Published:Updated:

கொடநாடு வழக்கு: சயானின் மூன்று மணி நேர ரகசிய வாக்குமூலம்; கலக்கத்தில் அதிமுக-வினர்?!

கொடநாடு
கொடநாடு

நீலகிரி மாவட்டம், ஊட்டியிலுள்ள பழைய எஸ்.பி அலுவலகத்தில் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் தொடர்ந்து மூன்று மணி நேரம் சயான் அளித்த ரகசிய வாக்குமூலத்தால் அதிமுக-வினர் கலக்கத்தில் உள்ளனர்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் அவரின் தோழி சசிகலாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை தொடர்பாக வாளையார் மனோஜ், சயான் உட்பட 10 பேரைக் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டனர். இவர்கள்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, இந்த வழக்கின் விசாரணை மூன்று ஆண்டுகளாக ஊட்டியிலுள்ள நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.

கொடநாடு கொலை வழக்கு: எடப்பாடி பழனிசாமி மீது கொலைக் குற்றம் சுமத்திய மனோஜுக்கு ஜாமீன்!
கொடநாடு
கொடநாடு

இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளிகளான சயான், வாளையார் மனோஜ் இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்து, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது கொலைக் குற்றம் சுமத்தி பேட்டியளித்தனர். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக சயான், வாளையார் மனோஜைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த மாதம் இந்த இரண்டு பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.

இந்த வழக்கில் மறு விசாரணை நடத்த வேண்டும் என சயான் தரப்பில் கோரப்பட்டிருந்த நிலையில், கூடுதல் விசாரணையை மேற்கொள்ள காவல்துறை முடிவு செய்தது. அதன்படி நீலகிரி மாவட்டம் ஊட்டியிலுள்ள பழையை எஸ்.பி அலுவலகமான நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு அலுவகத்துக்கு பலத்த பாதுகாப்புடன் இன்று மாலை 3:30 மணிக்கு சயானை அழைத்து வந்து ரகசிய வாக்குமூலம் பெற்றனர்.

கொடநாடு வழக்கு
கொடநாடு வழக்கு

நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர் (குன்னூர்), ஆய்வாளர் (கோத்தகிரி) ஆகியோர் முன்னிலையில் தொடர்ந்து மூன்று மணி நேரம் பல தகவல்களை வாக்குமூலமாக சயான் தெரிவித்தார். இந்த வாக்குமூலத்தில், மர வியாபாரியும் அதிமுக வர்த்தக அணி மாநில உறுப்பினருமான சஜ்ஜீவன், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்தும் கூறியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இந்த வழக்கின் அடுத்தகட்ட நகர்வு இருக்கும் என்பதால் அதிமுக-வின் சில முக்கிய நிர்வாகிகள் கலக்கத்தில் இருப்பதாக உள்ளூர் அதிமுக-வினரால் சொல்லப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு