Published:Updated:

`எம்.ஜி.ஆர் வீடு; ராமாவரம்; ஜெயலலிதா நினைவிடம்'- அதிமுக கொடியையேற்ற சசிகலாவின் அதிரடி ப்ளான்!

அ.தி.மு.க தொடங்கி 50 ஆண்டுள் ஆனதையொட்டி, சென்னை மெரினாவிலுள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சமாதிகளுக்கு அஞ்சலி செலுத்த முடிவெடுத்திருக்கிறார் சசிகலா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

அ.தி.மு.க-வின் 50-ம் ஆண்டு பொன்விழா வரும் அக்டோபர் 17-ம் தேதி தடபுடல் ஏற்பாடுகளோடு கொண்டாட அ.தி.மு.க-வினர் தயாராகி வருகின்றனர். அன்றைய தினம், கட்சிக் கொடி ஏற்றியும் இனிப்பு வழங்கியும் பொன்விழாவைக் கொண்டாட கழக நிர்வாகிகளுக்குத் தலைமைக் கழகத்திலிருந்து உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையிலுள்ள தலைமை அலுவலகத்தை புனரமைத்து வண்ணம் பூசும் பணிகள் ஜரூராக நடைபெறுகிறது. இந்தச் சூழலில், வரும் அக்டோபர் 16-ம் தேதி ஜெயலலிதா சமாதிக்கு சசிகலா செல்லவிருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கின்றன. அ.தி.மு.க-வின் பொன்விழாவையொட்டி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடங்களுக்கு அவர் அஞ்சலி செலுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

எம்.ஜி.ஆர் சமாதி
எம்.ஜி.ஆர் சமாதி

இதுகுறித்து நம்மிடம் பேசிய சசிகலாவுக்கு நெருக்கமானவர்கள், ``பிப்ரவரி 14, 2017-ல் பரப்பன அக்ரஹாரா சிறைக்குச் செல்வதற்கு முன்னதாக ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு சசிகலா வந்தார். அங்கு மூன்று முறை தரையில் அடித்து சத்தியம் செய்தார். அதன்பிறகு சிறையிலிருந்து பரோலில் அவர் வெளிவந்தபோதுகூட, சிறை விதிகள், கட்டுப்பாடுகளால் அவரால் ஜெயலலிதாவின் நினைவிடத்துக்குச் செல்ல முடியவில்லை. கடந்த ஜனவரி 28-ல் சிறையிலிருந்து விடுதலையான பிறகு, ஜெயலலிதாவின் நினைவிடத்துக்குச் செல்ல சசிகலா திட்டமிட்டார். அவர் சென்றுவிடக் கூடாதென நினைவிடத்தைப் பூட்டியது அப்போதைய எடப்பாடி பழனிசாமி அரசு.

ஆட்சி மாறிய நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளால் நினைவிடங்கள், பூங்காக்கள் திறக்கப்படவில்லை. இப்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு நினைவிடங்கள் திறக்கப்பட்டுள்ளன. அ.தி.மு.க தொடங்கி 50 ஆண்டுகள் ஆனதையொட்டி, சென்னை மெரினாவிலுள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடங்களில் அஞ்சலி செலுத்த முடிவெடுத்திருக்கிறார் சசிகலா. இதற்காக, அக்டோபர் 16-ம் தேதி மதியம் 12 மணியளவில் அவர் ஜெயலலிதா நினைவிடத்துக்கு வரவிருக்கிறார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தவிருக்கிறார். அதன் பிறகு, கட்சியின் தொடங்கிய நாளான அக்டோபர் 17-ம் தேதி, தி.நகரிலுள்ள எம்.ஜி.ஆர் இல்லத்தில் அ.தி.மு.க கொடியை ஏற்ற சசிகலா திட்டமிட்டிருக்கிறார். அன்றைய தினம் ராமாவரம் தோட்டத்திலுள்ள காது கேளாதோர் பள்ளிக் குழந்தைகளுடன் அவர் அமர்ந்து உணவு உண்ணும் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அக்டோபர் 17-ம் தேதி நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பு, அ.ம.மு.க-வின் தென்சென்னை மாவட்ட முன்னாள் துணைச் செயலாளர் வைத்தியநாதனிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. நீண்ட வருடத்துக்குப் பிறகு, தன் அக்காவின் நினைவிடத்தை சசிகலா பார்க்கச் செல்வதால் இப்போதே பரபரப்பு தொற்றிக் கொண்டுவிட்டது" என்றனர்.

எடப்பாடி டீமை உடைக்கும்  'ஆறுபடை' - சசிகலா-வின் அரசியல் ஐ.பி.எல்!
எடப்பாடி பழனிசாமி - சசிகலா - ஓ.பன்னீர்செல்வம்
எடப்பாடி பழனிசாமி - சசிகலா - ஓ.பன்னீர்செல்வம்

கடந்த ஜூலை மாதம் அ.ம.மு.க நிர்வாகிகளான உமாதேவன், காமராஜ், பார்த்தீபன் ஆகியோரிடம் சசிகலா பேசிய ஆடியோ உரையாடல் வெளியானது. அதில், ஜெயலலிதா நினைவிடத்துக்குச் சென்றுவிட்டு தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செல்ல திட்டமிட்டுள்ளதாக சசிகலா கூறியிருப்பார். அதற்கான தருணம் வந்துவிட்டதாகக் கூறுகிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். சசிகலா திட்டமிட்டிருக்கும் ஜெயலலிதா நினைவிட விசிட், அ.தி.மு.க கட்சிக் கொடியேற்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்துமா என்பது விரைவில் தெரிந்துவிடும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு