Published:Updated:

மனதில் பட்டதைப் பேசி விடுவார் திவாகரன்!- தம்பி மகன் திருமணத்தை தவிர்த்த சசிகலா

ஜெய்ஆனந்த் திருமணம்
ஜெய்ஆனந்த் திருமணம்

ஜெய்ஆனந்த் திருமணத்தில் கலந்து கொள்ளாதது, உறவுகள் ஒன்றுபட வேண்டும் என நினைத்தவர்களுக்குப் பெரும் ஏமாற்றம். விவேக் வார்த்தைக்கு வார்த்தை திவாகரனை அப்பா என அன்பாக அழைப்பார் அவரும் வரவில்லை. என்னதான் சசிகலா கூறியிருந்தாலும் உறவுகள் திருமணத்தை தவிர்த்திருக்கக் கூடாது.

சிறையில் இருக்கும் சசிகலா மன்னார்குடியில் நடைபெற்ற திவாகரன் மகன் திருமணத்தில் கலந்து கொள்வார் என முதலில் கூறப்பட்டது. ஆனால், நேற்று நடைபெற்ற திருமணத்தில் தானும் கலந்து கொள்ளாததுடன் உறவுகள் யாரையும் கலந்துகொள்ள வேண்டாம் எனக் கூறியதால் பலர் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை. ஸ்டாலின்தான் அடுத்த முதல்வர் என திவாகரன் பேசியதே இதற்குக் காரணம் என சசிகலா உறவுகள் வட்டாரத்தில் பேசிக் கொள்கின்றனர்.

திவாகரன் ஜெய் ஆனந்த்
திவாகரன் ஜெய் ஆனந்த்

சசிகலா தம்பி திவாகரன் மகன் ஜெய்ஆனந்த் சசிகலா, அக்கா மகன் பாஸ்கரனின் மகள் ஜெயஸ்ரீ திருமணம் மன்னார்குடியில் உள்ள சுந்தரக்கோட்டை பண்ணை வீட்டில் நேற்று விமரிசையாக நடைபெற்றது. இந்தத் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக சிறையில் இருக்கும் சசிகலா பரோல் மூலம் வெளியே வருவதுடன் அவரே முன்னின்று நடத்தி வைப்பார் என எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால், இதில் சசிகலா கலந்து கொள்ளாததுடன் உறவுகள் யாரையும் திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என சிறையில் இருந்தே தகவல் அனுப்பியதால் உறவுகளில் பலர் கலந்து கொள்ளவில்லை. இது திவாகரன் குடும்பத்தை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து மன்னார்குடி உறவுகள் சிலரிடம் பேசினோம், `சசிகலா மீது பெரும் பாசம் கொண்டவர் திவாகரன். சசிகலாவும் திவாகரன் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தார். ஆனால் ஜெயலலிதா மறைவிற்குப்பின் அ.தி.மு.கவில் ஏற்பட்ட மாற்றங்கள் அடுத்தடுத்த அரசியல் நிகழ்வுகளால் தினகரனுக்கும் திவாகரனுக்கும் மோதல் ஏற்பட்டது. இவை சசிகலாவின் கவனத்திற்கும் சென்றது.

திருமணத்தில் திவாகரன்
திருமணத்தில் திவாகரன்

இதையடுத்து தன்னை அக்கா என அழைக்கவோ என் பெயரைப் பயன்படுத்தவோ கூடாது எனத் தனது வக்கீல் மூலம் சசிகலா திவாகரனிடம் தெரியப்படுத்தினார். திவாகரனும் நான் இனிமேல் முன்னாள் சகோதரி என்றே அழைப்பேன் என்றார். இப்படியே நாள்கள் ஓடின. தனது மகன் ஜெய் ஆனந்திற்கு திருமண ஏற்பாட்டைச் செய்தார். தேதி குறிக்கப்பட்டதுமே சசிகலாவிற்குத் தெரியபடுத்தப்பட்டது. அவரும் ஜெய் ஆனந்திற்கு எதுவுமே செய்யவில்லை நானே நேரடியாக வந்து திருமணத்தை நடத்தி வைப்பதாகக் கூறியதாகக் தகவல்கள் வெளியாகின. இதனால் பிரிந்து கிடக்கும் உறவுகள் ஒன்று சேரப்போவதாக மகிழ்ச்சியடைந்தோம். திருமணத்திற்குச் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன.

இந்த நிலையில் தஞ்சாவூரில் ஸ்டாலின் கலந்துகொண்ட திருமணம் ஒன்றில் திவாகரன் கலந்துகொண்டதுடன் ஸ்டாலின் தான் அடுத்த முதல்வர். நான் சிலருக்கு இடைஞ்சல் செய்யவே கட்சி தொடங்கினேன் எனப் பேசினார். திவாகரனைப் பொறுத்தவரை எதையும் மறைக்காமல் மனதில் பட்டதைப் பேசி விடுவார். இதை தினகரன் தரப்பினர் சசிகலாவிடம் தெரியபடுத்தினர். இதனால் கோபமடைந்த சசிகலா, திருமணத்திற்குச் செல்வதை தவிர்த்து விட்டார். அத்துடன் சில தினங்களுக்கு முன் யாரும் திருமணத்தில் கலந்துகொள்ள வேண்டாம் எனத் தகவல் அனுப்பினார்.

டாக்டர் வெங்கடேஷ்
டாக்டர் வெங்கடேஷ்

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற திருமணத்தில் இளவரசி மகன் விவேக், சசிகலா கணவர் நடராஜன் குடும்பம், மணமகளுக்குச் சொந்த பெரியப்பா என்கிற போதும் தினகரன் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவில்லை. இளவரசி மருமகன் டாக்டர் சிவக்குமார், டாக்டர் வெங்கடேஷ், தினகரனின் அப்பா உள்ளிட்ட சிலர்தான் இதில் கலந்து கொண்டனர். அதே போல் அ.தி.மு.க மற்றும் அ.ம.மு.க தரப்பில் இருந்தும் யாரும் கலந்து கொள்ளவில்லை. திவாகரன் மகள் திருமணம் நடைபெறும் போது சசிகலாவை உறவுகளுடன் சேரக்கூடாது என ஜெயலலிதா கட்டளையிட்டிருந்தார் கடைசி நேரம் வரை கண்கள் கலங்க திவாகரன் காத்திருந்தார். ஆனால் சசிகலா வரவில்லை.

இதே போல் ஜெய்ஆனந்த் திருமணத்திலும் கலந்து கொள்ளாதது உறவுகள் ஒன்றுபட வேண்டும் என நினைத்தவர்களுக்குப் பெரும் ஏமாற்றம். விவேக் வார்த்தைக்கு வார்த்தை திவாகரனை அப்பா என அன்பாக அழைப்பார் அவர் கூட வரவில்லை.

ஜெய்ஆனந்த்
ஜெய்ஆனந்த்

என்னதான் சசிகலா கூறியிருந்தாலும் உறவுகள் இந்தத் திருமணத்தை தவிர்த்திருக்கக் கூடாது. அரசியலால் பிரிந்து கிடக்கும் இந்தக் குடும்பம் ஒன்று சேர வேண்டும் எனப் பலர் விரும்புகிறார்கள். சசிகலாவின் வார்த்தைக்கு உறவுகள் அனைவரும் கட்டுப்படுவார்கள். எனவே, இதற்கு அவர்தான் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு