Election bannerElection banner
Published:Updated:

திருவொற்றியூரில் சீமான் முதல் ரஜினியின் `விவசாய’ தேர்தல் அறிக்கை வரை... கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்
கழுகார் அப்டேட்ஸ்

``அவசரமாக தலைமைச் செயலகம் செல்கிறேன். உமக்கான தகவல் வாட்ஸ்அப்பில் வந்து சேரும்’’ - நறுக்கென கூறிவிட்டு போனை `கட்’ செய்தார் கழுகார்.

திருவொற்றியூரில் சீமான்...
ஸ்டாலினை எதிர்த்து மன்சூர் அலிகான்!

2021 சட்டமன்றத் தேர்தலில் ஆலந்தூர் தொகுதியில் போட்டியிட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் முடிவு செய்திருந்தாராம். ஆனால், `திருவொற்றியூர் தொகுதியில் உழைக்கும் தொழிலாளர்கள், மத்தியதர வர்க்கத்தினர் அதிகம் இருப்பதால், அங்கு போட்டியிடுவது சாதகமாக இருக்கும்’ என்று சீமானுக்கு சீனியர்கள் சிலர் அட்வைஸ் செய்திருக்கிறார்கள்.

சீமான்
சீமான்

மேலும், 2015-ம் ஆண்டு சென்னை வெள்ள பாதிப்பின்போது, வடசென்னைப் பகுதிகளில் நாம் தமிழர் கட்சியினர் தீவிரமாகக் களப்பணியாற்றியதும், திருவொற்றியூர் தொகுதியைக் குறிவைக்க ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. இந்தத் திட்டத்தின்படி முடிவெடுக்கப்பட்டால் திருவொற்றியூரில் சீமானும், கொளத்தூரில் தி.மு.க தலைவர் ஸ்டாலினை எதிர்த்து மன்சூர் அலிகானும் களமிறங்கக்கூடும் என்கிறார்கள். திருவாரூர் தொகுதியில் உதயநிதி போட்டியிட்டால், அவரை எதிர்த்து இடும்பாவனம் கார்த்தியைக் களமிறக்கவும் சீமான் வசம் ஒரு திட்டம் இருக்கிறதாம்.

கமான்... கமான்... சீமான்!

நெல்லையில் ஒழியுமா கோஷ்டிப்பூசல்?

மறைந்த முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியனுக்கு அவரது சொந்த ஊரான நெல்லை மாவட்டம், கோவிந்தபேரியில் மணிமண்டபம் கட்டப்பட்டிருக்கிறது. மணிமண்டபத் திறப்புவிழாவுக்கானப் பணிகளை பி.ஹெச்.பாண்டியனின் குடும்பத்தினர் மேற்கொண்டிருக்கிறார்கள். திறப்புவிழாவில், பாண்டியனின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை முதல்வர் பழனிசாமி வெளியிடுகிறாராம்.

பழனிசாமி, பன்னீர் செல்வம்
பழனிசாமி, பன்னீர் செல்வம்

கூடவே, கட்சிரீதியாக இன்னொரு திட்டமும் தீட்டப்பட்டிருக்கிறது. நெல்லை மாவட்டத்தில் எடப்பாடி அணி, பன்னீர் அணி என இரு அணிகளாக அ.தி.மு.க பிரிந்து நிற்பதால், இந்தக் கோஷ்டிப்பூசலை முடிவுக்குக் கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்தப்படவிருக்கிறதாம். மணிமண்டப விழாவுக்கு வரும் எடப்பாடியும் பன்னீரும் நேரடியாகவே கட்சி நிர்வாகிகளிடம் இது குறித்துப் பேசவிருக்கிறார்கள். இதன் பிறகாவது கோஷ்டிப்பூசல் ஒழியும் என்பது நெல்லை அ.தி.மு.க-வினரின் எதிர்பார்ப்பு.

நெல்லையில் இனியேனும் தீருமா தொல்லை?!

புதிய வேளாண்மைச் சட்டங்கள்!
என்ன சொல்கிறது ரஜினி தேர்தல் அறிக்கை?

ரஜினி தொடங்கப்போகும் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்துத் திட்டமிட்டுவந்த ரஜினியின் குடும்ப நண்பர் தலைமையிலான ஆலோசனைக்குழு, விவசாயிகள் சங்கங்களின் முக்கியப் பிரதிநிதிகளுடனும் ஆலோசனை செய்துவருகிறது. சிறு, குறு விவசாயிகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்குவது, விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்வது என்றெல்லாம் ஆலோசனைகள் பெறப்பட்டிருக்கின்றனவாம்.

ரஜினி
ரஜினி

‘தேர்தல் அறிக்கையில் விவசாயம் தொடர்பான அம்சங்கள் மக்களைக் கவரும் வகையில் இருக்க வேண்டும்’ என ரஜினி உத்தரவிட்டிருப்பதால், அறிக்கை தயாரிக்கும் குழு வேகமெடுத்திருக்கிறது. இதற்கிடையே மத்திய அரசின் புதிய வேளாண்மைச் சட்டங்கள் தொடர்பாக விவசாய சங்கப் பிரதிநிதிகள் சிலர் ஆட்சேபம் தெரிவித்து, சில ஆலோசனைகளைச் சொல்ல... தலையைக் கவிழ்த்துக்கொண்டு மெளனமானதாம் குழு.

விவ‘சாயம்’ வெளுத்துப் போயிடும்னு நினைச்சிருப்பாங்களோ!

கமலின் `கூகுளாண்டவர்’ அவதாரம்!

கமல்ஹாசன் பிரசாரத்துக்கு செல்லுமிடங்களிலெல்லாம் அவருக்குக் கூட்டம் குவிகிறது. டிசம்பர் 16-ம் தேதி, கன்னியாகுமரி மாவட்டத்தில் கூடிய கூட்டத்தைப் பார்த்து ஏக மகிழ்ச்சியில் ஆழ்ந்தவர், காவல்கிணறு பகுதிக்குச் சென்று தொண்டர்களைச் சந்தித்து உரையாடியிருக்கிறார். இடையில் என்ன நடந்தது என்று தெரியவில்லை... நேராக நாகர்கோவில் சென்றுவிட்டார். இதனால் அஞ்சுகிராமம், மயிலாடி, சுசீந்திரம் ஊர்களில் செண்டை மேளத்துடன் காத்திருந்த நூற்றுக்கணக்கான தொண்டர்களும், கட்சி நிர்வாகிகளும் கடும் ஏமாற்றமடைந்தனர்.

திருவொற்றியூரில் சீமான் முதல் ரஜினியின் `விவசாய’ தேர்தல் அறிக்கை வரை... கழுகார் அப்டேட்ஸ்

அடுத்ததாக மீனவ கிராமங்களான தூத்தூர், தேங்காப்பட்டணம் பகுதிகளுக்குச் செல்ல கூகுள் மேப்பைப் பார்த்து பல கி.மீ சுற்றியிருக்கிறது கமல் தரப்பு. ``உள்ளூர் கட்சி நிர்வாகிகளிடம் எந்த ஆலோசனையும் கேட்காமல், எந்தத் தகவலும் கொடுக்காமல் தன்னிச்சையாகச் சுற்றுப்பயணம் செய்யலாமா? இப்போது அவர் சினிமா நடிகர் மட்டுமல்ல... கட்சியின் தலைவர்!” என்று புலம்புகிறார்கள் நிர்வாகிகள்.

பிக் பாஸ் சார்... கேமராவைக் கொஞ்சம் உள்ளூர்ப் பக்கமும் திருப்புங்க!

``பா.ஜ.க கொடி பறக்குதா?’’
விளாசித்தள்ளிய ஸ்டாலின்!

தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பல கிராமங்களில் பா.ஜ.க-வினர் கொடிக்கம்பம் நட்டிருக்கிறாகள். இது தொடர்பாக தஞ்சை எம்.எல்.ஏ-வும், நகரச் செயலாளருமான டி.கே.ஜி.நீலமேகத்திடம் பேசிய ஸ்டாலின், ``தஞ்சாவூர் முழுக்க பா.ஜ.க கொடி பறக்குதாமே?’’ என்றிருக்கிறார். ஆர்வமான நீலமேகமும் வெள்ளந்தியாக, ``ஆமாங்க தலைவரே... அவங்க சுறுசுறுப்பா இருக்காங்க.

நீலமேகம்
நீலமேகம்
ம.அரவிந்த்

மாவட்டம் முழுக்கவும் கொடிக்கம்பம் நட்டுட்டாங்க’’ என்றாராம். கடுப்பான ஸ்டாலின், ``நீங்க பேசிக்கிட்டிருக்குறது பா.ஜ.க தலைவர்கிட்ட இல்லை... தி.மு.க தலைவர்கிட்ட. வீட்டுல உட்கார்ந்துக்கிட்டு என்ன செஞ்சுக்கிட்டு இருக்கீங்க?’’ என்று வெளுத்து வாங்கிவிட்டாராம். ஆடிப்போன நீலமேகம், தற்போது வார்டு வார்டாகச் சுற்றி வந்து தி.மு.க கொடியை ஏற்றிக்கொண்டிருக்கிறார்.

இடி இடின்னு இடிச்சாத்தான் கொடி பிடிப்பாரோ!

கொங்கு ஏரியாவில் அடுத்த ரெய்டு ரெடி?!

நாமக்கல், ஈரோட்டை மையமாகக்கொண்டு, ஆயிரம் கோடி முதல் ஐயாயிரம் கோடி ரூபாய் வரை பிஸினஸ் செய்யும் ஆறு நிறுவனங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் சத்தியமூர்த்தியின் நிறுவனம். ஏற்கெனவே அங்கே வருமான வரித்துறை ரெய்டு நடந்துவிட்ட நிலையில், இப்போது ஶ்ரீபதி குழுமம் குறிவைக்கப்பட்டிருக்கிறது. இதனால், மீதமிருக்கும் நான்கு நிறுவனங்களின் தரப்பினரும் பீதியில் இருக்கிறார்களாம்.

திருவொற்றியூரில் சீமான் முதல் ரஜினியின் `விவசாய’ தேர்தல் அறிக்கை வரை... கழுகார் அப்டேட்ஸ்

குறிப்பாக, ஈரோடு அருகிலுள்ள பிரபல நிறுவனம் ஒன்று, கரூர் மாவட்டத்தில் சுமார் 380 கோடி ரூபாய் மதிப்புள்ள செக் டேம்களை கட்டுவதற்கான ஒப்பந்தத்தை எடுப்பதற்காக சிலபல கவனிப்புகளை நடத்தியிருக்கிறது. இந்தத் தகவலை தோண்டியெடுத்திருக்கும் வருமான வரித்துறை அடுத்தடுத்த ரெய்டுகளுக்குத் தயாராகிவருகிறது என்கிறார்கள்.

செக் டேம் கட்டுறவங்களை ‘செக்’ பண்ண வர்றாங்கன்னு சொல்லுங்க!

வீரபாண்டித் தொகுதியில்
முட்டிக்கொள்ளும் வாரிசுகள்!

சேலம் மாவட்டத்தில் வீரபாண்டி ஆறுமுகத்தின் வாரிசுகளான வீரபாண்டி ராஜா, பிரபு மற்றும் உறவினரான பாரப்பட்டி சுரேஷ் மூவருமே வீரபாண்டித் தொகுதியைக் குறிவைத்திருக்கிறார்களாம். `யார் தீவிரமாகக் களப்பணியாற்றுகிறீர்களோ, அவர்களுக்கு சீட்’ என்று தி.மு.க தலைமை உத்தரவாதம் அளித்திருப்பதால், குடும்ப வாரிசுகள் மத்தியில் கடும் போட்டி நடக்கிறது.

திருவொற்றியூரில் சீமான் முதல் ரஜினியின் `விவசாய’ தேர்தல் அறிக்கை வரை... கழுகார் அப்டேட்ஸ்

சேலம்வாசிகளான ராஜாவும், பாரப்பட்டி சுரேஷும் ரெகுலர் ரூட்டில் சென்று கட்சி வேலைகளைப் பார்க்க... சென்னைவாசியான பிரபுவோ ஷார்ட்கட்டில் சென்று உதயநிதியுடன் கைகோத்தார். இதையடுத்து, வீரபாண்டித் தொகுதியில் பிரபுவின் கை ஓங்கிவருவதாக, சேலம் தி.மு.க-வில் பேச்சு எழுந்திருக்கிறது. இதனால், சீட்டு எதிர்பார்த்துக் காத்திருந்த மற்ற இரு வாரிசுப் பிரமுகர்களும் கடும் அதிருப்தியில் இருக்கிறார்களாம்.

வீரபாண்டிக் கோட்டையில ஓட்டையைப் போட்டுடப் போறாங்க!

ஓய்வில் ஐ.பெரியசாமி...
நலம் விசாரித்த ஸ்டாலின்!

தி.மு.க-வில் `விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ பிரசாரத்துக்காக திண்டுக்கல் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்துவந்த அந்தக் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே ஓய்வில் இருக்கிறாராம். பெரியசாமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், `வெயிலில் சுற்றியதால் உடல் முழுவதும் சூட்டுக் கொப்புளங்கள் தோன்றியிருக்கின்றன; வெயில் அதிகம் படக் கூடாது’ என்று அட்வைஸ் செய்திருக்கிறார்களாம்.

ஐ.பெரியசாமி
ஐ.பெரியசாமி

இதையடுத்து, செல்போனில் பெரியசாமியிடம் நலம் விசாரித்த ஸ்டாலின், `கொஞ்ச நாளைக்கு நீங்க வெளியே வர வேண்டாம். ரெஸ்ட் எடுங்க போதும்’ கனிவாக ஆறுதல் கூறியிருக்கிறார்.

சூரியனையே வெயில் சுட்டுருச்சுனு சொல்லுங்க!

மருமகன் கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்!

ஷாக் அடிக்கும் வாரியத்தில் பொருளாதார நஷ்டங்களைச் சமாளிக்க, பல்வேறு பணியாளர்களை ‘அவுட் சோர்ஸிங்’கில் எடுப்பது உள்ளிட்ட பல்வேறு புதுப்புதுத் திட்டங்களை அதிகாரிகள் தீட்டிவருகிறார்கள். இவை ஒவ்வொன்றிலும் `மருமகன் தலையீடு மிகவும் அதிகமாக இருக்கிறது’ என்று புலம்புகிறது அதிகாரிகள் தரப்பு.``நாங்க குறைஞ்ச கூலிக்கு வேலைக்கு ஆளை எடுக்குறோம்... பல சமயத்துல கரன்ட் கம்பம் தூக்குறது, நடறதுக்கெல்லாம் வட இந்தியத் தொழிலாளர்களை நாள் கூலி அடிப்படையில வேலைக்கு எடுக்குறோம். அதுக்கெல்லாம் `நாங்க அனுப்புற ஆளுங்களைத்தான் வேலைக்கு எடுக்கணும்.

உற்சாகத்தில் பன்னீர் ஆதரவாளர்கள் முதல் மத்திய அமைச்சர்களைக் களமிறக்கும் பாஜக வரை! கழுகார் அப்டேட்ஸ்

அதுக்கும் குறிப்பிட்ட தொகையை கமிஷனா கொடுக்குணும்’னா என்ன செய்யறது?” என்று புலம்புகிறார்கள். இதேபோல மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறையின் கட்டுப்பாட்டிலிருக்கும் டாஸ்மாக் கடைகளைக் கட்டுப்படுத்துவதிலும் `மருமகன்’ டார்ச்சர் செய்துவிடுகிறார் என்று புலம்புகிறார்கள் துறை சார்ந்த அதிகாரிகள். ஏற்கெனவே, நகர திட்டமைப்புத்துறையிலும் துறை சார்ந்தவரின் மருமகன் தலையீடு இருப்பதாகப் புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

வர வர நாட்டுல மருமகன்களோட தொந்தரவு ஜாஸ்தியாப் போயிடுச்சே!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு