Published:Updated:

``தமிழ்நாட்டுக்கு உங்கள மாதிரி தலைவர்தான் தேவை!’’- ரஜினியை நெகிழ வைத்த சசிகலா புஷ்பா

‘‘ரஜினியோட அரசியல் வருகை, தமிழக அரசியல் களத்தையே ஒரு நொடிப் பொழுதுல மாத்திரும். அந்த நொடிப் பொழுது நெருங்கிட்டே இருக்கு...!’’

சசிகலா புஷ்பா, ரஜினிகாந்த்
சசிகலா புஷ்பா, ரஜினிகாந்த்

'தர்பார்' பட ஷூட்டிங் முடித்த கையோடு, மகள் ஐஸ்வர்யாவுடன் இமயமலை பயணம் மேற்கொண்டிருந்த நடிகர் ரஜினிகாந்த், நேற்றிரவு சென்னை திரும்பியுள்ளார். ரஜினி பயணம் செய்த அதே விமானத்தில் பயணித்த அ.தி.மு.க மாநிலங்களவை எம்.பி. சசிகலா புஷ்பா, ரஜினியுடன் நடத்திய உரையாடல் ரசிகர் மன்ற நிர்வாகிகளிடையே பரபரப்பாகப் பேசப்படுகிறது.

இமயமலையில் ரஜினி
இமயமலையில் ரஜினி
இமயமலையில் ரஜினி
இமயமலையில் ரஜினி

'ரஜினி அப்படி என்ன பேசினார்?', சசிகலா புஷ்பாவிடமே பேசினோம். "இமயமலை பயணத்தை முடிச்சுக்கிட்டு, மகள் ஐஸ்வர்யாவோட ரஜினி நேற்றிரவு வந்துட்டு இருந்தார். எனக்கு முன் சீட்டுங்கறதுனால, நானே போய்ப்பேசினேன். என்னை அறிமுகப்படுத்திக்கிட்டதும், 'வணக்கம், வணக்கம். எப்படி இருக்கீங்க'னு ரொம்ப ஆர்வமா எந்திரிச்சு வணக்கம் சொன்னார். எனக்கு சங்கோஜமா போயிடுச்சு. எவ்ளோ பெரிய மாஸ் லீடர் அவர். 'அண்ணா, நீங்க உட்காருங்க'னு சொன்னேன். ஆனாலும், அவர் நின்னபடியே பேசினார்.

'இப்ப தமிழ்நாட்டுக்கு தேவை முதல்வரில்லை. உங்கள மாதிரி ஒரு நல்ல தலைவர்தான். நீங்க நிச்சயம் முதல்வரா வருவீங்க. சீக்கிரம் அரசியலுக்கு வாங்க, உங்கள நிறைய பேர் எதிர்பார்த்துட்டு இருக்கோம்'னு சொன்னேன். 'sure sure'னு சிரிச்சுக்கிட்டே சொன்ன ரஜினி, என்னோட அரசியல் பயணம் பற்றியும் விசாரிச்சார். ஒரு மாஸ் தலைவரா இருந்தாலும், எந்த பந்தாவும் இல்லாம சகஜமா பேசினது ரொம்ப வியப்பா இருந்தது. ரஜினியோட அரசியல் வருகை, தமிழக அரசியல் களத்தையே ஒரு நொடிப் பொழுதுல மாத்திரும். அந்த நொடிப் பொழுது நெருங்கிட்டே இருக்கு" என்றார் சூசகமாக.

Sasikala Pushpa MP
Sasikala Pushpa MP

'புலி வருது கதை போலதான், ரஜினி அரசியலுக்கு வருவதும்' என நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் சமீபத்தில் விமர்சித்திருந்தது ரஜினி ரசிகர்களை கொதிப்படையச் செய்திருந்தது. இந்த விவகாரத்தில் காட்டமாக பதிலளித்த சசிகலா புஷ்பா, 'பசிக்கும் போது தான் புலி வேட்டையாடும். தேர்தல் வரும் போதுதான் அவரும் வருவார். தலைவா படத்தை வெளியிட வேண்டும் என்பதற்காக கொடநாடு எஸ்டேட் வாசலிலும், தெறி, மெர்சல் படங்களை வெளியிடுவதற்காக எடப்பாடி பழனிசாமி காலிலும் விழுந்த உங்களைப் போன்றவர் அல்ல ரஜினி. அவர் நிஜப் புலி, விஜய் குழம்பு புளிதான்' என விமர்சித்திருந்தார். சசிகலா புஷ்பாவின் இந்தக்கருத்து ரஜினி ரசிகர்களால் பரவலாக்கப்பட்டு சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து இருந்தது.

இந்நிலையில், ரஜினியுடன் சசிகலா புஷ்பா பேசியது ரஜினி ரசிகர் மன்றத்தினரிடையே வைரலாகி வருகிறது.