சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி சிறையிலுள்ள சசிகலா, தனது தண்டனைக் காலம் முடிவடைந்து, வரும் ஜனவரி 27-ம் தேதி விடுதலையாகவிருக்கிறார். அவரின் விடுதலை தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் வல்லுநர்கள் கூறிவருகிறார்கள். சசிகலா விடுதலையாகி தமிழகம் வரும்போது அவருக்கு பிரமாண்ட வரவேற்பு வழங்க அவரின் ஆதரவாளர்கள் தயாராகிவருகிறார்கள்.

சசிகலா சிறையில் இருந்தபோது, சர்க்கரைநோய், தைராய்டு போன்ற உடல் பிரச்னைகள் இருந்துள்ளன. தனது உணவு விஷயத்தில் கடும் கட்டுப்பாட்டுடன் இருந்திருக்கிறார். சிறையில் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, தோட்ட வேலைகள் மற்றும் யோகாசனம் போன்றவற்றைத் தொடர்ந்து செய்துவந்திருக்கிறார். அவரின் உடல்நிலை நன்றாக இருப்பதாகவும் தனது உறவினர்களிடம் தெரிவித்திருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
விரைவில் விடுதலையாகவிருக்கும் நிலையில், சிறையில் அவருக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டது. கடந்த ஒரு வரமாகக் காய்ச்சல் இருந்தநிலையில், நேற்று மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகத் தெரிகிறது. சிறை மருத்துவர்களின் சிகிச்சையைத் தொடர்ந்து சசிகலா, பெங்களூரு சிவாஜி சாலையிலுள்ள பவ்ரிங் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனைக்கு வீல் சேரில் அவரைக் கொண்டு செல்லும் காட்சிகள் வெளியாகின.

சசிகலாவுக்கு ஏற்பட்டிருக்கும் திடீர் உடல்நலக் குறைவு சந்தேகத்தை ஏற்படுத்துவதாக, கர்நாடக மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் வழக்கறிஞர் ராஜராஜன் புகார் மனுவை அளித்திருக்கிறார்.
சசிகலா அனுமதிக்கப்பட்டிருக்கும் பவ்ரிங் அரசு மருத்துவமனைக்கு அவரின் ஆதரவாளர்கள் படையெடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். விவேக், ஜெயானந்த், அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோரும் மருத்துவமனைக்குச் சென்றனர். சசிகலாவின் ஆதரவாளர்கள் அவரைத் தனியார் மருத்துவமனைக்கு மாற்றுமாறு கோரிக்கை விடுத்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், ``சசிகலாவுக்கு உரிய சிகிச்சை வழங்கப்படுகிறது. ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை வழங்கப்பட்டுவருகிறது. அவரை நேரில் சந்தித்து நலம் விசாரிக்க அனுமதி கேட்டிருக்கிறோம். அவர் நலமுடன் இருக்கிறார்; பயப்படத் தேவையில்லை" என்று தெரிவித்தார்.
பவ்ரிங் அரசு மருத்துவமனையிலுள்ள சி.டி ஸ்கேன் இயந்திரம் இயங்காததால், சசிகலாவை விக்டோரியா மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சி.டி ஸ்கேன் எடுக்கப்படவிருக்கிறது. இதற்காக மருத்துவமனைக்கு வெளியே அழைத்துவரப்பட்ட சசிகலா, வீல்சேரில் அமர்ந்தபடி ஆதரவாளர்களை நோக்கி உற்சாகமாகக் கையசைத்தார்.

சசிகலா உடல்நிலை குறித்து பவ்ரிங் மருத்துவமனை இயக்குநர் மனோஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில்,``மூச்சுத்திணறல் காரணமாக அவருக்கு ஆக்சிஜன் செலுத்தப்பட்டது; அதோடு மருந்துகளும் தரப்பட்டன. அவருக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் கொரோனா இல்லை என்பது உறுதியாகியிருக்கிறது. ஐ.சி.யூ-வில் கண்காணிப்புக்காக மட்டுமே வைத்திருக்கிறோம். அவரின் ஆக்சிஜன் அளவு 96 இருக்கிறது. அவருக்குக் காய்ச்சல் குறைந்திருக்கிறது. தற்போது சசிகலாவால் நடக்க முடிகிறது. காலை உணவை எடுத்துக்கொண்டிருக்கிறார். தற்போது அவரின் உடல்நிலையில் எந்தப் பிரச்னையும் இல்லை. தற்போது மூச்சுத்திணறல் எதுவும் இல்லை. அவருக்கு சி.டி ஸ்கேன் எடுக்கவிருக்கிறோம். சி.டி ஸ்கேன் முடிவுகளைவைத்து அடுத்தகட்ட சிகிச்சை குறித்து முடிவு செய்யவிருக்கிறோம். அடுத்த இரண்டு மூன்று நாள்களுக்கு அவர் மருத்துவமனையில் இருப்பார்" என்று தெரிவித்தார்.