Published:Updated:

`அதிமுக பொதுச்செயலாளர்’... அரசு அங்கீகரிக்குமா? - தேவர் குருபூஜை விழாவுக்கு அனுமதி கேட்கும் சசிகலா

தேவர் குருபூஜைக்கு வரும் மக்கள் மத்தியில் சசிகலாவுக்கென்று செல்வாக்கு இருக்கிறது. தேவர் நினைவிடத்துக்குத் தொடர்ந்து ஜெயலலிதா வந்ததற்குக் காரணம் சசிகலா என்றும் சொல்லப்படுகிறது

அதிமுக பொதுச்செயலாளர் என்று வி.கே.சசிகலாவை அங்கீகரிப்பதா, நிராகரிப்பதா என்பதை முடிவு செய்யும் நிலை ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்துக்கு ஏற்பட்டிருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சசிகலா
சசிகலா

பெங்களூர் சிறையிலிருந்து வெளிவந்த பின்பு பரபரப்பாகப் பார்க்கப்பட்டு, சில நாள்களில் அரசியலைவிட்டு ஒதுங்குவதாக அறிவித்த சசிகலா, தற்போது மீண்டும் அரசியல் அவதாரம் எடுத்திருப்பது அதிமுக-வினருக்குள் சலசலப்பை உண்டாக்கியிருக்கிறது.

`திமுக, சசிகலாவுக்கு உதவி செய்கிறது!' - ஜெயக்குமார் குற்றச்சாட்டு சரிதானா?

சமீபத்தில் அதிமுக பொன்விழாவை முன்னிட்டு ஜெயலலிதா நினைவிடத்துக்கு அஞ்சலி செலுத்தத் தன் ஆதரவாளர்களுடன் சென்ற சசிகலா, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அதிமுக கொடியை ஏற்றிவைத்தார். அது மட்டுமில்லாமல் `வி.கே சசிகலா, அதிமுக பொதுச்செயலாளர்’ என்று பொறிக்கப்பட்ட கல்வெட்டையும் திறந்துவைத்தார்.

பசும்பொன் விழாவில் சசிகலா கலந்துகொள்ள விண்ணப்பம்
பசும்பொன் விழாவில் சசிகலா கலந்துகொள்ள விண்ணப்பம்

இது அதிமுக தலைமையை உசுப்பிவிட்டது. முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகத்தைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியும் சசிகலாவை விமர்சித்துப் பேசியிருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிலையில், அதிமுக உறுப்பினராகக்கூட இல்லாத சசிகலா, கட்சியினரிடம் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் தன்னை அதிமுக-வின் பொதுச் செயலாளர் என்று கூறுவதைத் தடுக்கும் வகையில் அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று காவல்துறையிடம் ஜெயக்குமார் புகார் கொடுத்திருபது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதை எதிர்கொள்ளவும் சசிகலா தயாராகிவிட்டார் என்று சொல்லப்படுகிறது.

 எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இந்தப் பரபரப்புக்கிடையில் பசும்பொன்னில் இந்த மாத இறுதியில் நடைபெறும் தேவர் குருபூஜை 29-ம் தேதி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நேரம் ஒதுக்கும்படி அதிமுக நிர்வாகி முதுகுளத்தூர் காட்டுராஜா சார்பில், ராமநாதபுரம் கலெக்டரிடம் விண்ணப்பிக்கப்பட்டிருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. காரணம், அந்த விண்ணப்பத்திலும் சசிகலாவை `அதிமுக பொதுச்செயலாளர்’ என்று குறிப்பிட்டிருப்பதுதான்.

அரசியல் கட்சிகள் தங்கள் இருப்பையும், செல்வாக்கையும் காட்ட தென் மாவட்டத்தில் நடைபெறும் முக்கிய நிகழ்வான தேவர் குருபூஜைக்கு அனைத்துக் கட்சிகளும் கலந்துகொள்ளும். அதிலும் அதிமுக ஆட்சியில் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா தொடர்ந்து கலந்துகொண்டார். அவரைத் தொடர்ந்து ஓபிஎஸ், எடப்பாடியும் கலந்துகொண்டார்கள்.

பொதுச்செயலாளர் சசிகலா என்று குறிப்பிட்டிருக்கும் விண்ணப்பம்
பொதுச்செயலாளர் சசிகலா என்று குறிப்பிட்டிருக்கும் விண்ணப்பம்

இந்த ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் கலந்துகொள்கிறார்கள்.

கொரோனா கட்டுப்பாட்டால் இந்த ஆண்டும் பொதுமக்கள் கூட்டமாகக் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள், அமைப்புகள் அஞ்சலி செலுத்தும் வகையில் அவர்களின் விண்ணப்பத்தைப் பரிசீலித்து நேரம் ஒதுக்குவது ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தின் முக்கியப் பணியாகும்.

இந்த நிலையில்தான் 29-ம் நடக்கும் நிகழ்ச்சியில் சசிகலா அஞ்சலி செலுத்த நேரம் ஒதுக்க விண்ணப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த விண்ணப்பத்தின் அடிப்படையில் அவருக்கு அனுமதி அளித்தால் அவர் அதிமுக பொதுச்செயலாளர் என்பதை அரசு ஏற்றுக்கொண்டதாகிவிடும். இதை எடப்பாடி தரப்பு எதிர்க்கும். அதேநேரம், ஏற்க மறுத்தால் மற்ற தலைவர்களை குருபூஜைக்கு அனுமதிக்கும்போது, ஏற்கெனவே ஜெயலலிதாவுடன் பலமுறை பசும்பொன் வந்திருக்கும் சசிகலாவுக்கு மட்டும் அனுமதி மறுப்பது ஏன் என்ற கேள்வி எழும்.

சசிகலா
சசிகலா

தேவர் குருபூஜைக்கு வரும் மக்கள் மத்தியில் சசிகலாவுக்கென்று செல்வாக்கு இருக்கிறது. தேவர் நினைவிடத்துக்குத் தொடர்ந்து ஜெயலலிதா வந்ததற்குக் காரணம் சசிகலா என்றும் சொல்லப்படுகிறது. அதனால்தான் தன் செல்வாக்கைப் பார்க்க அமமுக-வினரோடு சேர்ந்து வராமல், அதிமுக பொதுச்செயலாளராக வர விரும்புகிறார் சசிகலா என்கிறார்கள்.

இப்படிப்பட்ட குழப்பமான சூழலில் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் என்ன முடிவெடுக்கப்போகிறது என்பதை அதிமுக-வினர் உன்னிப்பாக கவனித்துவருகிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு