சேலத்தில் சசிகலா வருகையை முன்னிட்டு அவரின் ஆதரவாளர்கள் தடபுடலான வரவேற்புகளை தொடங்கி இருக்கிறார்கள். வரும் ஏப்ரல் 11 -ம் தேதி சசிகலா சேலம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அதற்கான அறிவிப்புகள் ஒரு வாரத்துக்கு முன்பே வெளிவந்தது. மேலும் அவரின் சுற்றுப்பயணம் ஒரு பக்கம் ஆன்மீக சுற்றுப்பயணமாக தொடங்கினாலும், மற்றொருபுறம் முழுமையான அரசியல் பயணமாகவும் இருக்கும் என்கின்றனர் அவரின் ஆதரவாளர்கள்.

இந்நிலையில் சசிகலா வருகையை முன்னிட்டு மாநகர், மாவட்ட பகுதிகளில் அதிரடி விளம்பர போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அதில், தங்க தாரிகையே, தமிழகம் ஈன்றெடுத்த மூன்றாவது பெண் முதல்வரே, அன்பு காட்டும் தாய்மையே என்று போற்றி புகழ்ந்து ஒட்டப்பட்டுள்ளன. மாநகர பகுதிகளில் மட்டும் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட போஸ்டர்கள் காணப்படுகின்றன. இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதுகுறித்து அ.தி.மு.கவைச் சேர்ந்த சசிகலா ஆதரவாளர்களிடம் பேசினோம், ``நாங்கள் ஏற்கனவே எங்களுடைய எதிர்ப்பை சேலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திலேயே காட்டிவிட்டோம்(சேலம் அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பெரிய அளவில் கூட்டம் சேரவில்லை என்ற பேச்சு எழுந்தது) . இனி எங்களுடைய முழு ஆதரவும் சசிகலா அவர்களுக்கு தான். அவருடைய வருகைக்காக அ.தி.மு.கவைச் சேர்ந்த பலரும் காத்திருக்கின்றனர். இனி எங்களால் இரட்டை தலைமைக்கு கீழ் இருக்க முடியாது. எங்களை ஜெயலலிதா அம்மா எப்படி வழிநடைத்தினாங்களோ, அதே மாதிரி சசிகலா அம்மாவும் நடத்துவாங்கனு நம்பிக்கை இருக்கு. இனி சேலத்தில் எங்க சின்னம்மா கொடி தாங்க பறக்கும், எனவே எங்க சொந்த செலவுல மாநகர் மாவட்டம் முழுவதும் 10,000 -க்கும் மேற்பட்ட போஸ்டர் ஒட்டி வரவேற்பை கொடுக்குறோம். ஆனா சிலர் எங்களிடம் அரசியல் ரீதியாக அணுக பயந்துக்கொண்டு நாங்க ஒட்டுன போஸ்டர எல்லாம் கிளித்து போடுகின்றனர்” என்கிறார்கள்.

இதுகுறித்து சேலம் அ.தி.மு.க., தொண்டர்களிடம் பேசினோம், “சசிகலாவுக்கு இது தேவை இல்லாத பயணம். என்னதான் இங்கு முயற்சி செய்தாலும், எங்க அண்ண எடப்பாடியார தாண்டி சேலத்துல ஒண்ணும் பண்ண முடியாது. சும்மா இந்த பூச்சாண்டி வேலைக்குலாம் பயப்படமாட்டோம். அ.தி.மு.கவுக்கும் அவங்களுக்கும் சம்பந்தமில்லனு ஆகிடிச்சி. அப்பறம் எதுக்கு அ.தி.மு.க., பெயர பயன்படுத்தி சுத்திக்கிட்டு இருக்காங்கனு தெரியல” என்றனர்.