எடப்பாடியின் `மைனஸ்’ ரூட்... `குடும்பத்தார் இடையூறின்றி அரசியல்!’ - மாத்தி யோசிக்கும் சசிகலா?

பெங்களூருவில் இருந்து சசிகலா கிளம்பும்போது, அவருடன் பயணிக்க அண்ணி இளவரசி முயன்றபோது, அவரை முன்கூட்டியே தனிக்காரில் சென்னை போகச் சொல்லிவிட்டாராம்.
சசிகலாவிடம் உள்ள மைனஸ் பாயின்ட் என்று எடப்பாடி தரப்பினரால் அ.தி.மு.க பிரமுகர்கள் மத்தியில் பரப்பப்படுவது என்னவென்றால்.. ஏற்கனவே ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அவரை ஸ்பெஷலாக சந்திக்க வேண்டுமானால் மன்னார்குடி சேனல்களில் ஒன்றை பிடித்தால் தான் முடியும். ஜெயலலிதாவுக்கும் கட்சி பிரமுகர்களுக்கும் இடையே பாலமாக இருந்தவர்கள் மன்னார்குடி தரப்பினர்.
இப்போதும் அதே காட்சி.. நபர்தான் மாற்றம். ஜெயலலிதாவுக்கு பதில் சசிகலா. அதே மன்னார்குடி குடும்பத்தினர் பாலமாக இருக்கிறார்கள். இதை அமைச்சர்கள் முன்னிலையில் சுட்டிக்காட்டிய முதல்வர் எடப்பாடி, `உங்களுக்குத் தேவையா இது? நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்' என்று சொன்னாராம். `என்னிடம் நேரடியாக பேசுகிறீர்கள்..சண்டை போடுகிறீர்கள்?.. நான் உங்களை மதிக்கிறேன். அங்கே.. மன்னார்குடி உறவுகளுக்கு மட்டும் தான் மரியாதை. அதை தான் விரும்புகிறீர்களா?’ என்று கேட்க.. எடப்பாடி கோஷ்டியிலிருந்த சசிகலா அனுதாபிகள் யோசிக்க ஆரம்பித்தார்களாம்.

இந்த தகவல் சசிகலாவுக்கு எட்டியதாம். தனது குடும்பத்தினர் ஆதிக்கம் இருக்கும் என்று அ.தி.மு.க பிரமுகர்கள் மத்தியில் தீயெனத் தகவல் பரவுகிறது என்று கேள்விப்பட்டு, அதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்தாராம்.
பெங்களூருவில் இருந்து சசிகலா கிளம்பும்போது, அவருடன் பயணிக்க அண்ணி இளவரசி முயன்றபோது, அவரை முன்கூட்டியே தனிக்காரில் சென்னை போகச் சொல்லிவிட்டாராம். தினகரனையும் வேறு காரில் பயணிக்கச் சொல்லிவிட்டாராம். டாக்டர் வெங்கடேஷ், திவாகரனின் மாப்பிள்ளை டாக்டர் விக்ரம் ஆகியயோரை மருத்துவ டீம் பயணித்த வாகனத்தில் வரும்படி பணித்தாராம் சசிகலா. தான் பயணித்த காரில் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாரையும் பயணிக்க அனுமதிக்கவில்லை. அவரின் உதவியாளர் கார்த்திகேயன் மட்டுமே பயணித்தாராம்.

சசிகலாவின் தீவிர ஆதரவாளர் ஒருவர் கூறும்போது, ''சின்னம்மா இனி எந்த சுழலிலும் சிக்காமல் அரசியல் செய்ய நினைக்கிறார். தனது சொத்துக்கள் தொடர்பான விஷயங்களை மறைந்த கணவர் நடராஜனின் சகோதரர்கள் சாமிநாதன், எம். ராமச்சந்திரன் மற்றும் பழனிவேல் ஆகியோரிடம் விட்டிருக்கிறார். அரசியலில் முக்கிய அறிவிப்பு மாதிரியான விஷயங்களை டி.டி.வி. தினகரனை கவனிக்கச் சொல்லியிருக்கிறார். மற்றபடி, குடும்பத்தினரின் தலையீடு இருக்காதபடி சில நடவடிக்கைகளைச் செய்துள்ளார். பொறுத்திருந்து பாருங்கள் '' என்கிறார்.