Published:Updated:

தலைவர் ரேஸ்: `டெல்லிக்குச் சென்ற பஞ்சாயத்து' - ஆட்டம் காண்கிறதா கே.எஸ்.அழகிரி பதவி?!

கே.எஸ்.அழகிரி

சத்தியமூர்த்தி பவன் பஞ்சாயத்து விமானம் மூலமாக டெல்லிக்குச் சென்றிருக்கிறது. இதையடுத்து தற்போதைய தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பதவிக்குச் சிக்கலா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

தலைவர் ரேஸ்: `டெல்லிக்குச் சென்ற பஞ்சாயத்து' - ஆட்டம் காண்கிறதா கே.எஸ்.அழகிரி பதவி?!

சத்தியமூர்த்தி பவன் பஞ்சாயத்து விமானம் மூலமாக டெல்லிக்குச் சென்றிருக்கிறது. இதையடுத்து தற்போதைய தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பதவிக்குச் சிக்கலா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

Published:Updated:
கே.எஸ்.அழகிரி

தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் போர் மேகங்கள் சூழ்ந்திருக்கின்றன. தலைவர் பதவியைப் பிடிப்பதற்காகத்தான் இந்தப் போர் தொடங்கியிருக்கிறது என்கிறார்கள் காங்கிரஸ் கட்சியினர். தமிழக காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி கடந்த 2019-ம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டார். கட்சி விதிமுறைகளின்படி அவரின் பதவிக்காலம் முடிவடைந்துவிட்டது.

இதையடுத்து கடந்த ஆண்டின் இறுதியிலிருந்தே, அந்தப் பதவிக்கான காய்நகர்த்தல்களை, தலைவர்கள் பலர் தொடங்கிவிட்டார்கள். அதற்கான பட்டியல் தயாரிக்கும் பணியையும் கட்சியின் தலைமை தீவிரமாக முன்னெடுத்தது. இதற்கிடையில் காங்கிரஸ் தேசியத் தலைவர் பொறுப்பு விஸ்வரூபம் எடுத்தது. இந்தப் பிரச்னை தலைமைக்குத் தலைவலியை ஏற்படுத்தியது. எனவே, அதில் கவனம் செலுத்தப்பட்டது.

மல்லிகார்ஜுன கார்கே!
மல்லிகார்ஜுன கார்கே!

இதனால் தலைவர் பதவிக்கான நிர்வாகிகள் நியமனத்துக்கான பணி கிடப்பில் போடப்பட்டது. இதை ஒருபுறம் தனக்குக் கிடைத்த வாய்ப்பாகக் கருதி அழகிரி நிம்மதியாக இருந்தார். இதற்கிடையில் ஒருவழியாகத் தேர்தல் நடத்தப்பட்டு, புதிய தலைவராக கார்கே பதவியேற்றுக்கொண்டுவிட்டார். தற்போது தமிழக காங்கிரஸ் கட்சிக்குப் புதிய தலைவரை நியமிக்கும் பணி வேகமெடுத்திருக்கிறது.

இதற்குக் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் தலைவர் பதவியைப் பிடிக்க தீவிரமாகக் காய்நகர்த்தத் தொடங்கிவிட்டார்கள். இதில் ஜோதிமணி, செல்லகுமார், கார்த்தி சிதம்பரம், ரூபி மனோகரன், செல்வப்பெருந்தகை, மாணிக்கம் தாகூர் ஆகியோரின் பெயர்கள் தீவிரமாக அடிபடுகின்றன. ஜோதிமணி, செல்லகுமார் ஆகியோருக்குத்தான் அதிக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் மற்றவர்களும் ரேஸிலிருந்து பின்வாங்குவதாகத் தெரியவில்லை.

ஆனால் மறுபுறம் தனது பதவியை விட்டுத்தர அழகிரி தரப்பு தயாராக இல்லை. அதன் விளைவாகத்தான் கடந்த நவம்பர் 15-ம் தேதி மோதல் ஏற்பட்டது. பிறகு கே.எஸ்.அழகிரிக்கு நெருக்கடி கொடுப்பதற்காக செல்வப்பெருந்தகை தலைமையில் புதிய அணி உருவானது. கடந்த நவம்பர் 19-ம் தேதி மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 105-வது பிறந்தநாள் விழா நடந்தது.

ஜோதிமணி
ஜோதிமணி

இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் சட்டமன்றத் தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் தலைவர்கள் திருநாவுக்கரசர், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தங்கபாலு, கிருஷ்ணசாமி ஆகியோர் கலந்துகொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் புறக்கணித்துவிட்டனர். அதன் பிறகு கடந்த 19-ம் தேதி சென்னை எழும்பூரிலுள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் ரகசியக் கூட்டம் நடத்தப்பட்டதாகச் சொல்லப்பட்டது.

இதில் அழகிரியைப் பதவியிலிருந்து இறக்குவதற்கு என்ன மாதிரியான திட்டங்களை வகுக்க வேண்டும் என்று விவாதிக்கப்பட்டதாம். அப்போது நிர்வாகிகள் நியமனத்திலுள்ள குளறுபடிகளை வெளியில் கொண்டுவரத் திட்டமிட்டிருக்கிறார்கள். குறிப்பாக, சென்னையில் அழகிரி தனது ஆதரவாளரான ரஞ்சன் குமார் குழுவினருக்கு அதிக பதவிகளைப் பெற்றுக்கொடுத்ததைக் கையில் எடுத்திருக்கிறார்கள்.

ரூபி மனோகரன்
ரூபி மனோகரன்

இதேபோல் அனைத்து மாவட்டங்களிலும் நடந்த நிர்வாகிகள் நியமனப் பிரச்னைகளைத் திரட்டி, ஒரு கடிதம் தயாரித்திருக்கிறார்கள். இதை கார்கேவிடம் வழங்குவதற்காக, கடந்த 20-ம் தேதி டெல்லிக்கு விமானத்தில் புறப்பட்டுச் சென்றார்கள் என்கிறார்கள். இதனால் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பதவியிலிருந்து நீக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

இது குறித்து நம்மிடம் பேசிய காங்கிரஸ் மூத்த நிர்வாகி ஒருவர், "மாநில காங்கிரஸ் தலைவர்களைக் கட்டுக்குள்வைக்க வேண்டும் என்று முடிவைக் கட்சித் தலைமை எப்போதோ எடுத்துவிட்டது. இதற்கு ஓ.எஸ்.ராஜசேகர் ரெட்டி தலைமைக்குக் கட்டுப்படாமல் செயல்பட்டதே காரணம். தமிழகத்தைப் பொறுத்தவரை மாநிலத் தலைவர் எப்போதோ மாற்றப்பட்டிருக்க வேண்டும்.

சத்தியமூர்த்தி பவன் - காங்கிரஸ்
சத்தியமூர்த்தி பவன் - காங்கிரஸ்

அகில இந்திய தலைவர் தேர்தல், அழகிரி அனைவரையும் அனுசரித்துச் சொல்லக்கூடியவர் என்ற இமேஜ் போன்ற காரணங்களால் சற்று தாமதம் ஏற்பட்டிருக்கிறது. அது சமீபத்தில் நடந்த மோதலுடன் முடிந்துவிட்டது. செல்வப்பெருந்தகை தலைமையிலான குழுவினர் நிர்வாகிகள் நியமனத்தில் அழகிரி செய்த குளறுபடிகள் குறித்த பட்டியலைத் தயாரித்து, டெல்லிக்கு எடுத்துச்சென்றிருக்கிறார்கள். ஏற்கெனவே அவரை மாற்றத் தலைமை யோசித்துவரும் நிலையில் அடுக்கடுக்காகப் புகார் செல்வது, அவருக்குப் பின்னடைவை ஏற்படுத்தலாம்" என்றார். என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!