தஞ்சை: `டிசம்பர் 3-ம் தேதி சசிகலா சிறையிலிருந்து விடுதலை?’ - உற்சாகத்தில் உறவுகள்

`வரும் 5-ம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 4-ம் ஆண்டு நினைவுதினம் வருகிறது. அன்றைய தினத்தில் சென்னையில் இருக்க வேண்டும் என்பது சசிகலாவின் எண்ணமாக இருக்கிறது.'
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையிலிருக்கும் சசிகலா, வரும் டிசம்பர் மாதம் 3-ம் தேதி விடுதலையாகவிருப்பதாக அவருடைய உறவுகள் வட்டாரத்தில் பேசப்படுகிறது. வரும் 5-ம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 4-ம் ஆண்டு நினைவுநாள் வரும் நிலையில், சசிகலா வெளியே வரவிருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் அரசியல் வட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு நான்கு ஆண்டுச் சிறைத் தண்டனையும், ரூ.10.10 கோடி அபராதமும் விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அபராதத் தொகையை செலுத்தவில்லையென்றால், மேலும் ஒரு வருடம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.
இந்தநிலையில், முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். அதன் பிறகு சசிகலா தன் கணமவர் ம.நடராசன் உடல்நலக்குறைவால் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தபோதும், நடராசன் மறைந்த பிறகு இறுதி அஞ்சலி செலுத்துவதற்கும் என இரண்டு முறை மட்டுமே பரோலில் சிறையிலிருந்து வெளியே வந்தார்.

சசிகலா முன்கூட்டியே விடுதலையாவார் என்ற தகவல் அவ்வப்போது வெளியாகிக்கொண்டே இருந்த நிலையில், எப்போது சசிகலா விடுதலையாவார் எனத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு, தண்டனைக் காலம் முடிந்து 2021-ம் ஆண்டு, ஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலையாவார் என சிறைத்துறை பதில் கூறியிருந்தது.
இந்தநிலையில், சில வாரங்களுக்கு முன்னர் சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையான ரூ.10.10 கோடியை அவரின் வழக்கறிஞர்கள் செலுத்தினர். இதைத் தொடர்ந்து சசிகலா விரைவில் விடுதலையாகவிருப்பதாக தகவல்கள் வெளியானபோதும், எந்த ரியாக்ஷனும் காட்டாமல் அவருடைய தரப்பில் அமைதிகாத்தனர்.

நன்னடத்தை, சிறையில் கன்னட மொழியைக் கற்றது போன்ற காரணங்களால் தண்டனைக் காலம் முடியும் முன்னரே வரும் டிசம்பர் மாதம் 3-ம் தேதி சசிகலா விடுதலையாகவிருக்கிறார் எனத் தஞ்சாவூரிலுள்ள அவரின் உறவுகள் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இது குறித்து சசிகலா உறவுகளுக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்தோம். ``சசிகலா வரும் 3-ம் தேதி விடுதலை செய்யப்படுவார் எனச் சிறைத்துறை வாய்மொழியாகவே அவர் தரப்புக்குத் தகவல் தெரிவித்திருக்கிறது. முறைப்படி அதற்கான எழுத்துபூர்வமான ஆர்டருடைய சான்றிதழ் இன்னும் சசிகலாவின் கைக்கு வரவில்லை. விடுதலை குறித்த ஆர்டர் வரும் திங்கள்கிழமை சசிகலாவிடம் வழங்கப்படும் எனத் தெரிகிறது.
அதன் பிறகே எந்தத் தேதியில் விடுதலையாகிறார் என்ற தகவல் உறுதியாகத் தெரியவரும். கிட்டத்தட்ட நாளை காலை உறுதியான தகவல் சசிகலா தரப்புக்கு வந்துவிடும். சசிகலாவைப் பொறுத்தவரை ஜெயலலிதாவின் நினைவுதினத்துக்கு முன்பே வெளியே வந்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.
அதற்கான வாய்ப்புகளும் அதிகமாக இருக்கின்றன. விடுதலையான பிறகு சென்னை வரும் அவர், நேராக ஜெயலலிதாவின் சமாதிக்குச் சென்று மரியாதை செய்வதற்கான ஏற்பாடும் செய்யப்படுகிறது. போயஸ் கார்டனில் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்துக்கு எதிரிலேயே சசிகலாவுக்காகப் புதிய வீடு ஒன்று தயாராகிவருகிறது. அதற்கான பணிகள் இன்னும் நிறைவு பெறவில்லை என்பதால், தியாகராய நகரிலுள்ள இளவரசியின் வீட்டிலேயே தங்கவிருக்கிறார்.

வரும் 5-ம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 4-ம் ஆண்டு நினைவுதினம் வருகிறது. அன்றைய தினத்தில் சென்னையில் இருக்க வேண்டும் என்பது சசிகலாவின் எண்ணம். அதற்காக 3-ம் தேதி விடுதலையாகி வெளியே வருவதற்கான பணிகள் 90 சதவிகிதம் முடிவடைந்துவிட்டன. ஜெயலலிதாவின் நினைவுநாளில் அவரது சமாதிக்குச் சென்று மாலையிட்டு அஞ்சலி செலுத்திவிட்டு, அரசியலில் தனது இரண்டாம் இன்னிங்ஸை ஆடுவதற்கு சசிகலா தயாராகிவிட்டார்’’ என்று அவர்கள் தெரிவித்தனர்.