Published:Updated:

பூங்குன்றனை கையிலெடுக்கும் சசிகலா..? விவகாரமாகும் சொத்துப் பின்னணி!

பூங்குன்றன்
பூங்குன்றன்

அ.தி.மு.க-வுக்குச் சொந்தமான அறக்கட்டளைகள் இன்றும் பூங்குன்றனின் பெயரில் இருப்பதாகவும், அவரைக் தன் கையிலெடுப்பதன் மூலமாக, அ.தி.மு.க-வுக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்த சசிகலா திட்டமிடுவதாகவும் கூறப்படுகிறது.

நான்காண்டுகள் சிறைத் தண்டனை முடிவுற்று விடுதலையாகியிருக்கும் சசிகலா, பெங்களூரு அருகேயுள்ள ஹெப்பல் நகரில் தங்கியிருக்கிறார். கொரோனா தொற்று இருந்ததால், தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டிருக்கும் சசிகலா, அரசியல்ரீதியாக யாருடனும் நேரடியாக இன்னும் பேசவில்லை. இந்தச் சூழலில், ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றனைத் தன் கட்டுப்பாட்டில் எடுத்து, அ.தி.மு.க-வுக்குக் குடைச்சல் கொடுக்க சசிகலா திட்டமிட்டுவதாகத் தகவல்கள் வருகின்றன.

ஜெயலலிதாவுடன் பூங்குன்றன்
ஜெயலலிதாவுடன் பூங்குன்றன்

ஜெயலலிதாவின் உதவியாளராக இருபது ஆண்டுகளுக்கு மேல் இருந்தவர் பூங்குன்றன். இவரின் தந்தை சங்கரலிங்கம் காலத்திலிருந்தே போயஸ் தோட்டத்துடன் பூங்குன்றனுக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், வெளித் தொடர்புகளிலிருந்து தன்னைத் துண்டித்துக்கொண்ட பூங்குன்றன், தற்போது கோயில் கோயிலாகச் சுற்றிவருகிறார். பல ஆலயங்களின் திருப்பணிகளையும் செய்துவருகிறார். அவரை சசிகலா தன் கட்டுப்பாட்டில் எடுக்க திட்டமிட்டிருப்பது குறித்து, மன்னார்குடி குடும்பத்தினர் சிலரிடம் பேசினோம்.

சசிகலா, அ.தி.மு.க தலைமையைக் கைப்பற்ற வாய்ப்பிருக்கிறதா... சட்டம் சொல்வது என்ன?

``அ.தி.மு.க-வின் சொத்துகளைப் பராமரிக்க அறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் என இரண்டு அறக்கட்டளைகள் இருக்கின்றன. இந்த அறக்கட்டளைகளில் ஜெயலலிதாவும் பூங்குன்றனும்தான் நிர்வாகிகளாக இருந்தனர். ஒருகட்டத்தில், இந்த அறக்கட்டளைகளை நிர்வகிக்க மூன்றாவதாக ஒரு அறக்கட்டளையை ஜெயலலிதா உருவாக்கினார். அதிலும் பூங்குன்றனை உறுப்பினராக ஜெயலலிதா நியமித்துக்கொண்டார். ஒவ்வொரு மாவட்டத்திலும் அ.தி.மு.க சார்பாக வாங்கப்பட்ட நிலங்கள், கட்டப்பட்ட கட்சி அலுவலகங்கள் அனைத்தும் பூங்குன்றன் பெயரில்தான் பத்திரப்பதிவு செய்யப்பட்டன.

பூங்குன்றன்
பூங்குன்றன்

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர், பூங்குன்றனை யாரும் கண்டுகொள்ளவில்லை. அவரும், `இந்த அறக்கட்டளைகள் என்னுடையவை. கட்சி சொத்துகளை நான்தான் நிர்வகிப்பேன்’ என்று எங்கும் சண்டையிட்டதில்லை. தற்போது ஒதுங்கியிருக்கும் அவரைத் தன் கட்டுப்பாட்டிலெடுக்க சசிகலா திட்டமிட்டிருக்கிறார். இதன் மூலம், சட்டரீதியாக பூங்குன்றனைவைத்து தற்போதிருக்கும் அ.தி.மு.க தலைமைக்கு குடைச்சல் கொடுக்கவும் அவர் ஆயத்தமாகிறார்.

சசிகலா : மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்... காரில் அ.தி.மு.க கொடி! - அரசியல் ஆட்டம் ஆரம்பம்?

1987-ல் எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க உடைந்து ஜெ., ஜா. என்று இரண்டு அணிகளாகப் பிரிந்தன. ஜெ. அணிக்கு ஆதரவாக அன்றைய தலைமை நிலையச் செயலாளர் அரங்கநாயகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கட்சிக்கு ஜெயலலிதாதான் உண்மையான தலைவர் என்று நீதிமன்றத்தில் வாதிட்டார். அன்றைய சூழலில் எம்.எல்.ஏ-க்கள் பலரும் ஜானகி அணிக்கு ஆதரவாக இருந்தாலும், எஸ்.திருநாவுக்கரசு, நெல்லை கருப்பசாமி பாண்டியன், கோவை மலரவன், ராமநாதபுரம் தென்னவன், மதுரை நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.ராதா, விருதுநகர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், காஞ்சிபுரம் உக்கம் சந்த், சேலம் கண்ணன், தருமபுரி கே.பி.முனுசாமி, வேலூர் சந்திரசேகர் என்று பல நிர்வாகிகள் ஜெயலலிதா பக்கம் நின்றனர். கட்சி நிர்வாகிகள் ஒன்றுகூடி ஜெயலலிதாவைக் கட்சியின் பொதுச்செயலாளராகத் தேர்வு செய்தனர். கழக எம்.எல்.ஏ-க்கள் ஒவ்வொருவராக ஜெ. அணிக்குத் தாவ ஆரம்பித்தனர். ஆனால், ஆட்சி கையிலிருந்ததால், ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையிலுள்ள கட்சி அலுவலகம் ஜானகி அணி கட்டுப்பாட்டில் இருந்தது.

ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்., ஜானகி
ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்., ஜானகி

ஜனவரி 30, 1988-ல் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க இயலாததால், ஜானகி ஆட்சிப் பொறுப்பை இழந்தார். ஆளுநர் ஆட்சி இருந்த சமயத்தில், அரங்கநாயகம் தொடுத்திருந்த வழக்கில் ஜெயலலிதா அணிக்குச் சாதகமாக தீர்ப்பு கிடைத்தது. இந்த வழக்கு ஜெ.-க்குச் சாதகமாக கிடைக்க உறுதுணையாக இருந்தவர், அப்போது தலைமைக் கழக அலுவலகத்தின் மேலாளராக இருந்த துரை. வழக்கு தீர்ப்பின் நகல் நள்ளிரவு 12 மணிக்கு கிடைக்கப் பெற்றவுடன், ஜெயலலிதாவின் தளபதிகளாக இருந்த அப்போதைய தென் சென்னை மாவட்டச் செயலாளர் ஏ.வி.கிருஷ்ணமூர்த்தி, இணைச் செயலாளர் எம்.ஜி.ஆர் நகர் எஸ்.கிருஷ்ணன் தலைமையில், சுமார் 500 பேர் அதிரடியாக தலைமைக் கழக அலுவலகத்தை முற்றுகையிட்டு, போலீஸ் பாதுகாப்புடன் அலுவலகத்தைக் கட்டுப்பாட்டில் எடுத்தனர். இதே காட்சிதான் மீண்டும் அரங்கேறப்போகிறது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஓவர்டேக் செய்த ராகுல் காந்தி?! - கொங்கு மண்டல விசிட் அலசல்

அ.தி.மு.க பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது செல்லாது என்று உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் ஓர் உறுதுணையாக பூங்குன்றன் செயல்படலாம். ஜெயலலிதாவுக்கு துரை எப்படி உதவினாரோ, அதே வகையில் பூங்குன்றன் செயல்படலாம். நீதிமன்றத்தில் சசிகலாவுக்கு ஆதரவாக தீர்ப்பு அளிக்கப்பட்டவுடன், கட்சி அலுவலகம் சசிகலாவின் கட்டுப்பாட்டில் கண நேரத்தில் கொண்டுவரப்படும். ஆட்சி இருக்கும் வரைதான் எடப்பாடியின் ஆட்டமெல்லாம்” என்றனர்.

பூங்குன்றன்
பூங்குன்றன்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீது பூங்குன்றன் வருத்தத்தில் இருப்பதை அவரது முகநூல் பதிவிலிருந்தே அறிய முடிகிறது. ஜனவரி 14-ம் தேதி பூங்குன்றன் பதிவிட்டிருக்கும் ஒரு பதிவில், `என்னை விமர்சனம் செய்பவர்களுக்கு என் விசுவாசம் பற்றித் தெரிய வாய்ப்பில்லை. அம்மா எனக்கு ஆசையாக வாங்கித் தந்த காரை நிறுத்திவிட்டார்கள். இதுவரை அதை ஏன் என்று கேட்டிருப்பேனா? கட்சியின் சொத்துகளான அறக்கட்டளைகள் மூன்றிலும் அம்மாவின் மறைவுக்குப் பிறகு நான் மட்டுமே நிர்வாகி. இதை மாற்றிக் கொடுத்தால் என் உயிருக்கு ஆபத்து என்று சொன்னார்கள். இதை எங்காவது வெளியில் சொல்லியிருப்பேனா... அறக்கட்டளைகளுக்குச் சொந்தம் கொண்டாடினேனா... மூன்று முறை கழக உறுப்பினர் உரிமைச் சீட்டுக்கு விண்ணப்பித்தபோது, என்னுடைய விண்ணப்பத்தை மட்டும் நிராகரித்தீர்களே, அதை எங்காவது வெளியில் சொல்லியதுண்டா? எனக்குவ் சொத்திலும் ஆசை இல்லை, கட்சியிலும் ஆசை இல்லை. இதற்கு மேல் கழகத்துக்கு எப்படி விசுவாசமாகச் செயல்படுவது என்று எனக்கும் தெரியவில்லை’ என்று பொங்கித் தீர்த்திருக்கிறார்.

வருத்தத்தில் இருக்கும் பூங்குன்றனைத் தன் ஆதரவாளராக மாற்றும் யுக்தியை கையில் எடுத்திருக்கிறார் சசிகலா. 1987-ல் எம்.ஜி.ஆர் இறந்தவுடன், அவர் உடலை ஏற்றிவந்த ராணுவ வண்டியிலிருந்து தீபன், கே.பி.ராமலிங்கம் ஆகியோர் ஜெயலலிதாவைப் பிடித்து இழுத்து கீழே தள்ளிவிட்டனர். இந்தச் சம்பவத்தால் ஜெயலலிதாமீது ஓர் அனுதாப அலை ஏற்பட்டது. கிட்டத்தட்ட அதே அனுதாபம், சசிகலாமீதும் தொண்டர்களிடம் ஏற்பட்டிருப்பதாகக் கூறுகிறார்கள் அவர் ஆதரவாளர்கள்.

சசிகலா
சசிகலா

``தி.மு.க தொடர்ந்த சொத்துக்குவிப்பு வழக்கால், ஜெயலலிதாவுக்காகச் சிறை சென்றவர் என்கிற இமேஜ் சசிகலாவுக்கு ஏற்பட்டிருக்கிறது. அன்றைக்கு ஜெயலலிதாவை கீழே தள்ளிவிட்ட தீபன், கே.பி.ராமலிங்கம் கேரக்டரில், இன்றைய எடப்பாடி பழனிசாமியையும், பன்னீர்செல்வத்தையும் தொண்டர்கள் பார்க்கின்றனர்” என்கிறார்கள் அவர்கள். இந்த இமேஜுடன் பூங்குன்றனின் ஆதரவும் கலந்துவிட்டால், அ.தி.மு.க-வுக்குக் குடைச்சல் நிச்சயம் என்கிறது சசிகலா வட்டாரம். சசியின் காய்நகர்த்தல்களுக்கு எடப்பாடி என்ன பதிலடி கொடுக்கப்போகிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

அடுத்த கட்டுரைக்கு