Published:Updated:

சிகிச்சையா... மிரட்டலா... எப்படி இருக்கிறார் சசிகலா?

சசிகலா
பிரீமியம் ஸ்டோரி
News
சசிகலா

- இரா.சரவணன்

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை அறிவிக்கப்பட்டு, சசிகலா சிறைக்குச் சென்ற நேரம். சென்னையிலிருந்து கிளம்பிய கார் ஆம்பூரை நெருங்க, ஆண்களும் பெண்களுமாகக் கூட்டம் சசிகலாவின் காரை மறித்தது. கட்சிக்காரர்கள் என நினைத்து சசிகலா காரை நிறுத்தச் சொல்லி, கண்ணாடியை இறக்கினார். அவ்வளவுதான். “கொலைகாரி… கொள்ளைக்காரி… நீ நல்லா இருப்பியா?” எனக் கடுமையான வசவுகள். சுதாரித்து, காரைக் கிளப்பினார் டிரைவர்.

அடுத்த சில மாதங்கள் கழித்து எம்.நடராஜன் சிகிச்சையில் இருந்தபோது, பரோலில் சென்னை வந்தார் சசிகலா. சில நிமிடச் சந்திப்பில் ஆம்பூர் சம்பவத்தை அவரிடம் சொல்லி, “ஜெயலலிதாவின் மரணத்துக்கு நீங்கதான் காரணம்னு மக்கள் நினைக்கிறாங்க. அதைத் தெளிவுபடுத்தலைன்னா, காலத்துக்கும் உங்க மீதான களங்கம் மாறாது. ஆம்பூரில் மக்கள் திட்டுனதுக்கும் அதுதான் காரணம்” என்றேன்.

“ஆம்பூர்ல திட்டுனதை ஏன் விமர்சனமா எடுத்துக்குறீங்க? அம்மா மேல அவங்கவெச்சிருக்கிற பாசமா பார்க்க வேண்டியதுதானே… அம்மா இறந்த வேதனையை அவங்களால தாங்கிக்க முடியலை. அந்தப் பதற்றத்துல என்னையத் திட்டுறாங்க. அதை நான் தாங்கித்தான் ஆகணும். மக்களோட மனநிலைக்கு நாம ஒத்துப்போகணும். ஒருநாள் அவங்களுக்கே உண்மை புரியும்” என்றார் சசிகலா. உண்மைதான்... பரோல் முடிந்து சசிகலா பெங்களூரு சிறைக்குத் திரும்பினார். நானும் காரில் பின்தொடர்ந்தேன். அதே ஆம்பூர். மக்கள் திரண்டிருந்தார்கள். காரை நிறுத்தினார் சசிகலா. ஊசி, பாசிமணி விற்கும் பெண்கள், முஸ்லிம் மக்கள் எனப் பெருங்கூட்டம். அத்தனை பேரும் சசிகலாவுக்கு ஆறுதலாகப் பேசினார்கள்.

சிகிச்சையா... மிரட்டலா... எப்படி இருக்கிறார் சசிகலா?

ஆம், மக்களின் மனதை சசிகலா சரியாகக் கணித்துவைத்திருந்தார். நான்கு வருட இடைவெளி, தன்மீதான தவறான பிம்பங்களை உடைக்கும்; வெளியே வருகிறபோது பெரிய எழுச்சி உருவாகும் என்று நம்பினார் அவர். ஆனால், விடுதலைக்குச் சில நாள்களே இருந்த நிலையில், திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

சிறையிலும்கூட கடந்த நான்கு வருடங்களை சசிகலா தைரியமாக எதிர்கொண்டார். சிறைக்குச் சென்ற சில நாள்களிலேயே, ‘பாதுகாப்பு காரணங்களைச் சொல்லி தமிழ்நாடு சிறைக்கு மாறிக்கொள்ளலாம். தமிழக அரசின் சார்பில் அதற்கான ஏற்பாடுகளைப் பார்க்கச் சொல்லலாம்’ என முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொல்லி அனுப்ப, அதை மறுத்தார் சசிகலா. “தமிழ்நாட்டுச் சிறைக்கு நான் மாறினால், சொகுசாக வாழ்வதாக மக்கள் எண்ணுவார்கள். அம்மா இருந்த பெங்களூரு சிறையிலேயே இருக்கத்தான் எனக்கு விருப்பம்” என்றார்.

நான்கு வருடச் சிறை வாழ்வில் இரண்டு முறைதான் பரோலில் வெளியே வந்தார் சசிகலா. எம்.நடராஜன் மறைவுக்கு 15 நாள்கள் பரோல் கிடைத்தும், பத்தாவது நாளிலேயே சிறைக்குக் கிளம்பினார். அதேபோல அடிக்கடி மருத்துவமனையில் தங்கி ஓய்வெடுக்கவும் சசிகலாவுக்கு வாய்ப்பு இருந்தது. வழக்கறிஞர்கள் அதுகுறித்துச் சொன்னபோதும் தவிர்த்தார் சசிகலா. விடுதலைக்கான காலமும் நெருங்கியது...

‘அ.தி.மு.க-வுடன் இணக்கமாகச் செல்வாரா, அ.ம.மு.க-வை தனித்துப் போட்டியிடவைப்பாரா?’ என்கிற கேள்விகளுக்கெல்லாம் ஜனவரி 27-ம் தேதி விடை கிடைக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நேரத்தில், மூச்சுத்திணறல் என பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார் சசிகலா. விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட பிறகு அவரது உடல்நிலை தேறிவருகிறது. நடக்கிறார், பேசுகிறார் என மருத்துவமனைத் தரப்பு தினமும் தகவல் தருகிறது. ஆனாலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல் நாள் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது எனப் புரியாமல் அவர் திண்டாடிப்போனது உண்மை.

உறவினர்கள் யாரும் அனுமதிக்கப் படாததால் சசிகலாவுக்கு திக்கற்ற நிலை. டி.டி.வி.தினகரன் அனுமதிக்கப்படாத நிலையில் மருத்துவர்கள் சிவகுமார், வெங்கடேஷ் இருவரும், “நாங்க டாக்டர்ஸ்… சின்னம்மாவுக்கு என்ன சிகிச்சை கொடுக்குறாங்கன்னு நாங்க பார்க்கணும்” என்று போராடினார்கள். அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் எனப் பலரிடமும் போராடிக்கொண்டிருந்தார் சசிகலாவின் அண்ணன் மகன் விவேக். “சி.டி ஸ்கேன் எடுத்தால்தான் கொரோனா தொற்றை அறிய முடியும். அதற்கு ஏற்பாடு செய்யுங்கள்” என நெடுநேரம் போராடிய பிறகுதான் விக்டோரியா மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார் சசிகலா. உறவினர்களைப் பார்த்து கையசைத்தாலும், தன் விடுதலைக்கு எதிராக ஏதோ நடக்கிறதோ என்கிற எண்ணம் சசிகலாவைத் திணறடித்தது.

“சிறையிலிருந்து சசிகலா ஷாப்பிங் சென்றார் என்ற குற்றச்சாட்டு விசாரிக்கப்பட்டு, அது உண்மையற்ற தகவல் என அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. கன்னடம் உள்ளிட்ட பிற மொழிகளைக் கற்பது உள்ளிட்ட விஷயங்களில், சசிகலாவுக்கு நல்ல பெயர் கிடைத்தது. அதனால், நன்னடத்தை விதிகளின்படி அவர் விடுதலை செய்யப்படாதது சட்ட மீறல். ஜனவரி 27-ம் தேதிதான் விடுதலை என சிறைத்துறை சொன்னபோது, ‘இது அநியாயம். நியாயமாக எனக்குக் கிடைக்க வேண்டியதைத் திட்டமிட்டு தடுக்குறீங்க. நான் வெளியே போன பிறகு, கர்நாடக சிறைத்துறைமீது நிச்சயம் வழக்கு தொடர்வேன்’ என்று சிறைத்துறை அதிகாரிகளிடமே சசிகலா சொன்னார்.

அதேநேரம், மிகுந்த கவனத்தோடும் பாதுகாப்போடும் இருந்தார். கொரோனா தீவிரமாக இருந்த காலகட்டத்திலேயே தொற்றுப் பரவிவிடாமல் இருக்க துளசித் தண்ணீர், சுடு தண்ணீரைத்தான் பயன்படுத்தினார். அதிகம் யாருடனும் பேசாமல் தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டார். சிறை உணவுகளைச் சாப்பிடும்போதும் கவனமாக இருந்தார். ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு தனக்கு வரும் கடிதங்களைத் தொடுவதில்கூட எச்சரிக்கையாக இருந்தார். சிறையில் ஆண்கள் வார்டில் சிலருக்கு கொரோனா பரவியிருந்தாலும், பெண்கள் வார்டில் யாருக்கும் கொரோனா பரவவில்லை. இப்படியான சூழலில் சசிகலாவுக்கு எப்படி கொரோனா வந்தது என்பதுதான் பெரும் கேள்வி. ஐந்து நாள்களாக சசிகலாவுக்குக் காய்ச்சல் இருந்த நிலையில், ஏன் முதலிலேயே அவர் சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை? அவர் மயங்கிய நிலையில்தான் சிறை மருத்துவமனைக்கே கொண்டுசெல்லப்பட்டிருக்கிறார். உறவினர் களுக்கும் தாமதமாகத்தான் இது குறித்த தகவல் சொல்லப்பட்டிருக்கிறது. திடீர் கொரோனா தொற்றும், மூன்று மருத்துவமனைகளுக்கு அலைக்கழிக்கப்பட்டதும், உறவினர்களுக்கான கெடுபிடிகளும் நிறைய சந்தேகங்களைக் கிளப்புகின்றன” என்று சொல்லும் பரப்பன அக்ரஹாரா புள்ளிகள், இன்னொரு முக்கிய விஷயத்தையும் குறிப்பிட்டுச் சொல்கிறார்கள்.

சிகிச்சையா... மிரட்டலா... எப்படி இருக்கிறார் சசிகலா?

“நன்னடத்தை உள்ளிட்ட விஷயங்களை வைத்து சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து ஒரு வருடத்துக்கு முன்பே பேச்சுவார்த்தை நடந்தது. ‘ரிலீஸான பிறகு அரசியல் செய்யக் கூடாது. பிசினஸ் வேலைகளை மட்டும் பார்த்துக்கொண்டு அமைதியாக ஒதுங்குவதாக உத்தரவாதம் கொடுத்தால், முன்கூட்டிய விடுதலை சாத்தியப்படும்’ எனச் சசிகலாவுக்குச் சொல்லப்பட்டது. அப்படிப்பட்ட விடுதலையே தனக்குத் தேவையில்லை எனச் சொல்லிவிட்டார் சசிகலா. அவருடைய உறுதியை உடைக்க எத்தகைய முயற்சிகளையும் அதிகாரவர்க்கங்கள் செய்யும்” என்கிறார்கள் அழுத்தமாக.

கொரோனா ஒருவருக்கு வந்தால், யார் மூலமாகத் தொற்றியது என்பதை விசாரிப்பார்கள். சசிகலாவுக்கும் இளவரசிக்கும் யார் மூலமாகத் தொற்று வந்தது என்று இதுவரை தெரியவில்லை. ஜனவரி 27-ம் தேதி சசிகலாவை வரவேற்க மிகப்பெரிய அளவில் நடந்த ஏற்பாடுகளைச் சிலர் விரும்பவில்லை. பெரிய அளவில் வரவேற்பு இருந்தால், அவரைச் சந்திக்க சில அமைச்சர்களே போனாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்கிற நிலையில்தான் ‘சசிகலாவுக்கு கட்சியில் 100 சதவிகிதம் இடம் இல்லை’ என்று பேட்டி கொடுத்தார் எடப்பாடி பழனிசாமி. ஜெயலலிதா நினைவிடத் திறப்புவிழாவையும் ஜனவரி 27-ம் தேதி என அறிவித்தார். இப்படி சசிகலாவின் வருகை பெரிய அளவில் கவனத்தை ஈர்த்துவிடக் கூடாது என்பதில் சிலர் தெளிவாக இருந்தார்கள்.

“ஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலை செய்யப்படுவது உறுதி. ஆனாலும், அன்றைய தினம் அவர் விடுதலையாவாரா என்று தெரியவில்லை. தொற்று குணமாகவில்லை எனச் சொல்லி இன்னும் சில நாள்கள் சசிகலா பெங்களூருவிலேயே தங்கவைக்கப்படலாம். ‘சாதாரணமாக நடந்ததா, திட்டமிட்டு நடத்தப் பட்டதா’ என்கிற குழப்பத்தில் இருக்கும் சசிகலாவிடம் மறுபடியும் அதிகாரவர்க்கம் பேச்சுவார்த்தை நடத்தி பணியவைக்கப் பார்க்கும். சசிகலா பணிவாரா, துணிவாரா என்பதுதான் ட்விஸ்ட்!” என்கிறார்கள் டெல்லி தொடங்கி தமிழகம் வரை நீளும் அரசியலை அறிந்தவர்கள்.

விக்டோரியா மகாராணியாக அரசியல் செய்யத் துடித்த சசிகலாவை, விக்டோரியா மருத்துவமனையில் படுக்கவைத்திருக்கிறது விதி.