Published:Updated:

“பாரத்நெட் திட்டத்தில் நெருக்குதலுக்குக் காரணம் பணம்தான்!”

சந்தோஷ் பாபு ஐ.ஏ.எஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
சந்தோஷ் பாபு ஐ.ஏ.எஸ்

கமலுடன் கைகோத்த சந்தோஷ் பாபு ஐ.ஏ.எஸ் அதிரடி...

தகவல் தொழில்நுட்பத்துறை முதன்மைச் செயலராக இருந்த சந்தோஷ் பாபு ஐ.ஏ.எஸ்., மத்திய அரசின் `பாரத்நெட்’ திட்டத்தில் தமிழக அரசுத் தரப்பில் சிலரிடமிருந்து வந்த அழுத்தங்களுக்கு அடிபணிந்து போகாததால், கடுமையான நெருக்கடிகளுக்கு ஆளானார். இதைத் தொடர்ந்து, விருப்ப ஓய்வுபெற்று மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தவருக்கு, தலைமை நிலையப் பொதுச்செயலாளர் பதவியைக் கொடுத்திருக்கிறார் கமல்ஹாசன். சந்தோஷ்பாபுவைச் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

‘‘ஏன் இப்படியொரு முடிவு?’’

‘‘கேரளாவில் பிறந்திருந்தாலும், 26 ஆண்டுகளாக தமிழகத்தில் மனநிறைவுடன், நேர்மையாக வேலை பார்த்தேன். தமிழ்நாட்டின் வளர்ச்சியை பீகார், உ.பி-யுடன் சிலர் ஒப்பிடுகிறார்கள். இது தவறானது. அதேசமயம், வளர்ச்சிப் பாதையில் நாம் இன்னும் மேலே சென்றிருக்க வேண்டும். ஐடி கம்பெனிகளின் உள்ளே நமது பிள்ளைகள் உலகத்தரம் வாய்ந்த பணிகளைச் செய்துகொண்டிருக்கிறார்கள். ஆனால், வெளியிலோ மிக மோசமான சாலைகள் இருக்கின்றன. `சென்னையை ஏன் உலகத்தரம் வாய்ந்த நகரமாக மாற்றக் கூடாது?’ என்று பலமுறை யோசித்திருக்கிறேன். என்னை சென்னை மாநகராட்சி ஆணையராக நியமித்திருந்தால் இந்த நகரத்தையே உருமாற்றியிருப்பேன். அது என்னுடைய கனவாக இருந்தது. ஆனால், `என்னால் முடியவில்லையே...’ என்ற வேதனை இன்றளவும் எனக்குள் இருக்கிறது. இதையெல்லாம் மாற்ற வேண்டுமென்றால், அரசியல் அதிகாரம் முக்கியம்.’’

“திடீரென அரசியல் பாதையைத் தேர்வுசெய்ததுபோலத் தெரியவில்லையே..?’’

‘‘உண்மைதான். கடந்த 10 ஆண்டுகளாகவே அரசியலுக்கு வர வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். `தமிழக நல்லாட்சிக் கட்சி’ என்றொரு கட்சியைத் தொடங்கவும் திட்டமிட்டேன். அதற்காக, கட்சியின் கொள்கையையும் கொடியையும் வடிவமைத்தேன். தமிழ்நாட்டை மாற்றுவது தொடர்பாக 300 பக்கங்களுக்கு அறிக்கையையும் தயார்ப்படுத்தி வைத்திருந்தேன். அதை நடைமுறைப்படுத்த இயலவில்லை.’’

“ஆனால், அரசுப் பணியைவிடவும், அரசியல்தானே நெருக்கடியாக இருக்கும்?’’

‘‘நிச்சயமாக. ஆனால், தமிழகத்தை நல்ல மாநிலமாக உருவாக்குவதுதான் எனது லட்சியம். நான் யாருக்கும் எதிரியல்ல. மக்களுக்கு நண்பனாக இருக்க வேண்டும்; நல்லது செய்ய வேண்டும்... அவ்வளவுதான்.’’

‘‘தமிழ்நாட்டில் எத்தனையோ கட்சிகள் இருக்கும்போது, ம.நீ.ம பக்கம் சென்றதன் பின்னணி என்ன?”

‘‘எனது சிந்தனையும் அவர்களுடைய சிந்தனையும் ஒரே மாதிரியாக இருக்கிறது. மக்கள் நீதி மய்யத்துக்குள் வருவதற்கு எனக்கு எந்த வாக்குறுதியும் கொடுக்கப்படவில்லை. நானும் கேட்கவில்லை. அவர்கள்தான் என்னை அழைத்தார்கள்.’’

சந்தோஷ் பாபு ஐ.ஏ.எஸ்
சந்தோஷ் பாபு ஐ.ஏ.எஸ்

‘‘சரி... பாரத்நெட் திட்டத்தில் என்னதான் பிரச்னை?’’

‘‘நான் இன்னொருவர்மீது பழிபோட்டுவிட்டு ஒதுங்கிக்கொள்ளலாம். `முதல்வர் இப்படிச் செய்தார்; உயரதிகாரிகள் இப்படிச் செய்தனர்’ என்றெல்லாம் சொல்லலாம். இப்போது அதைப்பற்றிப் பேசுவது தேவையில்லை என்று நினைக்கிறேன். பாரத்நெட் திட்டமும், பிரிடிக்டிவ் கவர்னன்ஸ் (Predictive Governance) என்ற திட்டமும் எனது கனவாக இருந்தன. பிரிடிக்டிவ் கவர்னன்ஸ் திட்டத்தைச் செயல்படுத்த ஆறு மாதங்களிலிருந்து ஒரு வருடம் போதும். ஒவ்வொரு தனி மனிதனுக்கும், அன்றாட வாழ்க்கையில் தேவைப்படும் பல்வேறு சான்றிதழ்களையும் ஒன்றிணைப்பதுதான் இந்தத் திட்டம். இது செயல்படுத்தப்பட்டால், எந்த அரசு அலுவலகத்துக்கும் செல்லாமல், இருந்த இடத்திலிருந்தே அனைத்துச் சான்றிதழ்களையும் பெறலாம். இந்தக் கனவை என்னால் சாத்தியப்படுத்த முடியவில்லை. நான் பணியில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு கர்நாடக தலைமைச் செயலாளர், இது தொடர்பாக என்னை அழைத்து மூன்று நாள்கள் வெபினார் நடத்தினார். ஐரோப்பிய நாடான எஸ்டோனியாவிலிருந்து என்னைத் தேடிவந்து பார்த்தார்கள்.’’

‘‘பாரத்நெட் திட்டத்தில் உங்களுக்கு நெருக்குதல்களைக் கொடுத்தது யார்?’’

‘‘இதைச் சொல்வது சரியாக இருக்காது என்று நினைக்கிறேன். பாரத்நெட் திட்டத்தில் நான் வெளியிட்ட டெண்டர் மிகச் சரியாக இருந்தது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் கடைசி மாநிலமாகத் தமிழ்நாடு இருக்கிறது. எனவே, மற்ற மாநிலங்களில் என்னென்ன செய்தார்கள் என்பதையெல்லாம் ஆராய்ந்து, துல்லியமாக டெண்டரை வெளியிட்டேன். அதன் பிறகு, `இதை மாற்று... அதை மாற்று’ எனச் சிலர் வந்தார்கள். எல்லாம் பணம்தான் காரணம்.’’

‘‘தமிழக அரசு நிர்வாகத்தை நீங்கள் குறை சொல்கிறீர்கள். ஆனால், சிறந்த நிர்வாகத்துக்காக மத்திய அரசிடமிருந்து தமிழக அரசு நிறைய விருதுகளைப் பெற்றிருக்கிறதே..?’’

‘‘நான் பணியிலிருந்த காலத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர்களை அழைத்து மாநாடு போடுவார்கள். அப்போது, சிறந்த ஆட்சியருக்கான விருதைச் சிலருக்குக் கொடுப்பார்கள். அவர்களைப் பார்க்கும்போது, `இந்த அதிகாரிக்கா விருது... அவர் ஊழல் பேர்வழி ஆச்சே?’ என்று எங்களுக்குள் பேசிக்கொள்வோம். அந்த ஆதங்கம் மனதுக்குள் இருக்கும். அப்படித்தான் இதுவும்.’’

‘‘சட்டசபைத் தேர்தலில் நீங்கள் போட்டியிட வாய்ப்பிருக்கிறதா?’’

‘‘நிச்சயமாக. மாற்றத்தை உருவாக்குவதற்கு அதிகாரம் தேவை. 25 வருடங்களாக அரசுப் பணியில் கிடைத்த அதிகாரத்தை நான் தவறாகப் பயன்படுத்தியதில்லை. என் மனைவியிடம் 10 சவரன் நகைக்கு மேல் எதுவும் இல்லை. கட்சிக்குள் எனக்கு நல்ல பொறுப்பை கமல் கொடுத்திருக்கிறார். நான் வேலை பார்த்த இடங்களிலேயே கிருஷ்ணகிரி, என் உயிருக்கு உயிரான இடம். அங்கு போட்டியிட வாய்ப்பு கிடைத்தால் உறுதியாகக் களமிறங்குவேன்.’’