Published:Updated:

`பதற்றம்' காட்டிய இரட்டைத் தலைமை... பின்னணியில் சசியின் கடிதம்!

சசிகலா
சசிகலா

செயற்குழு கூட்டத்தின் விவாதத்தின்போது சிலர் சசிகலாவின் பெயரை உச்சரிக்க... அப்போதுதான் கூட்டம் ரணகளமானது. ஆவேசமாக எழுந்த எடப்பாடி, "என்னை முதல்வராக்கியது சசிகலாதான். இல்லையென்று சொல்லவில்லை, ஆனால்,

அ.தி.மு.க-வில் கடந்த சில நாள்களாகவே திடீர் பரபரப்பு. முதல்வரும் துணை முதல்வரும் முகம்கொடுத்தே பேசிக்கொள்வதில்லை. எதிரெதிரே பார்த்தாலும் முகத்தைத் திருப்பிக்கொண்டு போகிறார்கள். `முதல்வர் வேட்பாளர்' சர்ச்சை கடந்த சில மாதங்களாகவே இருந்தது என்றாலும், சமீப நாள்களாக உயர்மட்ட நிர்வாகிகள் கூட்டம், செயற்குழுக் கூட்டம் என அவசரக் கூட்டங்களில் ரணகளங்கள் வரிசைகட்டுகின்றன. சட்டையைக் கிழித்துக்கொள்ளாத குறையாக எடப்பாடி, பன்னீர் தரப்பு ஆதரவாளர்கள் மோதிக்கொள்கிறார்கள்.

`முதல்வர் வேட்பாளரை உடனே அறிவிக்க வேண்டும்' என்றெல்லாம் அவசர கோஷங்கள் எழுகின்றன. ஏன் இந்த திடீர் களேபரம்? விசாரித்தால் இதன் பின்னணியில், சசிகலா எழுதிய சில கடிதங்கள் நமக்குக் கிடைத்தன. கட்சித் தொண்டர்களுக்கு அவர் எழுதியிருக்கும் கடிதங்களால், அவர் விடுதலைக்குப் பிறகு கட்சியை மீண்டும் கைப்பற்றிவிடுவாரோ என்கிற பதற்றம் கட்சியின் இரட்டைத் தலைமைக்கு ஏற்பட்டிருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது.

கடிதம் பற்றிப் பேசும் சசிகலாவுக்கு நெருக்கமானவர்கள், "கடந்த 43 மாதங்களில் தனக்குக் கடிதம் எழுதும் தொண்டர்கள் மற்றும் தனக்கு வேண்டப்பட்ட கட்சி நிர்வாகிகளுக்கு சளைக்காமல் கடிதம் எழுதிவருகிறார் சசிகலா. கட்சிப் பிரச்னைகள் மட்டுமன்றி, முகம் தெரியாத கடைநிலைத் தொண்டனின் குடும்பம் வரை விசாரித்து அவர் எழுதியிருக்கும் கடித வரிகள் பல தொண்டர்களை நெகிழச் செய்திருக்கின்றன" என்கிறார்கள்.

இதனிடையே, செயற்குழு கூட்டத்தின் விவாதத்தின்போது சிலர் சசிகலாவின் பெயரை உச்சரிக்க... அப்போதுதான் கூட்டம் ரணகளமானது. ஆவேசமாக எழுந்த எடப்பாடி, "என்னை முதல்வராக்கியது சசிகலாதான். இல்லையென்று சொல்லவில்லை, ஆனால், அப்போதே அனைத்து எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு எனக்கு இருந்தது" என்று வெடித்தார்.

இதைக் கேட்டு கொந்தளித்த பன்னீர், "உங்களை சசிகலா முதல்வராக்கியிருக்கலாம். என்னை மூன்று முறை முதல்வராக்கியது அம்மா" என்றார். அப்போது கூட்டத்திலிருந்து எடப்பாடியின் ஆதரவாளர்கள் சிலர்... "மூணு முறை எல்லாம் இல்லைங்க... திவாகரன் ஒருமுறை உங்களை முதல்வராக்கினதை மறந்துட்டீங்களா..." என்று கிண்டலுடன் கேட்க... நிலைமை மேலும் சூடானது.

செப்டம்பர் 18-ம் தேதி நடந்து முடிந்த உயர்மட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்குப் பிறகு, தினகரனின் டெல்லி விசிட் அ.தி.மு.க தலைமைக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

சசிகலா
சசிகலா

இது குறித்துப் பேசிய தினகரன் தரப்பினர், "தினகரனை டெல்லிக்கு வரவழைத்ததே பா.ஜ.க தரப்புதான். கட்சியின் மூத்த நிர்வாகிகள் பூபேந்தர் யாதவ், பியூஷ் கோயல் ஆகியோர் தினகரனைச் சந்தித்தார்கள். அவர்களிடம் சசிகலா விடுதலைக்குப் பிறகு, அ.தி.மு.க கட்சிக்குள் செய்ய வேண்டிய சில விஷயங்களைச் சொல்லி, ஆதரவு கேட்கப்பட்டது. டெல்லி தரப்பும் பச்சை சிக்னல் காட்டிவிட்டது" என்றார்கள் உற்சாகமாக!

தினகரனின் டெல்லி சந்திப்பை அறிந்த எடப்பாடி தரப்பும் தன் பங்குக்கு அமைச்சர்கள் இருவரை டெல்லிக்கு அனுப்பியது. இது குறித்துப் பேசிய கட்சி நிர்வாகிகள் சிலர், "செப்டம்பர் 26-ம் தேதி அமைச்சர்கள் இருவரும் கொச்சிக்குச் சென்று, அங்கிருந்து ரகசியமாக டெல்லி விமானம் ஏறினர். கர்நாடகாவைச் சேர்ந்த பா.ஜ.க-வின் அமைப்புச் செயலாளரான பி.எல்.சந்தோஷை முதலில் சந்தித்த இருவரும், அவரது வழிகாட்டுதலின்படி பியூஷ் கோயலைச் சந்தித்திருக்கிறார்கள்.

இருவரின் தரப்பிலும், 'சசிகலாவை அ.தி.மு.க-வுக்குள் அனுமதித்தால், அவர் பா.ஜ.க-வுக்கு எதிராகச் செயல்படுவார்' என்று கூறப்பட்டிருக்கிறது. இதற்கு கோயலிடம் பெரிதாக ரெஸ்பான்ஸ் இல்லை. இதனால், அன்று மாலையே இருவரும் சென்னை வந்தடைந்தனர்" என்றார்கள்!

> சசி கடிதங்களின் சாரம்சம் என்ன?

> பன்னீர், பழனிசாமி தரப்பின் `நகர்வுகள்'...

> பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை அலுவலர்களிடம் இருந்து சசிகலா தொடர்பாக நமக்குக் கிடைத்தத் தகவல்கள்...

> டெல்லி பா.ஜ.க மேலிடத்தின் நிலைப்பாடு என்ன?

> சசிகலா ஆதரவு தரப்பு சொல்வதென்ன?

- இவை அனைத்தையும் உள்ளடக்கிய ஜூனியர் விகடன் கவர்ஸ்டோரியை முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க.. https://bit.ly/3n5j9jF > துரோகிகளை அடையாளம் கண்டுகொண்டோம்! - சிறையிலிருந்து சசி கடிதம்... சசிக்கு இனி இடமில்லை! செயற்குழு ரணகளம்... https://bit.ly/3n5j9jF

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு