Published:Updated:

தினகரன் சந்திப்பைத் தவிர்க்கவே கணவரின் நினைவுநாள் நிகழ்வைத் தவிர்த்தாரா சசிகலா?

கணவர் சமாதியில் சசிகலா ( ம.அரவிந்த் )

விரைவில் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் தினகரனுடன் சேர்ந்து நினைவுநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதை சசிகலா விரும்பவில்லை. அப்படியே கலந்துகொண்டாலும் தேவையில்லாத சர்ச்சைகள் எழும் என்பதால் அதைத் தவிர்த்ததாகச் சொல்லப்படுகிறது.

தினகரன் சந்திப்பைத் தவிர்க்கவே கணவரின் நினைவுநாள் நிகழ்வைத் தவிர்த்தாரா சசிகலா?

விரைவில் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் தினகரனுடன் சேர்ந்து நினைவுநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதை சசிகலா விரும்பவில்லை. அப்படியே கலந்துகொண்டாலும் தேவையில்லாத சர்ச்சைகள் எழும் என்பதால் அதைத் தவிர்த்ததாகச் சொல்லப்படுகிறது.

Published:Updated:
கணவர் சமாதியில் சசிகலா ( ம.அரவிந்த் )
நடராசன் சமாதியில் தினகரன்
நடராசன் சமாதியில் தினகரன்

சசிகலா அரசியலிலிருந்து ஒதுங்கியிருப்பதாக அறிவித்த பிறகு வெளியில் எங்கும் செல்லாமல் சென்னை தி.நகரிலுள்ள வீட்டில் தங்கியிருந்த நிலையில், கடந்த 17-ம் தேதி மூன்று நாள் பயணமாக தஞ்சாவூர் சென்றார். அருளானந்த நகர் அருகிலுள்ள மறைந்த தனது கணவர் ம.நடராசனால் கட்டப்பட்ட பங்களாவில் தங்கினார். கணவரின் சொந்த ஊரான விளார் கிராமத்திலுள்ள குலதெய்வக் கோயிலுக்குச் சென்று மதுரை வீரன், வீரனாரை வழிபட்டார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அப்போது நடராசனின் சகோதரர்கள் பழனிவேல், ராமச்சந்திரன் ஆகியோரின் பேரக்குழந்தைகளுக்கு நடைபெற்ற காதணி விழாவில் கலந்துகொண்டு கண்கலங்க வாழ்த்தினார். கிட்டத்தட்ட 25 வருடங்களுக்குப் பிறகு கணவரின் குலதெய்வக் கோயிலுக்கு சென்று சசிகலா வழிபட்டதாக உறவினர்கள் மத்தியில் பேசப்பட்டது. இந்தநிலையில், கணவர் ம.நடராசனின் மூன்றாம் ஆண்டு நினைவுதினமான இன்று விளார் சாலையிலுள்ள அவரது சமாதிக்கு வந்து மலர்தூவி மரியாதை செய்வார் எனக் கூறப்பட்டிருந்தது. ஆனால், நேற்று திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சென்ற சசிகலா அங்கு சிறப்பு வழிபாடு செய்துவிட்டு அப்படியே சென்னை சென்றுவிட்டார்.

சசிகலாவுடன் அ.ம.மு.க வேட்பாளர்கள்
சசிகலாவுடன் அ.ம.மு.க வேட்பாளர்கள்

கணவரின் நினைவுநாளைத் தவிர்த்துவிட்டு அவசரமாக அவர் சென்னை செல்வதற்குக் காரணம் என்ன, நினைவுநாள் நிகழ்ச்சிக்கு தினகரன் வருவதாகக் கூறப்பட்ட நிலையில் அவரைத் தவிர்க்கவே முன்னதாக கணவரின் சமாதிக்குச் சென்றுவிட்டு சசிகலா புறப்பட்டதாகப் பேசப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து விவரம் அறிந்தவர்கள் தரப்பில் பேசினோம். ``சசிகலா மூன்று நாள் பயணமாக கடந்த 17-ம் தேதி சென்னையிலிருந்து தஞ்சாவூருக்கு வந்தவர், இரவு நேரமாக இருந்தாலும் பரவாயில்லை எனக் கூறி நேராக அவரது கணவர் சமாதிக்குச் சென்று வணங்கினார். சுமார் 10 நிமிடங்கள் வரை அங்கிருந்த சிலரிடம் எதுவும் பேசாமல் கணவர் நடராசனின் போட்டோவை பார்த்தபடியே நின்றார்.

தினகரன்
தினகரன்

அடுத்த நாள் காலை குலதெய்வக் கோயில் வழிபாடு, காதணி விழாவில் கலந்துகொண்டவர் பின்னர் குமப்கோணம் சென்று திருவிடைமருதூர் மகாலிங்கசாமி கோயில், பட்டீஸ்வரம் துர்க்கையம்மன் உள்ளிட்ட பல கோயில்களுக்குச் சென்று வழிபட்டார். இதையடுத்து அன்று இரவு 8 மணிக்கு வீடு திரும்பியவரை முக்கிய உறவினர்கள் சந்தித்தனர்.

நேற்று காலை அ.ம.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களான வேலு.கார்த்திகேயன், எஸ்.டி.எஸ் செல்வம், கூட்டணியிலுள்ள தே.மு.தி.க வேட்பாளரான டாக்டர் ப.ராமநாதன் ஆகியோர் சந்தித்து ஆசியும்,வாழ்த்தும் பெற்றனர். அவர்களிடம் `தொகுதி எப்படியிருக்கு?’ எனக் கேட்டதற்கு, `நல்லாருக்கும்மா...’ என அவர்கள் சொல்ல, `சோர்வடையாமல் உற்சாகமாகத் தேர்தல் பணிகளைப் பாருங்கள். நல்லது நடக்கும்’ என சிரித்த முகத்துடன் கூறிவிட்டுப் புறப்பட்டார்.

நடராசன் சமாதி
நடராசன் சமாதி

இதையடுத்து ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சென்று வழிபட்டவர் அப்படியே சென்னைக்குச் சென்றுவிட்டார். இந்நிலையில் இன்று காலை 10:30 மணிக்கு நடராசனின் சமாதிக்கு டி.டி.வி.தினகரன் வந்து மரியாதை செய்யவிருப்பதாகச் சொல்லப்பட்டது. இதையடுத்து அ.ம.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள் அந்த இடத்தில் திரண்டனர். ஆனால், தினகரன் வருவதற்கு தாமதமானது. இதனால் உடல்நிலை முடியாமல் இருந்த நடராசன் அண்ணன் சாமிநாதன் தினகரனைச் சந்திக்காமலேயே வீட்டுக்குப் புறப்பட்டார்.

பின்னர் கும்பகோணத்திலிருந்த தினகரன் அங்கிருந்து புறப்பட்டு சுமார் 12 மணியளவில் சமாதிக்கு வந்து மலர் வளையம் வைத்து மரியாதை செய்தார். ஒரு சில நிமிடங்கள் மட்டுமே அங்கிருந்துவிட்டு நடராசனின் தம்பி பழனிவேலைப் பார்த்து வணங்கிவிட்டு பிரசாரத்துக்குக் கிளம்பினார். மூன்று நாள் பயணமாகத்தான் சசிகலா தஞ்சை வந்தார். நினைவுநாளில் கணவர் சமாதிக்கு வந்து மரியாதை செய்வதாகவும் சொல்லியிருந்தார். ஆனால், அதன் பிறகு தினகரன் மற்றும் அ.ம.மு.க-வைச் சேர்ந்தவர்களும் வருவார்கள். ஏற்கெனவே அரசியலிலிருந்து ஒதுங்கியிருப்பதாக சசிகலா அறிவித்திருக்கிறார். அந்த நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்பதில் சசிகலா உறுதியாக இருக்கிறார்.

தினகரன்
தினகரன்

அ.ம.மு.க வேட்பாளர்கள் சிலர் சசிகலாவைச் சந்தித்து ஆதரவு தர வேண்டும் எனக் கேட்டதற்கு சிரிப்பையே பதிலாகத் தந்தார் சசிகலா. இந்தச் சூழ்நிலையில் விரைவில் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் தினகரனுடன் சேர்ந்து நினைவுநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதை சசிகலா விரும்பவில்லை. அப்படியே கலந்துகொண்டாலும் தேவையில்லாத சர்ச்சைகள் எழும் என்பதால் இரண்டு நாள்களிலேயே சென்னைக்குத் திரும்பிவிட்டார்.

இதற்காகத்தான் முன்கூட்டியே கணவரின் சமாதிக்கு வந்து வணங்கி மரியாதை செய்துவிட்டதாகவும், இன்றைய தினத்தில் இங்கிருந்தால் உறவினர்கள் பலர் சந்திக்க வருவார்கள். அதனால் தேவையில்லாத குழப்பங்கள் உண்டாகும் என்று நினைத்தவர் சென்னை புறப்பட்டுவிட்டார்” என்கின்றனர்.

சசிகலா
சசிகலா

தினகரன் ஆதரவாளர்களோ, ``சின்னம்மா இரண்டு நாள் நிகழ்ச்சிக்காகத்தான் தஞ்சாவூர் வந்தாங்க. வந்த அன்னிக்கே நடராசன் சமாதிக்குச் சென்று மரியாதை செலுத்திட்டாங்க. நினைவுநாளில் சமாதிக்கு வருவதற்காக திட்டமிடப்படவில்லை. கடந்த இரண்டு நினைவுதினங்களாகவே தினகரன் இங்கு வந்து மரியாதை செய்துவருவதுபோல் தற்போதும் வந்து மரியாதை செய்தார். தினகரனைத் தவிர்ப்பதற்காகவே, சசிகலா சென்னை சென்றதாகக் கூறப்படுவது உண்மை இல்லை. ஜெயலலிதா சமாதிக்குச் சென்ற பிறகுதான் எதையும் முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற மனநிலையில் சசிகலா இருக்கிறார்” எனத் தெரிவித்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism