கிடாய் வெட்டு; குலதெய்வம் கோயிலில் வழிபாடு - சசிகலாவின் திடீர் தஞ்சைப் பயணத்துக்கு என்ன காரணம்?

மூன்று நாள்கள் தஞ்சாவூரிலேயே தங்கும் சசிகலா தனக்கு நெருக்கமான உறவினர்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் சிலரையும் சந்திக்கவிருப்பதாகத் தெரிகிறது.
சிறையிலிருந்து வெளிவந்த சசிகலா, யாருமே எதிர்பார்க்காத வகையில் அரசியலிலிருந்து ஒதுங்கியிருக்கப் போவதாக அறிவித்தார். `ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்கள் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும். பொது எதிரியான தி.மு.க-வை ஆட்சிக்கு வராமல் தடுக்க வேண்டும். நான் பதவிக்கோ, அதிகாரத்துக்கோ ஆசைப்பட்டதில்லை. அரசியலிலிருந்து ஒதுங்குகிறேன்’ என்றும் அறிக்கை வெளியிட்டது தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியது.

அதன் பிறகு சசிகலா குறித்த எந்தத் தகவலும் மீடியாவிலும், பொதுவெளியிலும் வெளியாகவில்லை. சென்னை தி.நகரில் சசிகலா, இளவரசியுடன் தங்கிவரும் நிலையில், தற்போது மூன்று நாள் பயணமாக தஞ்சாவூர் செல்லவிருக்கிறார். இன்று மாலை சென்னையிலிருந்து கிளம்பும் சசிகலா, தஞ்சாவூர் அருளானந்த நகரில் நடராசனால் கட்டப்பட்ட பிரமாண்ட பங்களாவில் தங்குகிறார். தேர்தல் நெருங்கும் நேரத்தில், சசிகலாவின் தஞ்சாவூர் வருகைக்கு என்ன காரணம் என்ற பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இது குறித்து விவரம் அறிந்தவர்கள் தரப்பில் பேசினோம். ``சிறையிலிருந்து விடுதலையாகி வந்ததுமே சசிகலா நேராக ஜெயலலிதா சமாதிக்குச் செல்ல வேண்டும் என்றுதான் நினைத்தார். ஆனால் ஆளும்கட்சியினர் அதைத் தடுக்கும் விதமான செயல்களில் ஈடுபட்டது சசிகலாவுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. பின்னர் அவர் பிறந்தநாளின்போது சமாதிக்கு சென்று மலர் தூவி மரியாதை செய்ய வேண்டும் என ஆசைப்பட்டார்.

அப்போதும் அதற்கான கதவுகள் அடைக்கப்பட்டன. இதற்கிடையில் தான் அரசியலிலிருந்து ஒதுங்கியிருப்பதாக அறிவித்தார். அதன் பிறகு வெளியிலும் வரவில்லை; அரசியல் குறித்து யாரிடமும் எதுவும் பேசவில்லை. இந்தநிலையில் சசிகலாவின் கணவர், நடராசனின் சொந்த ஊரான விளார் கிராமத்தில் அமைந்துள்ள, குலதெய்வமான வீரனார் கோயிலில் நடராசானின் தம்பியான பழனிவேலின் பேரக்குழந்தைகளுக்கு காதணிவிழா நாளை நடைபெறுகிறது.
இதற்காக இன்று கிடா வெட்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு பிறகு நடராஜன் குடும்பத்தினர் கோயிலில் கிடா வெட்டி சாமி கும்பிடுகின்றனர். சசிகலாவுக்கும், நடராசனுக்கும் திருமணமான புதிதில் சசிகலா இங்கு வந்து சாமி கும்பிட்டார். அதன் பிறகு இப்போதுதான் சசிகலா இந்தக் கோயிலுக்கு வருவதுடன், நாளை காலை நடைபெறும் காதணி விழாவிலும் கலந்துகொள்ளவிருக்கிறார்.

அத்துடன் வரும் 20-ம் தேதி சசிகலா கணவர் நடராசனின் மூன்றாம் ஆண்டு நினைவுநாள் வருகிறது. அன்றைய தினத்தில் சசிகலா விளார் சாலையில், முள்ளிவாய்க்காலுக்கு எதிரே அமைந்துள்ள நடராசனின் நினைவிடத்துக்குச் சென்று மலர்தூவி மரியாதை செய்யவிருக்கிறார். இதற்காக நடராசனின் சமாதியை அலங்கரிக்கும் பணிகள் இப்போதே தொடங்கிவிட்டன. இந்த ஏற்பாடுகளை மிகவும் ரகசியமாக வைத்திருந்தனர்.
முக்கியமாக மீடியாவுக்கு இந்தத் தகவல் தெரியக் கூடாது என ரகசியம் காத்தனர். ஆனால் மெல்ல வெளியே கசிந்துவிட்டது. மூன்று நாள்கள் தஞ்சாவூரிலேயே தங்கும் சசிகலா தனக்கு நெருக்கமான உறவினர்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் சிலரையும் சந்திக்கவிருப்பதாகத் தெரிகிறது. நேற்று தஞ்சாவூரில் பிரசாரம் மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரவு சங்கம் ஹோட்டலில் தங்கினார். அமைச்சர் விஜயபாஸ்கரிடம் சசிகலா தொடர்பாகப் பேசியிருக்கிறார்.
அப்போது சசிகலா வருகை குறித்தும் விவாதிக்கப்பட்டிருக்கிறது. இன்று காலை நீண்டநேரமாக வைத்திலிங்கத்துடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சசிகலா தஞ்சை வருவது குறித்துப் பேசியிருக்கிறார். சசிகலாவை யார் யாரெல்லாம் சந்திக்கிறார்கள் என்பதை உன்னிப்பாக கவனியுங்கள் என வைத்தியிடமும், உளவுத்துறையிடமும் கூறியதாகத் தெரிகிறது. ஒரத்தநாட்டில் அ.ம.மு.க சார்பில் போட்டியிடும் மா.சேகர் தன் வெற்றிக்காகக் கடுமையாக உழைத்துவருகிறார். கொஞ்சம் மெனக்கெட்டால் வெற்றி பெறலாம் என்பது அ.ம.மு.க-வினரின் கணக்காக இருக்கிறது. இந்நிலையில் மா.சேகர், சசிகலாவைச் சந்தித்து தனக்கு மறைமுக ஆதரவு கேட்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது வைத்திலிங்கம் தரப்பைக் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
சசிகலா குடும்பத்தினர் தரப்பிலோ, `` குடும்ப நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக மட்டுமே சசிகலா தஞ்சாவூர் வருகிறார். குலதெய்வ கோயிலில் கிடா வெட்டி சாமி கும்பிட்டால் கஷ்டங்கள் விலகி நினைத்தது நடக்கும் என சசிகலா தரப்புக்கு நெருக்கமான ஜோதிடர் ஒருவர் கூறியிருக்கிறார். இதைக் கேட்ட சசிகலா உடனே பழனிவேலிடம் கூறி அதற்கான ஏற்பாட்டை செய்யச் சொன்னார். அதன்படி இன்று கிடா வெட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. நளை காதணி விழா நடைபெறவிருக்கிறது அப்போதும் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. அதில் சசிகலா கலந்துகொண்டு குலதெய்வத்தை வழிபடவிருக்கிறார். தேர்தலுக்குப் பிறகுதான் சசிகலா நினைத்தது நடக்கும் என சசிகலா நம்பிக்கையுடன் இருக்கிறார். அதற்காகவே இந்தக் குல தெய்வ வழிபாடு நடைபெறுகிறது” எனத் தெரிவித்தனர்.