Published:Updated:

சசிகலா: `நான் பேசுறது எல்லாருக்கும் கேக்கணும்’ - எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் ஒரத்தநாடு திருமணவிழா

சசிகலா

சசிகலா, தினகரன் இருவருக்குமிடையே கடந்த சில மாதங்களாக அரசியல்ரீதியாகக் கருத்து வேறுபாடு நிலவிவருகிறது. இருவரும் தனித் தனியாகப் பயணம் மேற்கொண்டுவருகின்றனர். இந்தச் சூழலில் நாளை நடைபெறும் திருமணத்தில் இருவரும் கலந்துகொள்கின்றனர்.

சசிகலா: `நான் பேசுறது எல்லாருக்கும் கேக்கணும்’ - எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் ஒரத்தநாடு திருமணவிழா

சசிகலா, தினகரன் இருவருக்குமிடையே கடந்த சில மாதங்களாக அரசியல்ரீதியாகக் கருத்து வேறுபாடு நிலவிவருகிறது. இருவரும் தனித் தனியாகப் பயணம் மேற்கொண்டுவருகின்றனர். இந்தச் சூழலில் நாளை நடைபெறும் திருமணத்தில் இருவரும் கலந்துகொள்கின்றனர்.

Published:Updated:
சசிகலா

சசிகலா, தன்னுடைய 30 ஆண்டுக்கால அரசியல் வாழ்வில் முதன்முறையாக ஒரத்தநாட்டில் நாளை நடைபெறவுள்ள ஒரு திருமணத்தைத் தலைமையேற்று, தன் கையால் தாலி எடுத்துக் கொடுத்து நடத்திவைக்கவிருப்பதுடன் அந்த மேடையிலேயே வெளிப்படையாக அரசியல் பேசி, தனது பயணத்தைத் தொடங்கவிருப்பதாக சசிகலா தரப்பில் பேசப்படுகிறது. இந்தத் திருமணத்தில் டி.டி.வி.தினகரனும் கலந்துகொள்ளவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருப்பது எதிர்பார்ப்பைக் கூட்டியிருக்கிறது.

சசிகலாவிடம் அழைப்பிதழ் கொடுக்கும் ஆதவன்
சசிகலாவிடம் அழைப்பிதழ் கொடுக்கும் ஆதவன்

ஒரத்தநாடு அருகேயுள்ள பின்னையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதவன். சசிகலா நிகழ்ச்சிகளைத் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மூலம் வெளியே கொண்டுவரும் பணிகளைச் செய்துவருகிறார். இவருடைய குடும்பம், சசிகலா கணவர் நடராசன் தொடங்கி சசிகலா உள்ளிட்ட அவரின் குடும்பத்தினரிடம் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நெருக்கமான நட்புடன் இருந்துவருகிறது. ஆதவன் திருமணம், நாளை ஒரத்தநாட்டில் உள்ள மண்டபம் ஒன்றில் விமர்சையாக நடைபெறவுள்ளது. இந்தத் திருமணத்தை சசிகலா தலைமையேற்று நடத்திவைக்கவிருக்கிறார். இதற்காக ஆதவன் குடும்பத்தினர் `புரட்சித்தாயே’, `பொன்னியின் செல்வியே’ என சசிகலாவை வரவேற்று ஃபிளெக்ஸ் வைத்து விமர்சையான ஏற்பாட்டைச் செய்துள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அரசியல் விழிப்புணர்வுகொண்ட பகுதியாக அரசியல் ஆர்வலர்கள் ஒரத்தநாட்டைக் குறிப்பிட்டுப் பேசுவார்கள். அத்தகைய சிறப்புமிக்க ஒரத்தநாட்டிலிருந்து சசிகலா தனது அரசியல் பயணத்தைத் தொடங்கவிருக்கிறாராம். திருமணங்களை நடத்திவைத்து, அந்த விழாக்கள் மூலம் அரசியல் பேசுவது திராவிடக் கட்சிகளின் வழக்கமான ஃபார்முலாதான். அதைப் பின்பற்றி சசிகலா முதன்முறையாக தன் கையால் தாலி எடுத்துக் கொடுத்து, திருமணத்தை நடத்துவதுடன் அங்கிருந்தே முழுவீச்சில் அரசியல் பயணத்தைத் தொடங்கத் திட்டமிட்டிருப்பதாகப் பேசப்பட்டுவருகிறது.

தினகரனிடம் அழைப்பிதழ் கொடுக்கும் ஆதவன்
தினகரனிடம் அழைப்பிதழ் கொடுக்கும் ஆதவன்

இது குறித்து சசிகலா வட்டாரத்தில் பேசினோம். ``சசிகலா, தமிழகத்தின் பல மாவட்டங்களில் உள்ள முக்கியக் கோயில்களுக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொண்டுவந்தார். அப்போது அந்தப் பகுதிகளில் உள்ள தன் ஆதரவாளர்களைச் சந்தித்து பேசினார். தென் மாவட்டத்துக்குச் சென்றபோது ஓ.பி.எஸ்-ஸின் தம்பி ஓ.ராஜா வெளிப்படையாகவே சசிகலாவை சந்தித்தது அ.தி.மு.க-வில் சலசலப்பை ஏற்படுத்தியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சசிகலாவைப் பொறுத்தவரை அ.தி.மு.க-வில் தன்னை இணைத்துக்கொள்வார்கள், மீண்டும் பொதுச்செயலாளர் பதவி கிடைக்கும். அதன் மூலம் ஆளுமையான அரசியலை முன்னெடுக்கலாம், இழந்த தன் செல்வாக்கை மீட்கலாம் என நினைத்திருந்தார். சசிகலாவுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர்கள், முக்கியப் பொறுப்பில் உள்ள நிர்வாகிகள் அதிமுக தலைமையிடம் பேசினர். அவ்வப்போது சசிகலா தொடர்பான பேச்சுகள் அதிமுக-வில் எழுந்து அதே வேகத்தில் அடங்கிவிடும். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தரப்பு சசிகலாவின் வருகையைத் துளிக்கூட ஏற்றுக்கொள்ளாததால் சசிகலாவின் எண்ணம் ஈடேறவில்லை.

சசிகலாவை வரவேற்று ஃபிளெக்ஸ்
சசிகலாவை வரவேற்று ஃபிளெக்ஸ்

இந்த நிலையில்தான் `விரைவில் அரசியல் பயணத்தைத் தொடங்குவேன்’ என சசிகலா கூறியிருந்தார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா தாலி எடுத்துக் கொடுத்து, பல திருமணங்களை நடத்தி வைத்திருக்கிறார். சசிகலா குடும்பத்துத் திருமணங்களைக்கூட ஜெயலலிதாதான் தாலி எடுத்துக் கொடுத்து நடத்திவைத்திருக்கிறார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகும் பல திருமணங்கள் சசிகலா தலைமையில் நடைபெறுவதற்கான வாய்ப்பிருந்தும் அவற்றை சசிகலா தவிர்த்தார்.

இந்த நிலையில்தான் தன் கையால் தாலி எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்திவைக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார். மணமகன் ஆதவன் குடும்பம் சசிகலா மீது வைத்திருக்கும் மரியாதையும் அதற்கு முக்கியக் காரணம். கிட்டத்தட்ட சசிகலா தன்னுடைய 30 ஆண்டுக்கால அரசியல் வாழ்வில் முதன்முறையாக, தன் தலைமையில் திருமணத்தை நடத்திவைக்கவிருப்பது அதிமுக, அமமுக, சசிகலா ஆதரவாளர்கள் எனப் பல தரப்பிடம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமண ஏற்பாடு
திருமண ஏற்பாடு

மணமகன் ஆதவன் குடும்பாத்தாரிடம் பேசிய சசிகலா, ``மேடையில் மைக்கெல்லாம் ரெடி பண்ணிடுங்க நான் பேசுறது எல்லாருக்கும் கேக்கணும்” எனச் சொல்ல அதற்கான ஏற்பாட்டைச் செய்துள்ளனராம். முதலில் `தாலி மட்டும் எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைக்கிறேன்’ என்றுதான் சொல்லியிருக்கிறார் சசிகலா. பின்னர்தான் திருமண மேடை பொதுக்கூட்ட மேடை போன்று இருக்க வேண்டும் எனக் கருதி சில ஏற்பாடுகளைச் செய்யச் சொல்லியிருக்கிறார். இதன் மூலம் திருமணத்தை நடத்தி முடித்துவிட்டு சசிகலா அரசியல் பேசுவார் என்றே தெரிகிறது.

சசிகலா, தினகரன் இருவருக்குமிடையே கடந்த சில மாதங்களாக அரசியல்ரீதியாகக் கருத்து வேறுபாடு நிலவிவருகிறது. இருவரும் தனித் தனியாகப் பயணம் மேற்கொண்டுவருகின்றனர். இந்தச் சூழலில் நாளை நடைபெறும் திருமணத்தில் இருவரும் கலந்துகொள்கின்றனர். சசிகலா மேடையில் இருக்கும்போதே தினகரன் வருவாரா என உறுதிபடத் தெரியவில்லை. மணமகன் ஆதவன் தினகரனிடம் அழைப்பிதழ் கொடுத்தவுடனேயே `அவசியம் கலந்துகொள்கிறேன். அதற்கான ஏற்பாட்டைச் செய்யுங்க’ என்று சொல்லி வாழ்த்தியிருக்கிறார்” என்றனர்.

சசிகலா, தினகரன்
சசிகலா, தினகரன்

அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கத்தின் சொந்தத் தொகுதி ஒரத்தநாடு. அவர் சமீபகாலமாக சசிகலாவுக்கு ஆதரவாகப் பேசிவருவதாகச் சொல்லப்படுகிறது. சசிகலா தஞ்சாவூர் வந்திருந்தபோது அவருடைய சம்பந்தி தவமணி சசிகலாவை ரகசியமாகச் சந்தித்து பேசியதாகச் சொல்லப்படுகிறது. வைத்திலிங்கத்தின் சகோதரி இரண்டு வாரங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் போன் மூலம் வைத்திலிங்கத்திடம் பேசி சசிகலா ஆறுதல் கூறியதாகவும் தலவல் வெளியானது.

இந்த நிலையில் ஒரத்தநாட்டில் நடைபெறும் திருமணத்தில் சசிகலா கலந்துகொள்வதை எடப்பாடி பழனிசாமி தரப்பு உன்னிப்பாக கவனிக்க தொடங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

அ.ம.மு.க தரப்பைச் சேர்ந்த சிலர், `அரசியலில் அவரவர் வழி தனி வழி என சசிகலா, தினகரன் இருவரும் பயணித்துக்கொண்டிருக்கின்றனர். சசிகலா திருமணத்தை நடத்திவைக்கும் அதேவேளையில், ஒரத்தநாடு காவாரப்பட்டு கிராமத்தில் நடைபெறும் திருமணத்தை தினகரன் தலைமையேற்று நடத்திவைக்கிறார். அதனால் சசிகலாவை தினகரன் சந்திப்பதற்கு வாய்ப்பிருக்காது. ஆனால் நிச்சயம் மணமக்களை நேரில் சென்று வாழ்த்துவார்” என்கின்றனர். ஒரத்தநாட்டில் ஒரே நாளில் சசிகலா, தினகரன் இருவர் தலைமையிலும் தனித் தனியாக இரண்டு திருமணங்கள் நடைபெறவிருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism