தோழரின் வார்த்தைகள் புதிய உத்வேகத்தை அளிக்கின்றன.

விடைபெறுவதற்கு முன்பு இன்றைய அரசியல் சூழல் குறித்தும், இளைஞர்கள் குறித்தும் பேச்சு திரும்பியது. உடனே தீர்க்கமாக, “இப்போதும் பணத்தை மட்டும் நம்பாமல் அறத்தை நம்பி, இடதுசாரி இயக்கத்தின் பாதையில் இணைந்து முழக்கமிடும் இளைஞர்களின்மேல் எனக்குப் பெரும் நம்பிக்கை இருக்கிறது. சுதந்திர காலத்துல இளைஞர்கள்கிட்ட விடுதலை எண்ணம்கிற ஒற்றைச் சிந்தனை கொழுந்து விட்டெரிஞ்சுது… அது அவங்களை இணைச்சுது… ஆனா இன்னிக்கு சாதி, மதவெறிப் பிரிவினைகள் பலபேரைத் துண்டாடி, ஆபத்தான திசைக்குக் கொண்டுபோகுது. அதுதான் என் கவலை. சாதிய, மதவாத அரசியலில் லாபம் பார்க்கிற சக்திகள் நமக்குள் பிரிவினையைத் திட்டமிட்டு விதைத்து, அறுவடை செய்யத் துடிக்கிறார்கள். சுதந்திரத்துக்குப் போராடின மாதிரி, இப்போ இந்தப் பிரிவினை அரசியல் சக்திகளுக்கு எதிரா இளைஞர்கள் இணைந்து நின்று போராடணும். அவர்களை விரட்டியடிக்கணும். அப்பதான் நமக்கான சமூக, பொருளாதார விடுதலையை முழுமையா அடைய முடியும். இன்னொரு முறையும் அந்த வார்த்தைகளைத்தான் சொல்றேன், இழப்பதற்கு நம்மிடம் எதுவுமில்லை, அடைவதற்கோ பொன்னுலகம் காத்திருக்கிறது!’’ என்கிறார் அந்த நூறு வயது இளைஞர்.

லால் சலாம் தோழர்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism