Published:Updated:

வெளிநாடு செல்ல செக்; பேட்டி, அறிக்கைக்கு நோ! - 106 நாள்களுக்குப் பிறகு ஜாமீனில் வருகிறார், ப.சி

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள வழக்கில், ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

ப. சிதம்பரம்
ப. சிதம்பரம்

ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு, வெளிநாட்டு முதலீடுகளை முறைகேடாகப் பெறுவதில் கார்த்தி சிதம்பரம் உதவினார் என்றும், அவருக்கு ப.சிதம்பரம் துணையிருந்தார் எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா என்பது பீட்டர் மற்றும் இந்திராணி முகர்ஜி ஆகியோருக்குச் சொந்தமானது.

ப. சிதம்பரம்
ப. சிதம்பரம்

தற்போது சிறையில் இருக்கும் இந்திராணி முகர்ஜி அளித்த வாக்குமூலத்தின் பேரில், ப.சிதம்பரத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் சி.பி.ஐ அதிகாரிகள் கைதுசெய்து ,செப்டம்பர் 5-ம் தேதி டெல்லி திகார் சிறையில் அடைத்தனர். அப்போதிலிருந்து மூன்று மாதங்களாக ப.சிதம்பரம் சிறையில் இருந்துவருகிறார்.

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு விவகாரத்தில் சிபிஐ-யும், அமலாக்கத்துறையும் ப.சிதம்பரம் மீது தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவந்தன. இதில், சிபிஐ பதிவு செய்த வழக்கில், சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. இருந்தும், அமலாக்கத்துறையினர் பதிவுசெய்த வழக்கினால் சிதம்பரம் தொடர்ந்து சிறையிலேயே இருந்துவந்தார்.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

முன்னதாக, அமலாக்கத்துறையினர் தன்மீது பதிவுசெய்துள்ள வழக்கிலிருந்து ஜாமீன் வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார் சிதம்பரம். ஆனால், நீதிமன்றம் அவரது மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டது. இதையடுத்து, அதே ஜாமீன் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார் சிதம்பரம்.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு... சிதம்பரத்தைச் சிக்கவைத்த பத்திரிகையாளர் சொன்னது என்ன?

அந்த வழக்கு, இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பானுமதி, போபண்ணா, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. சில நிமிட விவாதங்களுக்குப் பிறகு ப.சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை பதிவுசெய்துள்ள வழக்கிலிருந்து ஜாமீன் வழங்கப்பட்டு, சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. ப. சிதம்பரம் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும், வெளியில் சென்று எந்த ஊடகத்துக்கும் பேட்டியளிக்கக்கூடாது, வெளிநாடு செல்லக்கூடாது, அவரது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும்.

ப. சிதம்பரம்
ப. சிதம்பரம்

வெளியில் சென்ற பிறகு, தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி, தன் மீது உள்ள வழக்கின் சாட்சிகளைக் கலைக்கவோ, சேதப்படுத்தவோ கூடாது எனத் தெரிவித்துள்ளனர். மேலும், இந்தத் தீர்ப்பு ப.சிதம்பரம் மீதுள்ள பிற வழக்குகளில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.