Published:Updated:

`மொதல்ல பெரியப்பாவுக்கும் அத்தைக்கும் குடியுரிமை கொடுங்க!’ - உதயநிதியைக் கலாய்த்த சசிகலா புஷ்பா

இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்கக் கூடாதென 2007-ல் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பிய தி.மு.க இன்று நாடகம் ஆடுவதாக அ.தி.மு.க எம்.பி. சசிகலா புஷ்பா கூறியுள்ளார்.

சசிகலா புஷ்பா
சசிகலா புஷ்பா

குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை தி.மு.க இன்று நடத்தியுள்ளது. காஞ்சிபுரத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினும் சென்னையில் தி.மு.க மகளிரணிச் செயலாளர் கனிமொழியும் தலைமையேற்று ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர். இந்த சட்டத் திருத்தத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க மத்திய அரசு தவறிவிட்டதாக தி.மு.க குற்றஞ்சாட்டியுள்ளது. சட்டத் திருத்தத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

தி.மு.க. ஆர்ப்பாட்டம்
தி.மு.க. ஆர்ப்பாட்டம்
முதலில் தன் பெரியப்பா அழகிரிக்கு தி.மு.க-வில் கட்சியுரிமையும் தன் அத்தை கனிமொழிக்கு கட்சி டிரஸ்ட்டில் குடியுரிமையும் வாங்கிக் கொடுத்துவிட்டு உதயநிதி மற்ற உரிமைகளைப் பற்றி பேசட்டும்.
சசிகலா புஷ்பா

இந்த நிலையில், இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டுமென தி.மு.க முன்னெடுத்திருக்கும் போராட்டம் பச்சை அரசியல் என மாநிலங்களவை அ.தி.மு.க உறுப்பினர் சசிகலா புஷ்பா ஆவேசமாகப் பேசியுள்ளார். இதுகுறித்து நம்மிடம் பேசிய அவர், ``2007-ல் இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்கக் கூடாதென மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பிய தி.மு.க., அன்றைய காங்கிரஸ் ஆட்சி ஈழத்து அப்பாவிகளை ஈவிரக்கமின்றி படுகொலை செய்தபோது துணையாக நின்றுவிட்டு இன்று அவர்களுக்கு குடியுரிமை கேட்கிறது. சிகிச்சை பெற வந்த பார்வதி அம்மாளை விமானநிலையத்தின் வாசலிலேயே திருப்பி அனுப்பியது துரோகம் இல்லையா?

சில நாள்களுக்கு முன்னர் தி.மு.க இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி குடியுரிமை சட்டத் திருத்த நகலை கிழித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார். எப்போதும் அவருடனேயே இருக்கும் உற்ற நண்பர்கள் மகேஷ் பொய்யாமொழி, T.R.B.ராஜா ஆகியோர் இந்தச் சட்ட நகலை கிழிக்கும்போது எங்கு சென்றுவிட்டனர்? P.H.பாண்டியன் உங்கள் தாத்தாவுக்கு கற்றுக் கொடுத்த பாடத்தால் ஏற்பட்ட பயமா, இவர்களுக்கு இருக்கும் சட்ட சுதாரிப்பு கூட உதயநிதிக்கு இல்லாமல் போய்விட்டது.

சட்ட நகலை கிழிக்கும் உதயநிதி
சட்ட நகலை கிழிக்கும் உதயநிதி

சட்டநகலை கிழிக்கும் உதயநிதி ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். ஈழத்தமிழர்கள் குடியுரிமை கேட்கவில்லை, பறிக்கப்பட்ட மண்ணுரிமையைதான் கேட்கிறார்கள். முதலில் தன் பெரியப்பா அழகிரிக்கு தி.மு.க-வில் கட்சியுரிமையும் தன் அத்தை கனிமொழிக்கு கட்சி டிரஸ்ட்டில் குடியுரிமையும் வாங்கிக் கொடுத்துவிட்டு உதயநிதி மற்ற உரிமைகளைப் பற்றி பேசட்டும். குடியுரிமை சட்டத் திருத்தம் பற்றியும் ஈழத்தமிழர்களுக்கு தி.மு.க செய்திட்ட பேருதவிகள் குறித்தும் விவாதிக்க நான் தயார். இதற்கு தி.மு.க-வோ, உதயநிதி ஸ்டாலினோ தயாரா?” என்று வெடித்தார்.

சசிகலா புஷ்பாவின் கருத்து குறித்து தி.மு.க இளைஞரணி மாநில நிர்வாகி ஒருவர் கூறுகையில், ``சசிகலா புஷ்பாவின் கருத்துக்கெல்லாம் பதிலளித்துக்கொண்டிருப்பது தி.மு.க-வின் வேலையல்ல. அவர் சார்ந்திருக்கும் அ.தி.மு.க கட்சியே அவரை ஒரு பொருட்டாக மதிக்காதபோது, தி.மு.க ஏன் பதில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். விளம்பரத்துக்காக அவர் போடும் கூப்பாடுக்கெல்லாம் தி.மு.க. ஒன்றும் ஊறுகாய் அல்ல” என்றார் காட்டமுடன்.