Published:Updated:

அனல் வீசும் அதிமுக அரசியல்; 10 எம்.எல்.ஏ-க்கள் டார்கெட்! - சசிகலாவின் அஜெண்டா என்ன?

சசிகலா
சசிகலா

சசிகலாவின் நகர்வுகளுக்கு பின்னால் பல்வேறு கணக்குகள் இருப்பதாக மதிப்பிடுகிறார்கள் பல்வேறு அரசியல் விமர்சகர்களும் பத்திரிகையாளர்களும்.

தற்போது தொடங்கியுள்ள ஒலிம்பிக் போட்டிகள் எந்த அளவுக்கு விறுவிறுப்பு கூட்டும் என்பதை இப்போதே சொல்லிவிட இயலாது. ஆனால், அதற்கான ஓர் எதிர்பார்ப்பு இருக்கிறது. அதைவிடவும் விறுவிறுப்பைக் கூட்டிக்கொண்டிருக்கிறது ஓர் அரசியல் விளையாட்டு. அ.தி.மு.க-வைச் சுற்றி நடந்துகொண்டிருக்கும் அரசியல் ஒலிம்பிக்கைத்தான் சுட்டிக்காட்டுகிறோம்.

சசிகலா-வின் ஆடியோக்கள், செய்தித் தொலைக்காட்சிப் பேட்டியைத் தொடர்ந்து, உடல்நலக் குறைவாக இருந்த அ.தி.மு.க அவைத்தலைவர் மதுசூதனனை நேரிலேயே சென்று நலம் விசாரித்துவிட்டுத் திரும்பியிருக்கிறார் சசிகலா. அதிலும் அ.தி.மு.க-வின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சென்ற அதே ஜூலை 20 -ம் தேதி, அப்போலோ மருத்துவமனைக்கு அவர் சென்றதுதான் பரபரப்பை எகிறவைத்திருக்கிறது. சசிகலாவின் இந்த திடீர் விஜயத்தை எதிர்பார்க்காத எடப்பாடி, அவசர அவசரமாக மதுசூதனனிடம் நலம் விசாரித்துவிட்டு மருத்துவமனையிலிருந்து நகர்ந்தார்.

சசிகலாவின் இந்த திடீர் விஜயத்துக்குப் பின்னால் இருப்பது அரசியல் நாகரிகமா, அரசியல் கணக்கா என்ற பட்டிமன்றம் ஒருபக்கம் நடந்துகொண்டேயிருக்க, மறுபக்கம் அவருடைய சமீபத்திய நகர்வுகளுக்குப் பின்னால் தெளிவான இலக்கும், அஜெண்டாவும் உள்ளன என்கிறார்கள் அவரின் நகர்வுகளை உற்று நோக்கிக்கொண்டிருப்பவர்கள். அந்தவகையில் சில முக்கியக் காரணங்களையும் பட்டியலிடுகிறார்கள்.

சசிகலாவின் மூன்று பிளான்கள்:

1) `அ.தி.மு.க-வுடன் தான் இணைந்து பயணிக்க விரும்புவதாக' தனது ஆடியோக்கள், தொலைக்காட்சி உரையாடல்களில் வெளிப்படுத்துகிறார் சசிகலா.

இது அ .தி.மு.க-வின் அடிமட்டத் தொண்டர்கள், கீழ்மட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட ஒரு பிரிவினரிடம் தொடர்ந்து ஆதரவைப் பெருக்குகிறது. அதேநேரம் எடப்பாடி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்ளிட்ட மேல்மட்ட முக்கியப் பிரிவினர் இதைத் தொடர்ந்து எதிர்க்கின்றனர்.

எடப்பாடி பழனிசாமி, சசிகலா
எடப்பாடி பழனிசாமி, சசிகலா

2) `அதிமுக-வில் எனக்கு எதிரிகள் யாருமில்லை' எனத் தொடர்ந்து தெரிவித்துவருகிறார் சசிகலா. இதன் மூலம் எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் மனநிலையிலேயே தான் இருப்பதாக வெளிப்படுத்துகிறார். அதாவது, அடுத்த பத்து ஆண்டுகள் ஆட்சியைத் தக்கவைக்க வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறது தி.மு.க. மறுபுறம், `2026-ம் ஆண்டு சட்டமன்றத்தில், நம் பா.ஜ .க-வின் 150 எம்.எல்.ஏ-க்களாவது சட்டமன்றத்தில் இருக்க வேண்டும். அதற்காக உழைக்க வேண்டும். இனி பா.ஜ .க Vs தி.மு.க என்று அரசியல் முகம் மாறும்' என்கிறார் பா.ஜ.க-வின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை.

இப்படி பிரதான எதிர்க்கட்சியும் சரி, கூட்டணிக் கட்சியும் சரி... அ.தி.மு.க-வின் எதிர்காலத்துக்கு மிகப்பெரிய எதிரிகளாக இருக்கின்றன. இப்படிப்பட்ட ஒரு சூழலில் அனைவரும் ஒற்றுமையோடு இணைந்து பயணிப்பது மட்டுமே கழகத்தின் எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் என அடிமட்டத் தொண்டர்களிடம் ஓர் எண்ணம் தோன்றுகிறது. இதைவைத்தே, `நான் இணைந்து பயணிக்கவே விரும்புகிறேன். ஆனால் தடையாக இருப்பதே எடப்பாடிதான்' என்ற ஒரு தோற்றத்தைத் தனது சமீபத்திய உரையாடல்கள், நகர்வுகள் மூலம் உணர்த்துகிறார் சசிகலா. இது எடப்பாடிக்கு பாதகமாகவும், தனக்குச் சாதகமாகவும் இருக்கும் என்பது சசிகலாவின் வலுவான கணக்கு.

இதன் தொடர்ச்சியாகவே மூன்றாவதாக,

3) மனிதாபிமானம்தான் முதன்மைக் காரணம் என்றாலும், இதைக் கடந்து உடல்நலம் சரியில்லாமலிருக்கும் மூத்த தலைவர் மதுசூதனனைச் சந்திப்பதன் மூலமாகத் தன்மீதான கரிசனம் பெருகும்; தொண்டர்களிடம் தன் மீதான நல்ல பார்வையையும் உருவாகும் என்பதும் ஒரு கணக்கு.

இப்படியாக சசிகலாவின் நகர்வுகளுக்குப் பின்னால் பல்வேறு கணக்குகள் இருப்பதாக மதிப்பிடுகிறார்கள் பல்வேறு அரசியல் விமர்சகர்களும் பத்திரிகையாளர்களும்.

அதேநேரத்தில், சசிகலாவை இணைத்துக்கொள்ளவே கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறார் எடப்பாடி. அதற்குப் பின்னாலும் மூன்று முக்கியக் காரணங்கள் உள்ளன.

நோ சசிகலா: எடப்பாடியின் மூன்று காரணங்கள் :

1) சசிகலா என்ற ஒரு குடும்ப ஆதிக்கத்துக்கு, மீண்டும் செல்ல விரும்பவில்லை.

2) தன்னை ஒரு தலைவராக மக்களும் கழகத்தினரும் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். அதன் வெளிப்பாடே அ.தி.மு.க வென்ற 65 தொகுதிகள் என உறுதியாக நம்புகிறார் எடப்பாடி. அதனால், இந்த இடத்தில் ஒரு வலிமையான மற்றொரு தலைவரை உள்ளேவிட விரும்பவில்லை.

3) மேலும், சசிகலா உள்ளே வந்துவிட்டால் தன்னுடைய அதிகாரத்தை ஒட்டுமொத்தமாக ஒழித்துவிடுவார். மீண்டும் எழுவது என்பது கடினம் என்கிற அச்சமும் எடப்பாடியின் அதி தீவிர ஆதரவாளர்களிடமும் இருக்கிறது.

அதனால்தான் , 'சசிகலாவை இணைத்துக்கொள்வதன் மூலம் கூடுதல் தொகுதிகளை வெல்ல முடியும்' எனப் பலரும் தெரிவித்தபோதும், கறாராக அதற்கு மறுப்பு தெரிவித்தார். சோலோவாகக் களமிறங்கி, 65 எம்.எல்.ஏ-க்களையும் வெற்றி பெற வைத்ததாகவும், இது தன்னுடைய தனிப்பட்ட பலத்துக்குக் கிடைத்த வெற்றியாகவும் பறைசாற்றிக்கொள்கிறார். இப்படி அன்றைக்கே தேவையிருந்தும் சசிகலாவைச் சேர்த்துக்கொள்ளாதவர், தற்போது அந்த அவசியமே இல்லாத சூழலில் நிச்சயமாக இணைத்துக்கொள்ளும் முடிவில் இல்லை. இதனால்தான் சேலத்தில், ' சசிகலா என்ன பொய் சொன்னாலும் நாங்கள் அவரை ஏற்றுக்கொள்ள மாட்டோம்' எனச் செய்தியாளர்களிடம் கொதிப்போடு தெரிவித்தார் எடப்பாடி" எனத் திறனாய்வு செய்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

அனல் வீசும் அதிமுக அரசியல்; 10 எம்.எல்.ஏ-க்கள் டார்கெட்! - சசிகலாவின் அஜெண்டா என்ன?

எடப்பாடியின் இப்படியான அணுகுமுறைகளை எதிர்பார்த்திருந்த சசிகலா, எடப்பாடிக்கு எதிரான தன்னுடைய அடுத்தடுத்த ஆட்டங்களையும் துரிதப்படுத்துகிறார்.

இதற்குப் பின்னால் அவருக்கென ஹிடன் அஜெண்டாவும் உள்ளது என்கின்றனர் இந்த உள்விவகாரங்களை நன்கு அறிந்தவர்கள்.

டார்கெட் 10 எம்.எல்.ஏ !

'ஆளுங்கட்சியாக இல்லாவிட்டாலும் ஒரு வலிமையான எதிர்க்கட்சியாக அ.தி.மு.க இருக்கிறது. 65 எம்.எல்.ஏ-க்கள் பலத்தோடு எடப்பாடி இருக்கிறார். அந்த பலத்தைக் குறைக்க வேண்டும் என்றே அமைச்சர் செந்தில் பாலாஜி மூலம், போட்டி அ.தி.மு.க-வை உருவாக்கும் வேலையைச் செய்துவருகின்றனர். குறைந்தது 25 அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களையாவது தூக்க வேண்டும் என வேலை பார்க்கிறார்கள். இதற்கு ஒருவகையில் உதவுவதுபோல சசிகலா டீமும் , எடப்பாடிக்கு எதிராக அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களிடமும் பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.

குறைந்தது 10 எம்.எல்.ஏ-க்களையாவது எடப்பாடிக்கு எதிராக மாற்ற வேண்டும் எனப் பயணிக்கின்றனர். எடப்பாடியின் பலமே, எம்.எல்.ஏ-க்கள் ஆதரவுதான். அதை உடைத்தால் பிளவு ஏற்படும். அதன் மூலம் மீண்டும் அ.தி.மு.க-வின் அதிகார மையமாக மாறிவிடலாம் எனக் கணக்கிட்டு கங்கணம் கட்டிக்கொண்டு வலம்வருகிறார்கள். ஆனால் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் அந்த டீமுக்கு விலை போக மாட்டார்கள். சசிகலாவின் கேமைத் தோற்கடிப்பார்கள்' எனக் கொட்டித்தீர்த்தார்கள் மேற்கு மண்டலத்தில் இருக்கும் எடப்பாடியின் அதி தீவிர ஆதரவாளர்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மிஸ்டர் கழுகு: சசிகலா எம்.எல்.ஏ? - அ.தி.மு.க-வைக் கைப்பற்ற பலே திட்டம்!

இப்படியான சூழலில் இந்தச் சந்தேகங்கள், மதுசூதனனிடம் நலம் விசாரித்தது உள்ளிட்ட அனைத்தும் குறித்தும் அ.ம.மு.க-வின் கொள்கை பரப்புச் செயலாளர் சி.ஆர் சரஸ்வதி-யிடம் கேட்டோம்.

சி.ஆர்.சரஸ்வதி
சி.ஆர்.சரஸ்வதி

``எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாம்மா இருவருடன் என 33 ஆண்டுகளுக்கு மேலாக இணைந்து பணியாற்றியவர் அண்ணன் மதுசூதனன். அம்மா மறைவுக்குப் பிறகு, சில நாள்களிலேயே அடுத்து சின்னம்மா சசிகலாதான் தலைமை என்று கைதூக்கி அறிவித்தவரே அண்ணன் மதுசூதனன்தான். சந்தர்ப்பச் சூழலால் அந்தப் பக்கம் இருக்கிறார். இருந்தாலும் அரசியல் நாகரிகம், அன்பின் காரணமாகவே சசிகலாம்மா, அவர் உடல்நலனை விசாரித்தார்கள். இதில் எந்த அரசியல் கணக்கும் இல்லை' என்றவர் தொடர்ந்து, 'ஹிடன் அஜெண்டா உள்ளிட்ட எத்தனை விமர்சனங்களை முன்வைத்தாலும் சசிகலாம்மாவைப் பொறுத்தவரை அனைவரும் இணைந்து பணியாற்றி, அதிமுக-வை வலிமையான கட்சியாக கொண்டு வர வேண்டும் என்பதே எண்ணம். இதை எடப்பாடி புரிந்துகொள்ள வேண்டும். அதிகாரத்துக்காக ஆசைப்பட்டிருந்தால் ஜெயலலிதாம்மா இருந்தபோதே மந்திரி, எம்.பி எனப் பல பதவிகளை சசிகலாம்மா அனுபவித்திருக்க முடியும். அவருக்குப் பதவி ஆசை இல்லை. ஒற்றைத் தலைமையாக இருந்தால் கட்சி வளரும் என்கிற ஒரே விருப்பம் மட்டும்தான். அவரிடம் பேசும் ஆயிரக்கணக்கான தொண்டர்களும் அதையேதான் தெரிவிக்கிறார்கள்" என மூச்சுவிடாமல் பகிர்ந்தார் சி.ஆர்.சரஸ்வதி.

இந்தநிலையில், `அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தைச் செல்லாது’ என அறிவிக்கக் கோரி சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் அதிமுக நிர்வாகிகள் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கில் சசிகலா தரப்பு பதில் மனுத்தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. இதைத் தொடர்ந்து, விசாரணையை வழக்கு ஜூலை 30-ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உரிமையியல் நீதிமன்றம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்தடுத்து அதிரடியாக அனல் வீசிக்கொண்டிருக்கிறது அ.தி.மு.க-வைச் சுற்றி நடந்துகொண்டிருக்கும் அதிகாரத்துக்கான அரசியல் ஒலிம்பிக்.

`பாஜக வாக்குகள் அதிமுக-வுக்கு அதிகம் சென்றுள்ளது!’ - அடித்து சொல்லும் அண்ணாமலை
அடுத்த கட்டுரைக்கு