Published:Updated:

''நானும் பத்திரிகையாளர்தான்'' -செய்தியாளர்களை திகைக்க வைத்த சரத்குமார்!

ராமநாதபுரத்தில் சரத்குமார்
ராமநாதபுரத்தில் சரத்குமார் ( உ.பாண்டி )

ரஜினி பற்றி பேச வேண்டுமானால் என்னுடைய வங்கிக் கணக்கில் 5 லட்ச ரூபாய் செலுத்த வேண்டும். நடிகர் ரஜினிகாந்த் கருத்துக்கெல்லாம் நான் பதில் கூற விரும்பவில்லை. அவரைப் பற்றி பேசினால் தொலைக்காட்சியில் டிஆர்பி எகிறும் என்பதாலேயே இதைப்பற்றி கேட்கிறார்கள்.

''ரஜினி பற்றி பேச வேண்டுமானால் என்னுடைய வங்கிக் கணக்கில் 5 லட்ச ரூபாய் செலுத்த வேண்டும்'' எனக் கூறிய சரத்குமார் ``நான் திருமண விழாவிற்கு வந்திருக்கிறேன். உங்களுக்கு பேட்டியளிக்க வரவில்லை" எனவும் கூறி செய்தியாளர்களை திகைக்க வைத்தார்.

திருமண விழாவில் சரத்குமார்.
திருமண விழாவில் சரத்குமார்.
உ.பாண்டி

ராமநாதபுரம் மாவட்ட சமத்துவ மக்கள் கட்சியின் பொறுப்பாளர் இல்ல திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்க அக்கட்சியின் தலைவர் சரத்குமார் ராமநாதபுரம் வந்திருந்தார். விழாவிற்கு தாமதமாக சரத்குமார் வந்த நிலையில், செய்தியாளர்கள் அவரை பேட்டி காண முற்பட்டனர். இதனால் ஆவேசம் அடைந்த சரத்குமார், ''நான் திருமண விழாவிற்காக வந்திருக்கிறேன். பேட்டி கொடுக்க வரவில்லை. நானும் பத்திரிகையாளன் தான். உங்களை யார் வரச்சொன்னது'' என ஆவேசப்பட்டவர், பின்னர் கூலாகி திரும்பி வரும் போது பேட்டி தருவதாக கூறி சென்றார்.

இதன் பின் அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர், ''தமிழகத்தைப் பொறுத்தவரை மிகப்பெரும் ஆளுமையான முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, முதல்வராக பொறுப்பேற்ற எடப்பாடி சிறப்பான முறையில் ஆட்சியை வழிநடத்திக் கொண்டிருக்கிறார். எனவே தமிழக அரசியலில் வெற்றிடம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

சரத்குமார் பேட்டி
சரத்குமார் பேட்டி
உ.பாண்டி

ரஜினி பற்றி பேச வேண்டுமானால் என்னுடைய வங்கிக் கணக்கில் 5 லட்ச ரூபாய் செலுத்த வேண்டும். நடிகர் ரஜினிகாந்த் கருத்துக்கெல்லாம் நான் பதில் கூற விரும்பவில்லை. அவரைப் பற்றி பேசினால் தொலைக்காட்சியில் டிஆர்பி எகிறும் என்பதாலேயே இதைப்பற்றி கேட்கிறார்கள். அனைவரும் சட்டத்தை மதிக்க வேண்டும். சிஏஏ சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒன்று. அதில் எந்த இடத்திலும் இஸ்லாமியர்கள் நாடு கடத்த படுவார்கள் என்று கூறப்படவில்லை. அவ்வாறு ஒன்றை கற்பனையாக பேசிவருகிறார்கள். அதிலுள்ள முழு கருத்தையும் உள்வாங்காமல் போராட்டம் நடத்துகிறார்கள். இந்த வாய்ப்பை பயன்படுத்தி திமுக போன்ற எதிர்க்கட்சிகள் அரசியல் நடத்தி வருகின்றனர்.

மேலும், சிஏஏ சட்டம் குறித்து இஸ்லாமியர்கள் ஒரு குழு அமைத்து முதல்வர், பிரதமர், உள்துறை அமைச்சரை சந்தித்து சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெறலாம். அதுவே அதற்கு சரியான தீர்வாகும். யூகத்தின் அடிப்படையில் போராட்டம் நடத்தி வருவது மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் செயலாகும். இந்தச் சட்டத்தில் சொல்லாத ஒரு விஷயத்தை திரும்பத் திரும்பக் கூறுவது சரியாகாது, பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு வரும் சூழ்நிலையில், போராட்டங்களை நடத்தி நம்மை நாமே தாழ்த்திக் கொள்வது முறையல்ல.

ராமநாதபுரத்தில் ஆவேசம் அடைந்த சரத்குமார்
ராமநாதபுரத்தில் ஆவேசம் அடைந்த சரத்குமார்
உ.பாண்டி

கள் இறக்குவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்பது அரசு எடுக்கும் முடிவு. நாட்டில் பரவி வரும் கொரனா வைரஸ் நோயில் இருந்து நம்மை காத்துக்கொள்ள பொதுமக்களாகிய நாம் முன் எச்சரிக்கையுடன் நடக்க வேண்டும். கைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும், அதிகம் கூட்டம் உள்ள நிகழ்வுகளில் கலந்து கொள்வதை தவிர்க்க வேண்டும். அது மட்டுமல்லாமல் பண்டயகால முன்னோர்கள் கலாச்சாரப்படி, யாரையும் சந்திக்கும்போது, காண்பவரை கையெடுத்து வணங்கினால், வைரஸ் பரவாமல் தடுக்க வாய்ப்பு உள்ளது'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு