``எத்தனை சோதனைகள், இடர்ப்பாடுகள் வந்தாலும், அவற்றையெல்லாம் தகர்த்தெறிந்து என் உயிர்மூச்சு உள்ளவரை நம் இயக்கத்தைக் காத்து, தொண்டர்கள் இயக்கமாக மாற்றும்வரை நான் உழைத்துக்கொண்டே இருப்பேன்” என்று தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் சசிகலா குறிபிட்டதுபோல, அ.தி.மு.க-வைக் கைப்பற்ற முதலில் தொண்டர்கள் பலத்தை அதிகரிக்கும் நோக்கில் அதிரடியான சில முடிவுகளை சசிகலா எடுக்கப்போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அ.தி.மு.க-வின் தலைமை மீது எழுந்த விமர்சனங்களைத் தொடர்ந்து, அந்தக் கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகளுக்கு முறைப்படி தேர்தல் நடத்தப்படும் என்று அந்தக் கட்சியின் தலைமை அறிவித்தது. அதன்படி ராயப்போட்டையிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் தற்போதைய அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் தங்கள் மனுவை அளித்தனர். இதுவரை இந்தப் பதவிகளுக்கு யாரும் போட்டியிடாத நிலையில், போட்டியின்றி இருவரும் வெற்றிபெறும் நிலையே உள்ளது. தேர்தல் மூலம் இருவரும் வெற்றிபெற்றால் அது சசிகலா தரப்புக்குப் பல்வேறு சிக்கலை ஏற்படுத்தும் என சசிகலா தரப்பு கருதுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்த நிலையில் 4-ம் தேதி காலை முதலே சசிகலா அ.தி.மு,க அலுவலகத்துக்கு வருகை தரப்போகிறார் என்கிற செய்தி தொடர்ந்து பரவியது. மற்றொருபுறம் தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர் இல்லத்துக்குச் சென்றுவிட்டு, அ.தி.மு.க அலுவலகத்துக்கு என்ட்ரி கொடுக்கவிருக்கிறார். ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான விண்ணப்பத்தை அவர் கேட்பார் என்று சசிகலா ஆதரவாளர்கள் மத்தியில் பரவிய செய்தியால் அ.தி.மு.க அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது. இசசிகலா தரப்பு உண்மையில் அ.தி.மு.க அலுவலகத்துக்குச் செல்லும் திட்டத்தில் இருக்கிறதா என சசிகலாவுக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்தோம்.

``சசிகலாவுக்கு இப்போது அ.தி.மு.க அலுவலகம் செல்லும் திட்டம் இல்லை. முதலில் அவர் தன்பக்கம் தொண்டர்கள் பலத்தை அதிகரிக்கவே நினைக்கிறார். மறைமுகமாகப் பலரும் சசிகலா ஆதரவு நிலைப்பாட்டில் இருந்தாலும், அதைத் தலைமையிடம் வெளிப்படுத்தாமல் இருந்துவருகிறார்கள். இதனால் சசிகலா அவர்களை எப்படித் தன் பக்கம் கொண்டுவருவது என்பது குறித்து தீவிரமாக ஆலோசனை செய்துவருகிறார். இரண்டு தினங்களுக்கு முன்பாக தனக்கு நெருக்கமான சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்திய சசிகலா, ``சென்னையில் உண்ணாவிரதம் நடத்தலாம் என்று முடிவெடுத்துள்ளேன். ராயப்பேட்டை அ.தி.மு.க அலுவலகத்துக்கு முன்பாகவோ அல்லது சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திலோ, அ.தி.மு.க-வை மீட்கும் வகையிலும், தொண்டர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையிலும் இந்த உண்ணாவிரதம் நடக்க வேண்டும்” என்று சொல்லியிருக்கிறாராம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதற்காக, காவல்துறையில் அனுமதி பெறுவது குறித்தும், இதன் பின்னால் உள்ள சட்டச் சிக்கல்கள் குறித்தும் நீண்ட விவாதம் நடத்தியிருக்கிறார். உண்ணாவிரதம் இருந்தால், தன்மீது அபிமானத்தில் உள்ள தொண்டர்கள் கண்டிப்பாகத் தன் பக்கம் திரண்டு வருவார்கள். அ.தி.மு.க-வில் உள்ளவர்கள் மட்டுமின்றி, அமமுக-வில் உள்ளவர்களும் தன் பக்கம் வரட்டும் என்று கணக்கு போடுகிறாராம் சசிகலா. அநேகமாக ஒன்றிரண்டு நாள்களில் சென்னை காவல்துறையில் சசிகலா உண்ணாவிரதம் இருப்பதற்கான அனுமதிவேண்டி கடிதம் செல்லும் என்கிறார்கள். இடத்தை முடிவு செய்வதில் உள்ள சிக்கல் மட்டுமே சசிகலா தரப்பிடம் உள்ளது’’ என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

``அ.தி.மு.கவின் பொதுச்செயலாளர் நான்தான்’’ என்று ஏற்கெனவே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள சசிகலா, தற்போது அ.தி.மு.க-வில் நடக்கவிருக்கு உட்கட்சித் தேர்தலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்க முடிவெடுத்திருப்பதாக வெளியாகும் தகவல் எந்த வகையில் அவருக்குப் பலன் அளிக்கும் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்கவேண்டியிருக்கிறது.