Election bannerElection banner
Published:Updated:

`பலருக்கு நன்றி இல்லை’ கண்ணீர் வழிய குலதெய்வக் கோயிலில் சசிகலா வழிபாடு!

சசிகலா
சசிகலா ( ம.அரவிந்த் )

`அரசியலில் நட்பு, நன்றி போன்ற வார்த்தைகளுக்கு அர்த்தமே பலருக்குத் தெரியலை. கடைசிவரை அந்த வார்த்தைகளுக்குப் பாத்திரமா நான் இருந்துட்டா போதும்’ என நா தழுதழுக்கப் பேசினார் சசிகலா.

சசிகலா மூன்று நாள் பயணமாக தஞ்சாவூர் சென்றிருக்கும் நிலையில், இன்று தனது கணவர் நடராசனின் குலதெய்வக் கோயிலில் வழிபட்டதுடன் அங்கு நடைபெற்ற காதணி விழா நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். விழாவில் பங்கேற்ற சசிகலா ஆனந்தக் கண்ணீர் சிந்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக சசிகலாவின் உறவினர்கள் தெரிவித்தனர்.

குலதெய்வக் கோயிலில் சசிகலா
குலதெய்வக் கோயிலில் சசிகலா

சசிகலாவின் கணவர் மறைந்த நடராசனின் சொந்த ஊரான தஞ்சாவூர் அருகேயுள்ள விளார் கிராமத்தில் அமைந்திருக்கிறது குலதெய்வக் கோயிலான வீரனார், மதுரை வீரன் கோயில். இங்கு நடைபெற்ற சிறப்பு பூஜை மற்றும் காதணிவிழாவில் கலந்துகொள்வதற்காக சென்னையிலிருந்து நேற்று புறப்பட்ட சசிகலா, தஞ்சாவூர் அருளானந்த நகரிலுள்ள நடராசனின் பங்களா வீட்டில் தங்கினார்.

வயல்வெளி, தென்னந்தோப்புக்கு இடையே அமைந்துள்ள கோயிலில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. விளார் ஊராட்சிமன்றத் தலைவரான அதிமுக-வைச் சேர்ந்த மைதிலி தம்பி, ஊராட்சி ஊழியர்கள் மூலம் ஊரைச் சுத்தம் செய்து புளோரிங் அடிக்கவைத்திருந்தார். ஒருசில இடங்களில் போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.

சசிகலா, டாக்டர் வெங்டேஷ்
சசிகலா, டாக்டர் வெங்டேஷ்

நேற்றே குலசாமிக்கு காணிக்கையாக 21 கிடா வெட்டி, கறிசோறு போட்டு அனைவருக்கும் விருந்துவைக்கப்பட்டது. இன்று காலை சரியாக 8 மணிக்கு கோயிலுக்கு வந்தார் சசிகலா. உடன் சசிகலாவின் அண்ணன் மகன் டாக்டர் வெங்கடேஷ் வந்தார். காரிலிருந்து இறங்கிய சசிகலாவை நடராஜனின் தம்பி ராமசந்திரன், அவரது மகன் டாக்டர் ராஜூ ஆகியோர் வரவேற்று அழைத்துச் சென்றனர்.

அப்போது மூதாட்டி ஒருவர், `வாம்மா உனக்காகத்தான் இத்தனை நாள் நாங்க காத்திருந்தோம். நீ இந்த இடத்துக்கு வந்த பிறகே இந்த விசேஷம் நடக்கணும்னு இருந்திருக்கு’ எனக் கூறியதை அமைதியாகக் கேட்ட சசிகலா, அதை ஆமோதிப்பதுபோல் தலையசைத்துவிட்டு அவரைக் கடந்து சென்றார்.

வீரனார் கோயில்
வீரனார் கோயில்

சசிகலா வருவதற்கு முன்னரே குழந்தைகளுக்கு மொட்டையடித்து தயார்நிலையில் குடும்பத்தினர் காத்திருந்தனர். பின்னர் வீரனார், மதுரைவீரனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அப்போது சசிகலா முணுமுணுத்தபடி அமைதியாக வேண்டிக்கொண்டிருந்தார். சாமியின் பீடத்தில், `முன்னோர்கள் நம் தெய்வம்; உறவுகள் ஒற்றுமை; நட்பும் நன்றியும் மறவோம், நீதியும் தருமமும் கடவுளே, வீரத்துடன் விவேகத்தைப் போற்றுவோம்’ என்று செதுக்கப்பட்டிருந்த வாசகங்களை உன்னிப்பாக கவனித்துப் படித்தார்.

அப்போது அருகிலிருந்த டாக்டர் வெங்கடேஷிடம்,``மாமா (நடராசன்) `நட்பும் நன்றியும் மறவோம்’ என அடிக்கடி சொல்லிக்கிட்டே இருப்பாரு. அவர் வணங்கிய குலதெய்வக் கோயிலிலும் அதை எழுதியிருக்கார். உறவுகள் ஒற்றுமையாக இருக்கணும்னு நெனச்சார். அதையும் எல்லோருக்கும் உணர்த்திட்டு போயிருக்கார். ஆனா அரசியலில் நட்பு, நன்றி போன்ற வார்த்தைகளுக்கு அர்த்தமே பலருக்குத் தெரியலை. கடைசிவரை அந்த வார்த்தைகளுக்குப் பாத்திரமா நான் இருந்துட்டா போதும்’ என நாத் தழுதழுக்கப் பேசினார் சசிகலா.

சசிகலா
சசிகலா

பின்னர் நடராசனின் சகோதரர்கள் பழனிவேல், ராமச்சந்திரன் மற்றும் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த எட்டு குழந்தைகளுக்கு காது குத்தும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வு நடந்துகொண்டிருக்கும்போது சசிகலாவின் கண்களில் கண்ணீர் வழிந்தது. `பேரப்புள்ளைங்க மேல கொள்ள பாசம்’ என அங்கிருந்த பெரியவர் சத்தமாகச் சொல்ல, அந்த இடம் கலகலத்தது. கிட்டதட்ட ஒரு மணி நேரத்துக்கு மேலாக அங்கிருந்த சசிகலா அதன் பின்னர் புறப்பட்டுச் சென்றார். சசிகலா அடுத்து எங்கு செல்கிறார் என அவர்களுடைய முக்கிய உறவினர்களுக்குக் கூடத் தெரியாமல் ரகசியம் காக்கப்படுகிறது. பாபநாசம், திருவிடைமருதூர் மகாலிங்க சாமி கோயில் மற்றும் தனது சொந்த மாவட்டமான திருவாரூர் மாவட்டத்திலுள்ள தனது குலதெய்வக் கோயில்களுக்கு வழிபடச் சென்றிருப்பதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து சசிகலா குடும்பத்தினர் தரப்பில் சிலரிடம் பேசினோம்.`` நடராசனுக்கும் சசிகலாவுக்கும் திருமணம் நடைபெற்ற புதிதில் இருவரும் இந்தக் குலதெய்வக் கோயிலுக்கு வந்தனர். அதன் பிறகு வருவதற்கான வாய்ப்பு ஏற்படவில்லை. ஆனாலும் நடராசன் சகோதரர்கள் மூலம் மறக்காமல் கோயிலில் அடிக்கடி பூஜை செய்யச் சொல்வார். கிட்டத்தட்ட 25 வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் மீண்டும் கோயிலுக்கு வந்திருக்கிறார் சசிகலா .

விழா நடைபெற்ற இடம்
விழா நடைபெற்ற இடம்

உடன் அவர் கணவர் நடராசன் இல்லாதது சசிகலாவுக்குப் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. காலையிலேயே வந்தவர் யாரிடமும் அதிகம் பேசாமல் அமைதியாக இருந்தார். சாமியார் தோற்றத்திலிருந்த பெரியவர் ஒருவர் `குலதெய்வம் கோயிலில் காலடி பட்டாலே பாதி கஷ்டம் விலகிடும். இங்கே வந்து பூஜையும் செய்து சாமி கும்பிட்டாச்சு. இனி நீ நெனச்சதெல்லாம் நடக்கும். இனிமே தோல்வியே கிடையாது. இன்னும் ரெண்டு மாசத்துல நீ நெனச்சது உன்னைத் தேடி வரும்’ என ஆரூடம் கூற, லேசாகப் புன்னகைத்தபடி கேட்டுக்கொண்டார் சசிகலா.

கிட்டதட்ட மூன்று நாள் இங்கு தங்குகிறார். அதற்கான நிகழ்ச்சிகளும் திட்டமிடப்பட்டுள்ளன. வரும் 20-ம் தேதி சசிகலாவின் கணவர் நடராசனுக்கு மூன்றாம் ஆண்டு நினைவுநாள் நிகழ்ச்சி வருகிறது. அவரது சமாதிக்குச் சென்று மலர் தூவி மரியாதை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று மரியாதை செய்த பிறகே மற்ற இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்பது சசிகலாவின் விருப்பம். ஆனால் காலமும், சூழலும், அரசியலும் அதற்கு இடம் கொடுக்கவில்லை. தற்போது சசிகலா அரசியலில் மட்டுமல்ல; எல்லாவற்றிலும் ஒதுங்கியே நிற்கிறார்.” என்கிறார்கள் உறவினர்கள்.

குடும்ப விழாவில் சசிகலா
குடும்ப விழாவில் சசிகலா

சசிகலா வருவது குறித்து அறிந்த அ.ம.மு.க நிர்வாகிகள் சிலர் அவரைச் சந்தித்தனர். ஒரத்தநாடு தொகுதி அ.ம.மு.க வேட்பாளரான மா.சேகர் கோயிலுக்கே வந்து சசிகலாவை சந்தித்து ஆதரவு கேட்டுவிட்டுச் சென்றதாகவும் கூறப்படுகிறது. அத்துடன் தொடர்பிலுள்ள அ.தி.மு.க-வைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலரும் வீட்டில் சசிகலாவைச் சந்தித்ததாகப் பேசப்படுகிறது. அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், சசிகலாவை யார் யாரெல்லாம் சந்திக்கிறார்கள் என்பதை அறிய ஒரு குழுவை அமைத்து நோட்டமிடச் சொல்லியிருப்பதாகவும் விவரம் அறிந்தவர்கள் வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு