
- அடித்துச் சொல்கிறார் ராஜா செந்தூர்பாண்டியன்
‘அ.தி.மு.க-வில் சேர்ப்பதற்கு 100 சதவிகிதம் வாய்ப்பில்லை!’ என்றதில் ஆரம்பித்து ‘அம்மா நினைவகம் மூடல்’ வரை ஆளுங்கட்சியின் அதிரடிகளை எதிர்கொள்ளத் தயாராகிவிட்டார் சசிகலா. இந்தநிலையில், ‘சசிகலாவின் அரசியல் மறுபிரவேசம்’ குறித்த சட்டரீதியான கேள்விகளுக்கு விடை கேட்டு அவரின் வழக்கறிஞரான ராஜா செந்தூர்பாண்டியனிடம் பேசினோம்...
‘‘2017-ம் ஆண்டே கட்சியிலிருந்து பதவிநீக்கம் செய்யப்பட்ட சசிகலாவை, தற்போதும் ‘அ.தி.மு.க-வின் தற்காலிகப் பொதுச்செயலாளராக நீடிக்கிறார்’ என்று எப்படிச் சொல்கிறீர்கள்?’’
‘‘21.08.2017-லிருந்தே சசிகலா, டி.டி.வி.தினகரன் மற்றும் 18 எம்.எல்.ஏ-க்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளை நான்தான் நடத்திவருகிறேன். இந்த வழக்கு விவரங்கள், வாதங்கள், ஆவணங்களில் எந்தவோர் இடத்திலும் அ.தி.மு.க-விலிருந்து சசிகலாவைப் பதவிநீக்கம் செய்துவிட்டதாகச் சொல்லப்படவில்லை. உதாரணத்துக்கு, 12.09.2017 அன்று நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழுவிலும் கூட, ‘நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா மட்டும்தான். எனவே, அந்தப் பதவியை நாங்கள் ரத்து செய்துவிடுகிறோம்’ என்றுதான் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். மற்றபடி அந்தத் தீர்மானத்தின் எந்தவோர் இடத்திலும் ‘சசிகலாவைப் பதவிநீக்கம் செய்கிறோம்’ என்று சொல்லவே இல்லை.’’

‘‘2017-க்குப் பிறகு, அ.தி.மு.க உறுப்பினர் அட்டையையே சசிகலா புதுப்பிக்கவில்லை என்கிறார்களே?’’
‘‘12.09.2017-க்குப் பிறகு அச்சடிக்கப்பட்ட ‘ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்’ தலைமையிலான புதிய உறுப்பினர் அட்டையை சசிகலா வாங்கவில்லை என்பதுதான் அவர்களது வாதம். அ.தி.மு.க விதிகளின்படி பொதுச்செயலாளர் மட்டும்தான் பொதுக்குழுவையே கூட்ட முடியும். அதனால்தான், ‘12.09.2017 அன்று கூட்டப்பட்ட பொதுக்குழுவே செல்லாது’ என்று சென்னை உயர் நீதிமன்றத்தில், சசிகலா வழக்கு தொடர்ந்திருக்கிறார். பொதுக்குழுவே செல்லாது எனும்போது, அந்தப் பொதுக்குழுவால் உருவாக்கப்பட்ட உறுப்பினர் அட்டை எப்படிச் செல்லுபடியாகும்?’’
‘‘அப்படியென்றால், ‘ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளே செல்லாது’ என்கிறீர்களா?’’
‘‘நிச்சயமாக! கடந்த காலத்தில், தி.மு.க பொதுக்குழுவால் எம்.ஜி.ஆர் தூக்கியெறியப்பட்டார். வெளியே வந்த எம்.ஜி.ஆர்., ‘கட்சியின் தொண்டர்கள் அனைவரும் நமக்கு ஆதரவாக இருக்கும்போது, கட்சிப் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆயிரம் பேர் கூடி நம்மை இப்படி வெளியேற்றி விட்டார்களே...’ என்று வருந்தினார். எனவேதான், அவர் உருவாக்கிய புதிய கட்சியான அ.தி.மு.க-வின் விதிகளில், ‘கட்சியின் பொதுச்செயலாளரை தொண்டர்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்’ என்ற அம்சத்தை உருவாக்கினார். ஜெயலலிதாவும் அந்த விதியை உறுதியாகக் கடைப்பிடித்துவந்தார். ஆனால், 2017-ல் இவர்கள் கட்சி விதிகளுக்குப் புறம்பாக பொதுக்குழுவைக் கூட்டியதுடன், பொதுச்செயலாளர் பதவியையும் ரத்து செய்தனர்; இவர்களாகவே ‘ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்’ எனப் புதிய பதவிகளையும் உருவாக்கிக்கொண்டனர். அப்படி உருவாக்கிக்கொண்ட பதவிகளைக்கூட கட்சியின் தொண்டர்கள் தேர்ந்தெடுக்காமல் பொதுக்குழுவே தேர்ந்தெடுத்ததுபோல் மாற்றம் செய்துள்ளனர். இவை அனைத்துமே கட்சி விதிகளுக்கு மாறானவை. அவை ஒருபோதும் செல்லுபடியாகாது.’’
‘‘ஆனால், 2016-ல் தற்காலிகப் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்றுக்கொண்ட சசிகலாவையும்கூட தொண்டர்கள் தேர்ந்தெடுக்கவில்லையே?’’
‘‘உண்மைதான்... ஆனால், இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படும் மரபு, ஜெயலலிதா காலத்திலேயே இருந்ததுதான். 1989-ல் ‘ஜெ, - ஜா.’ என இரண்டு அணிகளாகக் கட்சி பிளவுபட்டபோது, ‘இடைக்காலப் பொதுச்செயலாளராக’ ஜெயலலிதாதான் இருந்திருக்கிறார். இதையெல்லாம் நான்கூடச் சொல்லவில்லை. கடந்த 2016-ம் ஆண்டு மதுசூதனனே சத்தியப் பிரமாண வாக்குமூலமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அதாவது, ‘சசிகலா இடைக்காலப் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது... அது மரபு இல்லை’ என சசிகலா புஷ்பா 2016-ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர, ‘இது ஜெயலலிதா இருந்த காலத்திலேயே பின்பற்றப்பட்ட நடைமுறைதான்; எனவே, விதிமீறல் எதுவும் இல்லை’ என்று மதுசூதனன் தரப்பில் தெரிவிக்கப்பட்டு, நீதிமன்றமும் அதை ஏற்றுக்கொண்டிருக்கிறது.’’

‘‘அதேசமயம், இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் தலைமையிலான அ.தி.மு.க-வுக்குத்தானே இரட்டை சிலைச் சின்னத்தைப் பயன்படுத்தும் உரிமையைத் தேர்தல் ஆணையம் வழங்கியிருக்கிறது?’’
‘‘அ.தி.மு.க பெயரையும், இரட்டை இலைச் சின்னத்தையும் பயன்படுத்தும் உரிமை மதுசூதனன் தலைமையிலான அணிக்கு வழங்கப்படுகிறது என்றுதான் தேர்தல் ஆணையம் சொல்லியிருக்கிறது. அதாவது, ‘கட்சியின் பெயர் மற்றும் சின்னத்துக்காக இரண்டு அணிகள் உரிமை கோரிய வழக்கில், எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் அதிக எண்ணிக்கையிலுள்ள அணிக்கு உரிமையைக் கொடுக்கிறோம். மற்றபடி பொதுச்செயலாளர் பதவி உள்ளிட்ட உட்கட்சி விவகாரங்களில் நாங்கள் தலையிட முடியாது’ என்றுதான் தேர்தல் ஆணையம் சொல்லியிருக்கிறது. எனவே, ‘கட்சியின் பெயரும் சின்னமும் யாருக்குச் சொந்தம்?’ என்ற வழக்கு இன்னும் நிலுவையில்தான் இருக்கிறது. அடுத்ததாக, ‘அ.தி.மு.க-வின் மொத்தப் பொறுப்பும் யாருக்குச் சொந்தம்?’ என்ற க்யூரேட்டிவ் மனுவையும் (குறையைச் சீராக்கும் மனு) விரைவில் உச்ச நீதிமன்றத்தில் சசிகலா தாக்கல் செய்யவிருக்கிறார்.’’
‘‘வருகிற சட்டமன்றத் தேர்தலுக்குள்ளாக நீங்கள் எதிர்பார்க்கிற மாற்றங்களையெல்லாம் செய்துவிட முடியுமா?’’
‘‘நீதிமன்றம் அதி முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் எனக் கருதும் சூழலில், வழக்குகள் விரைவாக நடத்தப்பட்டு தீர்ப்புகள் வழங்கப்படும். அது இப்போதுள்ள சூழ்நிலையில் தேர்தலுக்கு முன்பாகவே நடப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன. அதுவரை, ‘இடைப்பட்ட காலத்தில் மக்களைப் பார்க்கக் கூடாது; அரசியல் பணி செய்ய முடியாது’ என சசிகலாவை யாரும் தடுத்துவிட முடியாது!’’