Published:Updated:

தினகரன் மகள் திருமண வரவேற்பு.. பிரமாண்ட ஏற்பாடுகள்! -சசிகலாவுக்காக தயார் நிலையில் ஜெ., பிரசார வாகனம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சசிகலா தங்கியிருக்கும் வீடு
சசிகலா தங்கியிருக்கும் வீடு

தஞ்சாவூர் வந்த சசிகலாவிற்கு வல்லம் அருகே மலர் தூவி வரவேற்பு கொடுக்கப்பட்டது. காரில் இருந்தபடியே அதனை ஏற்றுக்கொண்டார் சசிகலா.

அதிமுக உட்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பரபரப்பான சூழலுக்கிடையே தினகரன் மகள் திருமண வரவேற்பில் கலந்து கொள்வதற்காக சசிகலா தஞ்சாவூர் வந்துள்ளார். அவருக்கு மலர் தூவி உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. தஞ்சாவூரில் இருந்தபடி ஜெயலலிதா பயன்படுத்திய பிரசார வாகனத்தில் தனது சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள இருப்பதாக சொல்லப்படுவது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சசிகலா
சசிகலா

டி.டி.வி. தினகரன் மகள் ஜெயஹரிணி, காங்கிரஸ் கட்சியின் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணசாமி வாண்டையார் மகன் ராமநாத துளசி ஐயா திருமண வரவேற்பு நிகழ்ச்சி தஞ்சாவூர் அருகே உள்ள பூண்டியில் நாளை பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாட்டை கிருஷ்ணசாமி வாண்ட்டையார் செய்து வருகிறார். இதில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து தஞ்சாவூர் வந்த சசிகலா அருளானந்த நகர் அருகே பரிசுத்தம் நகரில் உள்ள தனக்கு சொந்தமான பங்களாவில் ஓய்வெடுத்து வருகிறார்.

சசிகலாவை கட்சியில் இணைப்பது தொடர்பான விவகாரத்தில் அதிமுக-வின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர் செல்வம், முன்னாள் முதலமைச்சரான எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு மாறாக கருத்து கூறியது அதிமுக வட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தினகரன் மகள் திருமண வரவேற்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சசிகலா தஞ்சாவூர் வந்திருக்கிறார்.

சசிகலாவிற்கு வரவேற்கு கொடுத்த ஆதரவாளர்கள்
சசிகலாவிற்கு வரவேற்கு கொடுத்த ஆதரவாளர்கள்

அவரின் பயண திட்டம் குறித்து விவரம் அறிந்த சிலரிடம் பேசினோம், ``தஞ்சாவூரின் பாரம்பர்யமிக்க குடும்பம் என பெயரெடுத்த கிருஷ்ணசாமி வாண்டையார் மகனுக்கும், தினகரன் மகளுக்கு கடந்த மாதம் 16-ம் தேதி திருவண்ணாமலையில் விமர்சையாக திருமணம் நடைபெற்றது. இதையடுத்து மணமகன் இல்ல வரவேற்பு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. புரட்டாசி மாதம் விரதம் கடைபிடிக்கப்படுவதால் பலரும் அசைவ உணவு சாப்பிடமாட்டார்கள் என மணமகனின் தந்தை கிருஷ்ணசாமி வாண்டையார் கருதிய நிலையில் கிட்டதட்ட ஒரு மாதத்திற்கு பிறகு வரவேற்பு நிகழ்ச்சி நடத்த முடிவு செய்யப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`ஆ.ராசாவுக்கு ஒரு நீதி; எடப்பாடிக்கு ஒரு நீதியா?!' - சசிகலா விவகாரத்தில் சீறும் புகழேந்தி

அதன்படி நாளை காலை 11 மணியிலிருந்து மதியம் 3 மணி வரை வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. கிருஷ்ணசாமி வாண்டையாரின் இல்ல நிகழ்ச்சி என்றாலே பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் படத்தை விஞ்சக் கூடிய வகையில் இருக்கும் என பலராலும் பேசப்பட்டு வந்த நிலையில் கிருஷ்ணசாமி வாண்டையார் இதற்கான ஏற்பாட்டை செய்து வந்தார். தன் குடும்பத்துக்கு சொந்தமான கல்லூரியான பூண்டி புஷ்பம் கல்லூரில் வளாகத்தில் நான்கு ஏக்கரில் இதற்காக பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

சசிகலா தங்கியிருக்கும் வீடு
சசிகலா தங்கியிருக்கும் வீடு

ஆறு பிரிவுகளாக ஆயிரக்கணக்கானோர் சாப்பிடக்கூடிய வகையில் டைனிங் ஹாலுக்கான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. 1,000 கிடா வெட்டி பிரியாணி சமைக்கப்பட்டு உணவு உபசரிப்பு செய்யப்பட இருக்கிறது. அத்துடன் விறால் மீன் வறுவல் என சாப்பாட்டில் மெகா மெனுவை வைத்து விருந்து உபசரிக்க உள்ளனர். இதற்கான ஏற்பாட்டில் அனைவரையும் சேர்த்து 600 சமையல் கலைஞர்கள் உணவு தயாரிப்பதற்கான பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.

சசிகலா அதிமுக-வில் இணைப்பு?!  `கழகத் தலைமை முடிவெடுக்கும்!' - ஓ.பி.எஸ்-ன் புதிய ட்விஸ்ட்

இதில் கலந்து கொள்வதற்காக தஞ்சாவூர் வந்த சசிகலாவுக்கு வல்லம் அருகே மலர் தூவி வரவேற்பு கொடுக்கப்பட்டது. காரில் இருந்தபடியே அதனை ஏற்றுக்கொண்ட சசிகலா கண்கள் கலங்கியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து தஞ்சாவூர் அருளானந்த நகர் அருகே உள்ள பரிசுத்தம் நகரில் உள்ள தனது இல்லத்தில் தங்கி ஓய்வெடுத்து வருகிறார் சசிகலா. ஜெயலலிதா பிரசார வாகனத்துக்கு பயன்படுத்திய அதே வேன் வீட்டு வாசலில் தயார் நிலையில் நின்று கொண்டிருக்கிறது. ஐந்துக்கும் மேற்பட்ட சபாரி அணிந்த நபர்கள் சசிகலாவின் பயணத்தை திட்டமிட்டுள்ளனராம்.

திருமண வரவேற்பு விழா
திருமண வரவேற்பு விழா

நாளை காலை 11 மணிக்கெல்லாம் சசிகலா வரவேற்பு விழா நடக்கும் அரங்கத்திற்க்கு வந்து விடுவதாக கூறப்படுகிறது. நிகழ்ச்சி முடிந்த பிறகு மீண்டும் வீட்டுக்கு வந்து ஓய்வெடுக்கும் சசிகலா 28ம் தேதி மதியம் மதுரை கிளம்பி சென்று அங்குள்ள ஸ்டார் ஹோட்டலில் ஓய்வெடுக்கிறார். 29ம் தேதி காலை மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலை மற்றும் தெப்பக்குளம் அருகே உள்ள மருதுபாண்டியர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்கிறார்.

அதன் பிறகு தேவர் ஜெயந்தியை முன்னிட்டு இரமாநாதபுரம் மாவட்டதில் உள்ள தேவர் சமாதிக்கு சென்று மரியாதை செய்கிறார். பின்னர் மீண்டும் தஞ்சைக்கு வந்து தங்க இருக்கிறார். தஞ்சாவூரில் இருந்தபடியே தன்னுடைய அரசியல் நிகழ்வுக்கான காய் நகர்த்தல்களை செய்ய இருப்பதாக” விவரம் அறிந்தவர்கள் வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது. சிறையில் இருந்து விடுதலையான பிறகு அரசியலில் அமைதி காத்து வந்த சசிகலா பின்னர் நிர்வாகிகள் சிலரிடம் போனில் பேசி வந்தார். அது தொடர்பான ஆடியோக்கள் அவ்வப்போது வெளியாகி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.

திருமண வரவேற்பு விழா ஏற்பாடு
திருமண வரவேற்பு விழா ஏற்பாடு

இந்நிலையில் பொறுமை காத்து வந்த சசிகலா அதிமுக பொன்விழாவை முன்னிட்டு கடந்த 16-ம் தேதி ஜெயலலிதா, எம்ஜிஆர் சமாதிக்கு சென்று மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து 17-ம் தேதி எம்ஜிஆர் நினைவு இல்லத்துக்கு சென்றவர் தான் அதிமுகவின் பொது செயலாளர் என பொறிக்கப்பட்ட கல்வெட்டை திறந்து வைத்தார். இந்த விவகாரம் அதிமுக முன்னாள் அமைச்சர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுகவில் ஏற்பட்டுள்ள பரபரப்பான சூழலுக்கிடையே சசிகலா தஞ்சை பயணம் மேலும் பரபரப்பை கூட்டியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு