`சமூகப் பணிகளில் ஆர்வம் காட்டும் சசிகலா..!' -அக்ரஹாரா சிறை சிக்னலால் உற்சாகத்தில் ஆதரவாளர்கள்

``சசிகலா, தனக்குக்கீழ் ஓர் அமைப்பை உருவாக்கி அதன் மூலம் சமூகச் செயல்களை நேரடியாகச் செய்யத் திட்டமிட்டுள்ளார். அதற்கான முன்னோட்டம்தான் இது" என்கின்றனர் குடும்ப உறவுகள்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு, ம.நடராசனின் பெயரில் அமைக்கப்பட்டுள்ள பேரவையின் நிர்வாகிகளுக்கு அனுமதி கொடுத்திருக்கிறார் சசிகலா. இது சோர்வாக இருந்த நடராசனின் ஆதரவாளர்களை உற்சாகமடைய வைத்துள்ளது.
``சசிகலா, தனக்குக்கீழ் ஓர் அமைப்பை உருவாக்கி அதன் மூலம் சமூகச் செயல்களை நேரடியாகச் செய்யத் திட்டமிட்டுள்ளார். அதற்கான முன்னோட்டம்தான் இது" என்கின்றனர் குடும்ப உறவுகள்.

நடராசன் ஆதரவாளர்கள் சிலரிடம் பேசினோம். ``நடராசன் இருக்கும்போதே, அவரின் பெயரில் எம்.என் பேரவை என்ற அமைப்பை நடத்தி வந்தோம். இதில் தமிழகத்தின் பல மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் நூறுக்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். நடராசனின் சென்னை உதவியாளராக இருந்தவர் கார்த்தி, தஞ்சை உதவியாளராக இருந்தவர் பிரபு. இவர்கள் இருவர் தலைமையில்தான் எம்.என் பேரவை செயல்பட்டு வருகிறது. எம்.என் நடத்திய பொங்கல் விழா உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும் மற்றும் சோதனையான காலகட்டத்திலும் அவருக்குப் பக்கபலமாக இருந்தனர் பேரவை உறுப்பினர்கள்.
அத்துடன் நடராசனின் கண் அசைவை வைத்தே அவர் என்ன நினைக்கிறார் என்பதை உணர்ந்து செயல்பட்டதால் நடராசனின் நம்பிக்கைக்குரியவர்களாக இவர்கள் இருந்தார்கள். இந்தநிலையில் ம.நடராசன் இறந்து இரண்டு ஆண்டுகள் முடிந்துவிட்டன. அவரது சமாதி சொந்த ஊரான விளார் கிராமத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்துக்கு எதிரே அமைந்துள்ளது.

நடராசனின் இறுதிச் சடங்குக்காக பரோல் மூலம் தஞ்சை வந்த சசிகலா எம்.என் பேரவையின் செயல்களை உன்னிப்பாகக் கவனித்தார். இளவரசி மகன் விவேக், நடராசனுக்கு உதவியாக இருந்த பேரவை உறுப்பினர்களை சசிகலாவுக்கு அறிமுகப்படுத்திவைத்தார். அப்போது அவர்களிடம் பேசிய சசிகலா, `கவலைப்படாதீங்க.. அவர் இடத்தில் இருந்து நான் உங்களைப் பாதுகாப்பேன். எது வேண்டுமானாலும் தயங்காமல் என்னிடம் கேட்கலாம்' என அப்போது கூறியிருக்கிறார்.
அதன்பிறகு சில மாதங்கள் அமைதியாக இருந்த எம்.என். பேரவை நிர்வாகிகள், பின்னர் ஒவ்வொரு அமாவாசை தினத்திலும் அவர் சமாதியிலேயே 500 பேருக்கு அன்னதானம் செய்து வந்தனர். அவர்களின் இந்தச் செயல் நடராசனின் உறவினர்கள் சிலருக்குப் பிடிக்கவில்லை.

ஆனால், சசிகலா மற்றும் விவேக்கின் ஆதரவு இருந்ததால் உறுதியுடன் செயல்பட்டனர். பின்னர் நடராசனின் உறவினர்கள் சிலரும் உதவத் தொடங்கினர். இந்தநிலையில் கொரோனா ஊரடங்கில் உணவின்றித் தவிப்பவர்களுக்கு உணவு கொடுக்க எம்.என் பேரவையைச் சேர்ந்தவர்கள் முடிவு செய்தனர். தாங்களாக எதுவும் செய்துவிடக்கூடாது என நினைத்து, சிறையில் இருக்கும் சசிகலாவிடம் வழக்கறிஞர் மூலமாக அனுமதி கேட்டுக் காத்திருந்தனர்.
லாக்டௌன் அமலில் இருப்பதால் சிறையிலிருக்கும் சசிகலாவிடமிருந்து தகவல் வருவதற்குத் தாமதமாகிவிட்டது. கடந்த வாரம், இந்த நிவாரணப் பணிகளுக்குப் பச்சைக் கொடி காட்டியுள்ளார் சசிகலா. இதனால் உற்சாகத்துடன் களமிறங்கிய பேரவை நிர்வாகிகள், தினமும் 400 பேருக்குக் கலவை சாதம் தயார் செய்து நடராசன் சமாதி இருக்கும் இடத்திலும் தஞ்சையின் நகரப் பகுதியில் உணவின்றித் தவிக்கும் ஏழை, எளிய மக்களுக்குக் கொடுத்து வருகிறார்கள்.

இதற்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்கவே, அடுத்தகட்ட நிவாரணப் பணிகள் குறித்தும் ஆலோசனை செய்து வருகின்றனர். சசிகலா, தனக்குக்கீழ் ஓர் அமைப்பை உருவாக்கி அதன் மூலம் சமூகப் பணிகளைச் செய்வதற்கான ஆலோசனையில் இருக்கிறார். சிறையிலிருந்து வெளியே வந்ததுமே அதைச் செயல்படுத்த நினைக்கிறார். அதற்கான முன்னோட்டமாகத்தான் தனது கணவரின் பெயரில் செயல்படும் பேரவையைச் சேர்ந்த நிர்வாகிகளைக் களத்தில் இறக்கியுள்ளார்" என்கின்றனர்.