Published:Updated:

லஞ்ச ஒழிப்புத்துறை வளையத்தில் சென்னை மாநகராட்சி!

சென்னை மாநகராட்சி!
பிரீமியம் ஸ்டோரி
சென்னை மாநகராட்சி!

முதலில் கோவை... அடுத்து சென்னை...

லஞ்ச ஒழிப்புத்துறை வளையத்தில் சென்னை மாநகராட்சி!

முதலில் கோவை... அடுத்து சென்னை...

Published:Updated:
சென்னை மாநகராட்சி!
பிரீமியம் ஸ்டோரி
சென்னை மாநகராட்சி!

‘‘கோவை மாநகராட்சியில் நடந்த முறைகேடுகள் அம்பலமானதைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் கட்டுப்பாட்டிலிருந்த சென்னை மாநகராட்சியில் நடந்த முறைகேடுகளும் விரைவில் வெளியாகும்’’ என்று முன்கூட்டியே சிக்னல் கொடுக்கிறார்கள் சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் சில அதிகாரிகள்.

வேலுமணிக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு நடத்திய அதே நேரத்தில், சென்னை மாநகராட்சியின் தலைமைப் பொறியாளராக இருக்கும் நந்தகுமாரின் வீட்டிலும் சோதனை நடந்தது. சென்னை மாநகராட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளில் சுமார் 6,000 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டப்பணிகளில் நடந்த முறைகேடுகளே இந்த ரெய்டுக்குக் காரணம் என்று கூறப்பட்டது.

“இந்த விவகாரத்தில் வேறு சில அதிகாரிகளுக்கும் பங்கிருக்கிறது” என்று தொடங்கிய அதிகாரிகள் சிலர், ‘‘கடந்த ஆட்சியில் ஆளும் தரப்புக்கு நெருக்கமாக இருந்த சில அதிகாரிகள் மட்டுமே சென்னை மாநகராட்சியில் ஆதிக்கம் செலுத்தினார்கள். இவர்களுக்கு இடையில் ஏற்பட்ட அதிகார யுத்தம் காரணமாக ஒருவரை ஒருவர் போட்டுக்கொடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை வரை புகார்கள் சென்றன. மாநகராட்சி தலைமைப் பொறியாளரான நந்தகுமாரை அந்தப் பதவியிலிருந்து மாற்ற ஒரு டீம் கடுமையாக வேலை செய்தது. ஆட்சி மாறியதும் அவர் மாற்றப்படுவார் என்று பலரும் எதிர்பார்த்தார்கள். அது நடக்கவில்லை.

மாநகராட்சிக்குப் பிரதான வருவாயை ஈட்டித்தரும் கட்டட வரி வசூல், கட்டடத்துக்கான திட்ட வரி ஆகியவை செயற்பொறியாளர் முருகன் வசம் உள்ளது. வரி வசூலிலும், கட்டடத் திட்டங்களுக்கான அப்ரூவல் கொடுத்ததிலும் பல முறைகேடுகள் நடந்துள்ளன. தவிர, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, பல்வேறு திட்டங்களின்கீழ் அரசு நிதி ஒதுக்கியது. அதில் பெரும் பங்கைக் கையாண்டது முருகன்தான். கொரோனா காலகட்டத்தில் நோயாளிகளுக்கும் பணியாளர்களுக்கும் விநியோகிக்கப்பட்ட ஹோட்டல் உணவுக்கு கமிஷன் கேட்ட விவகாரத்திலும் முருகனின் பெயர் அடிபட்டது. லஞ்ச ஒழிப்புத்துறை வரை இது குறித்த புகார்கள் சென்றுள்ளன. கடந்த ஆண்டு, ஆகஸ்ட் மாதத்தில் 2.2 கோடி மதிப்பில் 5,000 மெத்தைகள் வாங்கப்பட்டன. இவை எதற்காக வாங்கப்பட்டன, எங்கு கொண்டு சென்றார்கள் என்ற விவரமே தெரியவில்லை. இந்த விவகாரத்திலும் முருகன் மீது புகார் எழுந்திருக்கிறது’’ என்கிறார்கள்.

லஞ்ச ஒழிப்புத்துறை வளையத்தில் சென்னை மாநகராட்சி!

சென்னை மாநகராட்சியின் ஒப்பந்ததாரர்கள் சிலரோ, ‘‘உள்ளாட்சித்துறை அமைச்சராக வேலுமணி இருந்தபோது அவருக்கு நெருக்கமான நிறுவனங்களே சென்னை மாநகராட்சியின் பெரும்பாலான ஒப்பந்தங்களை எடுத்தன. மாநகராட்சிக்கு பேட்டரி வாகனங்கள் வாங்க கோவையைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் பங்கேற்ற மற்ற ஐந்து நிறுவனங்களின் விண்ணப்பங்களைத் தள்ளுபடி செய்தே, விதிமுறைகளை மீறி அந்த நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. அடையாறு கூவம் மழைநீர் வடிகால் நீட்டிப்புப் பணிக்கு ஏற்கெனவே 1,101 கோடி ரூபாய் ஒதுக்கிய நிலையில், பிரகாஷ் கமிஷனராக இருந்தபோது கூடுதலாக 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதிலும் முறைகேடு நடந்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்குப் புகார் சென்றிருக்கிறது’’ என்றார்கள்.

சென்னை மாநகராட்சியின் சில சீனியர் அதிகாரிகளோ, ‘‘தற்போது வேலுமணி விவகாரத்தில் சிக்கியுள்ள கே.சி.பி நிறுவனம், சென்னை மாநகராட்சி ஆணையராக கார்த்திகேயன் இருந்தபோதுதான் முதன்முதலில் இங்கு திட்டப்பணிகளை எடுத்துச் செய்தது. சாலைகள் போடுவது தொடங்கி தற்காலிக சுகாதாரப் பணியாளர்கள் நியமனம் வரை பல ஒப்பந்தங்களை கே.சி.பி நிறுவனமும், அதன் துணை நிறுவனங்களும் மேற்கொண்டன. அதேபோல், சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் விளம்பரப் பலகைகள் வைக்கும் ஒப்பந்தமும் கே.சி.பி நிறுவனத்தின் துணை நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. இதிலும் சத்தமில்லாமல் முறைகேடுகள் நடந்துள்ளன” என்கிறார்கள்.

வேலுமணி
வேலுமணி

மேற்கண்ட பணிகளில் கிடைத்த கமிஷன் தொகையைவைத்தே சென்னை மாநகராட்சியில் முக்கியப் பொறுப்பிலுள்ள ஓர் அதிகாரி, சென்னை அண்ணா சாலையில் ஒரு வணிக வளாகத்தையே வாங்கியிருக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்த முறைகேடுகள் அனைத்தையும் விரைவில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை செய்யவிருக்கிறார்கள் என்கிறது சென்னை மாநகராட்சி வட்டாரம்.

தனக்கு வரும் புகார்களை உடனுக்குடன் விசாரித்துவருகிறார் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி. அவரிடம் மேற்கண்ட புகார்கள் குறித்துப் பேசியபோது, ‘‘கடந்த ஆட்சியில் ஒப்பந்தங்கள் விடப்பட்டதில் நடந்த விதிமீறல்கள், மாநகராட்சிப் பணிகளில் நடந்த முறைகேடுகள் ஆகியவற்றை ஒன்றுவிடாமல் விசாரிப்போம். லஞ்ச ஒழிப்புத்துறையினரும் விசாரணை நடத்தியிருக்கிறார்கள். அவர்கள் தரும் அறிக்கையின் அடிப்படையிலும், நாங்கள் துறைரீதியாக நடத்தும் விசாரணையின் அடிப்படையிலும் தவறு செய்தவர்கள்மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

சிங்காரச் சென்னைக்குத் திட்டமிடும் தி.மு.க அரசு, சின்னாபின்னமாகிக் கிடக்கும் சென்னை மாநகராட்சி நிர்வாகத்தை முதலில் சீர்ப்படுத்த வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism