Published:Updated:

கொடநாடு விவகாரம்; கையில் எடுக்கும் சசிகலா? சட்ட ஆலோசனையில் யாருக்குக் குறி?

சசிகலா
சசிகலா

எடப்பாடிக்கு எதிராகச் சாட்சி சொல்லவருகிறாரா சசிகலா?

ஷெர்லாக் ஹோம்ஸ் மர்ம நாவலைவிட படு சுவரஸ்யமாகப் போய்க்கொண்டிருக்கிறது கொடநாடு எஸ்டேட் மர்மங்கள். ஒரு கொலை, ஒரு கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய நபர்கள் சந்தித்த வெவ்வேறு சாலை விபத்து மரணங்கள்... முன்னாள் முதல்வர் எடப்பாடியை நோக்கி, குற்றம்சாட்டப்பட்ட சயான் கொடுத்திருக்கும் வாக்குமூலம்... இவையெல்லாம் விறுவிறுப்பான க்ளைமாக்ஸை நெருங்கிக்கொண்டிருக்கிறன. கொடநாடு விவகாரத்தில், இன்னும் சசிகலா ஏன் மௌனம் காக்கிறார் என்று அவரது பக்கம் கேள்வி திரும்பியிருக்கிறது. ஏனென்றால், கொடநாடு எஸ்டேட்டின் ரகசிய அறைகள், அவற்றில் வைக்கப்பட்டிருந்த டாக்குமென்ட் பற்றிய ரகசிய விவரங்களை நன்றாகத் தெரிந்தவர்கள் ஜெயலலிதாவும் சசிகலாவும்தான். வீட்டிலிருந்த சில ரகசிய அறைகளின் கதவு திறப்பதற்கான டிஜிட்டல் பாஸ்வேர்டுகூட இருவருக்கு மட்டும்தான் தெரியும் என்கிறார்கள். கொடநாடு எஸ்டேட்டைத் தனது கஸ்டடியில் வைத்திருந்தவர் சசிகலா. அங்கே என்னென்ன பொருள்கள் இருந்தன என்பதைப் பற்றி அவருக்குத்தான் தெரியும். ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, சசிகலா தரப்பினரின் நிர்வாகத்தில்தான் கொடநாடு செயல்பட்டுவந்தது. போலீஸ் அதிகாரிகள் யாரும் சசிகலாவிடம் விசாரணை நடத்தவும் இல்லை. வழக்கின் சாட்சியாக அவரைச் சேர்க்கவுமில்லை.

கொடநாடு க்ளைமாக்ஸ் - மர்ம சான்ட்ரோ... துபாய் போன் கால்... சேலத்து சந்திப்பு
சசிகலா
சசிகலா

இத்தனைக்கும் 24.4.2017-ல் கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளைச் சம்பவம் நடந்தபோது, பெங்களூரு சிறைச்சாலையில் இருந்தார் சசிகலா. 11.11.2017-ம் தேதியன்று வருமான வரித்துறையினர் அதே எஸ்டேட்டில் ரெய்டு நடத்தினர். கொலை தொடர்பான வழக்கு ஊட்டி நீதிமன்றத்தில் நடந்தபோது, அதன் ஒவ்வொரு நாள் விவாதம் பற்றியும் சசிகலா தரப்பினர் உன்னிப்பாக கவனித்துவந்தனர். முக்கிய விவரங்கள் சிறைச்சாலையில் இருந்த சசிகலாவுக்கும் தெரிவிக்கப்பட்டன. இடையில், தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி இருந்தவரை கொடநாடு விவகாரத்தில் உண்மை வெளியே வராது என்று நம்பினார் சசிகலா. அப்படியே நகர்ந்தது. தற்போது தி.மு.க தேர்தலில் ஜெயித்து, ஆட்சியில் அமர்ந்ததும் கொடநாடு எஸ்டேட் விவகாரத்தில் கூடுதல் விசாரணை நடத்த ஆரம்பித்துவிட்டனர்.

இந்த நேரத்தில், சசிகலா தனது பங்குக்கு ஏதாவது பேசுவார் என்று அவரது ஆதரவு பிரமுகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், சசிகலா வெளிப்படையாக எந்த ரியாக்‌ஷனையும் காட்டவில்லை. ஆகஸ்ட் 18-ம் தேதியன்று சசிகலாவுக்குப் பிறந்தநாள். அன்றைய தினம் அ.தி.மு-வின் முன்னணித் தலைவர்கள் பலரும் சசிகலாவுடன் பேச நினைத்தார்கள். அவருடைய பி.ஏ -வான கார்த்திகேயன் வரையில்தான் அவர்களால் பேச முடிந்தது. மிக முக்கியத் தலைவர்கள் ஓரிருவர் சசிகலாவுடன் போனில் பேசியதாகச் சொல்கிறார்கள். மற்றபடி, பழைய பிரமுகர்களால் சசிலாவுடன் பேச முடியவில்லை. ``ஜெயலலிதா மறைந்த சூழ்நிலையில் எனது பிறந்தநாளைக் கொண்டாட விரும்பவில்லை. எனது நலம் விரும்பிகள் சமூக சேவைகளைச் செய்யவும்" என்று முன்கூட்டியே சொல்லியிருந்தார் சசிகலா. கொரோனா கட்டுப்பாட்டைச் சுட்டிக்காட்டி, சசிகலா கொண்டாட்டம் இல்லாமல் பார்த்துக்கொண்டார். அவரின் குடும்ப உறுப்பினர்கள் சிலரது அன்பு நச்சரிப்பைத் தொடர்ந்து பிறந்தநாளன்று மாலை சிறிய அளவில் கேக் வெட்டியிருக்கிறார். அதுவும்கூட கொண்டாடமாக நடக்கவில்லை. இருந்தபோதிலும், ட்விட்டரில் சென்னை டிரெண்டிங்கில் `ஹெச்.பி.டி.சின்னம்மா’ என்கிற வார்த்தை இடம்பிடித்தது. அன்றைய தினம் விரதம் மேற்கொண்ட சசிகலா, கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலைச் சம்பவம் தொடர்பான சட்ட ஆலோசனையில் பிஸியாக இருந்ததாக அவரின் குடும்பத்து பிரமுகர் ஒருவர் சொல்கிறார்.

சசிகலா - எடப்பாடி பழனிசாமி
சசிகலா - எடப்பாடி பழனிசாமி

ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, சசிகலா தரப்பினர்தான் எஸ்டேட் நிர்வாகத்தை கவனித்துவந்தனர். அங்கே நடந்த கொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து, என்னென்ன பொருள்கள் காணாமல் போயின என்பதெல்லாம் சசிகலாவுக்குத்தான் தெரியும். அவர் போலீஸிடம் தெரிவித்திருக்க வேண்டும். அல்லது கொடநாடு சம்பவம் தொடர்பாக, பெங்களூரு சிறைச்சாலைக்குப் போய் சசிகலாவிடம் விசாரித்திருக்க வேண்டும். வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் சிறைத் தண்டனை முடித்து இந்த வருடம் பிப்ரவரி 9-ம் தேதியன்று சசிகலா சென்னைக்கு வந்தார். அடுத்த சில நாள்களில் கொடநாடு வரப்போகிறார் என்று பேச்சு அடிபட்டது. ஆனால், வரவில்லை. சசிகலா தரப்பினரின் முழு கன்ட்ரோலில்தான் எஸ்டேட் நிர்வாகம் நடந்துவந்தது. இந்த வழக்கில் முக்கிய சாட்சியே சசிகலாதான். ஆனால், அவரை இதுவரை ஊட்டி போலீஸார் ஏன் விசாரிக்கவில்லை... அவரது கருத்தை கேட்டறிய வருவார்கள் என்று சசிகலா தரப்பினர் காத்திருந்தனர்.

கொடநாடு எஸ்டேட்
கொடநாடு எஸ்டேட்

இதுவரை வரவில்லை. இந்தநிலையில், அடுத்த சில நாள்களில் கொடநாடு எஸ்டேட் சம்பவங்கள் தொடர்பாகத் தனது கருத்தை முதன்முதலாக சசிகலா தெரிவிக்கவிருக்கிறார் என்று அவரது கோஷ்டியைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். இது தொடர்பாக, ஊட்டி நீதிமன்றத்தில் ஆஜராகி, தனக்குத் தெரிந்த தகவல்களைச் சொல்ல அவர் தயாராகிவருவதாகவும் சொல்லப்படுகிறது. அவரின் கோபப் பார்வை எடப்பாடி பழனிசாமி மீதுதான் இருக்கிறது. கொடநாடு சம்பவத்தில் கொள்ளையடிக்கப்பட்ட பொருள்கள் என்னென்ன... அவற்றின் பின்னணி விவரங்கள் ஆகியவை குறித்து அவர் சொல்லவிருப்பதாகத் தெரிகிறது. இது தொடர்பான சட்ட ஆலோசனையில் அவர் தீவிரமாகியிருக்கிறார். அதனால்தான், நடப்பதை கவனித்தபடி மௌனம் காக்கிறார். தனக்கென ஒரு நேரம் வரும்போது, அவர் வெடிகுண்டு தகவல்களை சேனல் ஒன்றின் மூலம் வெளியிடுவார் என்று சொல்கிறார்கள் அவரது கோஷ்டியினர்.

அடுத்த கட்டுரைக்கு