Election bannerElection banner
Published:Updated:

`10 ஆண்டுகள் அ.தி.மு.க-வுக்காக உழைத்துவிட்டோம்; முதல்வர் வேட்பாளர் கமல்ஹாசன்!’ - சரத்குமார்

சரத்குமார்
சரத்குமார்

`கோவில்பட்டி தொகுதியில் முதன்மை துணைப் பொதுச்செயலாளர் ராதிகாவும், ராதாபுரம் தொகுதியில் நமது அரசியல் ஆலோசகர் லாரன்ஸும் போட்டியிடுவார்கள். எங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் கமல்தான்” என மேடையில் அதிரடியாக அறிவித்தார் சரத்குமார்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 6-வது பொதுக்குழுக் கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது. தலைவர் மற்றும் பொதுச்செயலாளராக சரத்குமாரும், பொருளாளராக சுந்தரேசனும் தேர்வு செய்யப்பட்டனர். மாநில மகளிரணிச் செயலாளரான ராதிகா சரத்குமாருக்கு கூடுதலாக மாநில முதன்மை துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. முந்தைய பொதுக்குழுவில் நியமிக்கப்பட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் அதே பதவியில் தொடர்வதாக தலைவர் சரத்குமார் அறிவித்தார். முதலில் மைக் பிடித்த தலைமை நிலையச் செயலாளரும், மாநில மகளிரணிச் செயலாளருமான பாகீரதி, ``தமிழகத்தில் மக்களுக்கு எதிரான பிரச்னைகளுக்கு முதலில் குரல் கொடுத்தவர் சரத்குமார்தான்.

சரத்குமார்
சரத்குமார்

இதே தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் 100 நாள்கள் போராட்டம் நடத்தினார்கள். ஆலைக்கு எதிராகப் போராட்டம் நடத்திய குமரெட்டியாபுரம் கிராமத்துக்கு முதலில் சென்று மக்களுக்குத் தன் ஆதரவைத் தெரிவித்தவர் நம் தலைவர்தான். `இந்த ஸ்டெர்லைட் ஆலையால சுற்றுச்சூழலும் நிலத்தடி நீரும் கடுமையாப் பாதிக்கப்பட்டிருக்கு. இந்தத் தண்ணீரைத்தான்யா நாங்க குடிக்கிறோம்’ என ஒரு பெண் அப்பகுதிக் கிணற்றிலிருந்து தண்ணீரை எடுத்துவந்து சரத்குமாரிடம் காட்டியபோது ஒரு நொடிகூட யோசிக்காமல் அந்தத் தண்ணீரை எடுத்துக் குடித்து ஆதரவு தெரிவித்தார்.

அதற்குப் பிறகுதான் மற்ற தலைவர்கள் அந்தக் கிராமத்துக்குப் படை எடுத்தனர். மக்களுடன் இணைந்து களப் போராட்டம் நடத்திவரும் தலைவர் அவர். சீதையிடம் அனுமன் தூது சென்று, `உங்களைக் காப்பாற்ற நான் வந்திருக்கிறேன்’ என அனுமன் சொன்னதும், `நீயா என்னைக் காப்பாற்றப் போகிறாய்?’ என சீதை ஏளனமாகச் சொன்னதைக் கேட்டு அனுமன் தன் விஸ்வரூபத்தைக் காட்டினாராம். அதன் பிறகே சீதாதேவி அனுமனை நம்பினாராம். அதைப்போல, ச.ம.க-வுடன் தற்போது ஐ.ஜே.கே இணைந்திருக்கிறது. இன்னும் சில கட்சிகள் இணையவிருக்கின்றன. இந்தக்கூட்டணியைச் சிலர் குறைத்து மதிப்பிடுகிறார்கள். பார்ப்பதற்கு சின்னக் கூட்டணியாக இருந்தாலும், மகத்தான வெற்றியைப் பெறும்” என்றார்.

ராதிகா சரத்குமார்
ராதிகா சரத்குமார்

தொடர்ந்து பேசிய முதன்மை துணைப் பொதுச்செயலாளர் ராதிகா சரத்குமார், ``தூத்துக்குடியை முத்துக் குளிக்கும் நகரம்னு சொல்லுவாங்க. கடலில் மூழ்கி முத்தெடுப்பது சாதாரண காரியமா? அதில், முத்து எடுப்பவர்களின் முயற்சி தெரிகிறது. ஆளாளுக்கு, `நான்தான் முதல்வர் வேட்பாளர்’ எனச் சொல்கிறார்கள். ஆனால், எந்தப் பதவிக்கும் ஆசைப்படாதவர் சரத்குமார். கட்சியெல்லாம் வேண்டாமென்று சொல்லிவிட்டு அவருக்கு சினிமாவுல நடிக்கத் தெரியாதா? இல்லை, சிலர் மாதிரி உடல்நிலை சரியில்லைன்னு சொல்லிட்டு வீட்ல உட்காரத் தெரியாதா? மக்களுக்கு நல்லது செய்யணும்னுதான் தொடர்ந்து களத்தில் நிற்கிறார்.

டி.வி சீரியல் தொடர்களில் கவனம் செலுத்திவந்த நான், சரத்குமாரின் அரசியல் பயணத்துக்குத் தோள் கொடுக்கும்விதமாக, சீரியல்களை ஒதுக்கிவைத்துவிட்டு முழுநேரமாக அரசியலில் கவனம் செலுத்த முடிவு செய்துவிட்டேன். அதனால், மகளிரணிச் செயலாளராக இருந்த எனக்கு முதன்மை துணைப் பொதுச்செயலாளராக கூடுதல் பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. தலைவி இல்லாத ஒரு கட்சி, மகனுடன் இணைந்து கட்சி நடத்தும் ஒரு கட்சி என இரண்டு கட்சிகள்தான் தமிழகத்தை மாறி மாறி ஆண்டுவருகின்றன. மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அனைவருக்குமான மாற்றத்தை அளிப்பதுதான் எங்கள் கூட்டணியின் நோக்கம். இரண்டு திராவிடக் கட்சிகளுமே பணத்தை மட்டும் நம்பித்தான் இந்தத் தேர்தலைச் சந்திக்கின்றன.

சரத்குமாருக்கு வாள் பரிசளிப்பு
சரத்குமாருக்கு வாள் பரிசளிப்பு

ஆனால், நாங்கள் மக்களை மட்டும் நம்பி களம் இறங்குகிறோம். `கோவில்பட்டி அல்லது வேளச்சேரி தொகுதியில் நீங்கள் போட்டியிட வேண்டும்’ என நிர்வாகிகள் என்னிடம் விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். தலைவர் கட்டளையிட்டால் எந்தத் தொகுதியிலும் நின்று தேர்தலைச் சந்திக்கத் தயார்” என்றார்.

இறுதியாகப் பேசிய சரத்குமார், ``மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் கொடுத்த வாக்கின்படி கடந்த 10 ஆண்டுக்காலம் அ.தி.மு.க கூட்டணியில் நாம் இருந்தோம். அவரது மறைவுக்குப் பிறகு அந்தக் கட்சிக்குள் நடப்பவற்றை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இருப்பினும், கூட்டணி தர்மத்துக்காக அமைதி காத்தோம். இந்தத் தேர்தலில் ஒன்றிரண்டு சீட் கொடுத்தால் கூட்டணியில் இருக்க மாட்டோம் என ஏற்கெனவே கூறியும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. ரெண்டு சீட் கொடுத்தால் போதும், அ.தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்துவிடுவார். நாம ஈஸியா ஜெயிச்சுடலாம் என நம்மைக் குறைத்து மதிப்பிட்டுவிட்டார்கள்.

சரத்குமார்
சரத்குமார்

10 ஆண்டுகள் அந்தக் கட்சிக்காக உழைத்துவிட்டோம். ஆனால். நமக்கான உரிய மரியாதை தற்போது அங்கு இல்லை. நான் தேர்தல் பிரசாரம் செய்திருக்காவிட்டால் தற்போது அ.தி.மு.க அமைச்சரவையில் இருக்கும் 15 பேர் எம்.எல்.ஏ-கூட ஆகியிருக்க முடியாது. மக்களைச் சந்திக்க அவ்வளவு பயந்து நடுங்கியவர்கள் அவர்கள். சில தொகுதிகளில் அவர்களை உள்ளேகூட அனுமதிக்கவில்லை. இன்று எல்லாவற்றையும் மறந்துவிட்ட சுயநலவாதிகள் அவர்கள். அதனால்தான் அ.தி.மு.க கூட்டணியிலிருந்து வெளியேறினோம். தி.மு.க மட்டும் விதிவிலக்கா என்ன? அரசு அதிகாரிகள் முதல் யாரையும் மதிக்காத ஒரு கட்சி என்றால் அது தி.மு.க-தான்.

13 ஆண்டுகளாக மக்களுடன் களத்தில் நிற்கும் சமத்துவ மக்கள் கட்சியின் செல்வாக்குதான் என்ன என மக்களிடம் தெரிந்துகொள்ளும்விதமாக இந்தத் தேர்தலைச் சந்திப்பதாகவும் முடிவெடுத்தோம். அந்த நேரத்தில் ஐ.ஜே.க கட்சியின் தலைவர் பச்சமுத்துவும் நம்முடன் இணைந்து ஆதரவு அளித்திருக்கிறார். மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனைச் சந்தித்துப் பேசினோம். மக்களுக்கு மாற்றத்தை அளிக்கும்விதமாகவும், கொள்கைரீதியாகவும் நம் கூட்டணியில் இணைவதாகச் சம்மதம் தெரிவித்திருக்கிறார். இன்னும் சில கட்சிகளும் நம்முடன் இணைய விருப்பம் தெரிவித்திருக்கின்றன. பேச்சுவார்த்தையும் தொடர்கிறது. விரைவில் மகத்தான வெற்றிக் கூட்டணி அமையும்.

கூட்டத்தில் கலந்துகொண்ட தொண்டர்கள்
கூட்டத்தில் கலந்துகொண்ட தொண்டர்கள்

இதில், இன்று கட்சி ஆரம்பித்தவர், நேற்று கட்சி ஆரம்பித்தவர் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. நான் எந்தப் பதவிக்கும் ஆசைப்படவில்லை. எங்கள் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் என்றால் அது நண்பர் கமல்ஹாசன்தான். 234 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணியைச் சேர்ந்த வேட்பாளர்கள் களமிறங்குவது உறுதி. ச.ம.க-வைப் பொறுத்தவரையில் 147 விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன. பரிசீலனை, நேர்காணல் முடிந்த பிறகு வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். நான் கட்டளையிட்டால், இந்தத் தேர்தலில் போட்டியிடுவேன் என ராதிகா சொன்னார். `இந்தத் தேர்தலில் அவர் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவார்’ என கூறிக்கொள்கிறேன். அத்துடன், நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் ச.ம.க சார்பில், நம் அரசியல் ஆலோசகர் லாரன்ஸ் போட்டியிடுவார்” என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு