Published:Updated:

``ஜெயலலிதா இறந்தபோது சசிகலாதான் அதிமுக-வைக் காப்பாற்றினார்!” - மன்னார்குடியில் சீமான் பேச்சு

சீமான்
News
சீமான்

``அம்மையார் சசிகலாமீது எனக்கு மிகுந்த மதிப்பு உண்டு. எங்களுக்கு குடும்பரீதியான உறவு உண்டு. நான் அவரைச் சந்தித்தபோது... ஏன் சந்தித்தீர்கள் / எதற்காகச் சந்தித்தீர்கள் எனக் கடும் விமர்சனங்கள் எழுந்தன, இது எனது விருப்பம்” என்கிறார் சீமான்.

நகராட்சி, மாநாகராட்சித் தேர்தல்களை எதிர்கொள்வது தொடர்பாக நாம் தமிழர் கட்சியினரின் ஆலோசனைக் கூட்டம், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அதிமுக-வின் ஒருங்கிணைப்பாளர் ஒ,பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி குறித்துக் கடும் விமர்சனங்களை முன்வைத்ததோடு, சசிகலாவுக்கு ஆதரவாகவும் சில கருத்துகளைத் தெரிவித்தார். சசிகலா குடும்பத்தினரின் அதிகார மையமாகவும், அடையாளமாகவும் விளங்கும் மன்னார்குடியில் சீமான் இவ்வாறு பேசியிருப்பது அரசியல் வட்டாரங்களில் அனலைக் கிளப்பிவருகிறது. சீமான் இப்படிப் பேசியிருப்பது குறிப்பாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களைக் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது.

சீமான்
சீமான்

ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ``அதிமுக என்ற கட்சி இருக்கிறதா... இயங்குகிறதா என்றே தெரியவில்லை. அதிமுக எதிர்க்கட்சிக்கான வேலையைச் செய்யவில்லை. எதிர்க்கட்சியாக செயல்படவே இல்லை. ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. நாங்கள்தான் தமிழ்நாட்டில் எதிரிக்கட்சியாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம். நாங்கள் கேள்வி கேட்பதால்தான் ஆட்சியாளர்கள், சில வேலைகளையாவது செய்துகொண்டிருக்கிறார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நான் ஊடகங்களைச் சந்தித்து அரசின் செயல்பாடுகள் குறித்து வெளிப்படையாகக் கருத்துகளை தெரிவித்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் ஓ.பி.எஸ்-ஸும் இ.பி.எஸ்-ஸும் ஊடகங்களைச் சந்திப்பதே இல்லை. தமிழக அரசின் செயல்பாடுகளைக் கேள்விகள் கேட்கவோ, குறைசொல்லவோ, இவர்களுக்கு எந்த ஒரு தகுதியும் உரிமையும் இல்லை. அதிமுக-வுக்குள் நடக்கும் விவகாரங்கள் குறித்து நான் பேச விரும்பவில்லை. ஆனால் அம்மையார் சசிகலாமீது எனக்கு மிகுந்த மதிப்பு உண்டு. எங்களுக்கு குடும்பரீதியான உறவு உண்டு. நான் அவரைச் சந்தித்தபோது... ஏன் சந்தித்தீர்கள், எதற்காகச் சந்திந்தீர்கள் எனக் கடும் விமர்சனங்கள் எழுந்தன. இது எனது விருப்பம். சசிகலா இல்லையென்றால் அதிமுக என்ற கட்சியை இத்தனை காலம் கொண்டு வந்திருக்க முடியாது என்பதுதான் எனது கருத்து. ஜெயலலிதா இறந்தபோது, அந்தக் கட்சியைக் காப்பாற்றி, பதவியைத் தக்கவைத்ததே சசிகலாதான். இது எல்லோருக்கும் தெரியும். எடப்பாடி பழனிசாமிக்கும் நல்லாவே தெரியும்.

அதிமுக செயற்குழுவில் பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி
அதிமுக செயற்குழுவில் பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி

ஆனால், இப்போது தங்களோட வசதிக்கு ஏற்ப பேசுகிறார்கள்’’ எனத் தெரிவித்த சீமான், காவல் நிலைய மரணம், ஏழு தமிழர் விடுதலை உள்ளிட்டவை குறித்துக் காரசாரமாகப் பேசினார். ``காவல் நிலைய மரணங்கள் குறித்த வழக்குகளில் தி.மு.க. இரட்டை நிலைப்பாடு எடுக்கிறது. எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஜெயராஜ், பெனிக்ஸ் மரணத்துக்கு நீதி கேட்ட தி.மு.க., தற்போது மாணவர் மணிகண்டன் மரணத்துக்கு நீதி கேட்டுப் போராடுபவர்களை அடக்குகிறது. நீதிபதிகள் மக்களுக்குப் பொதுவானவர்களாக இருக்க வேண்டும். நடுநிலையுடன் செயல்பட வேண்டும். ஆனால் சில நீதிபதிகள் திமுக-வின் மாவட்டச் செயலாளர்களைவிடவும் தமிழக முதல்வர் ஸ்டாலினைப் புகழ்கிறார்கள்.

சீமான்
சீமான்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்துவரும் ஏழு தமிழர்கள் விடுதலையில் திமுக அரசு நேர்மையாகச் செயல்படவில்லை. ஆளுநரின் அனுமதிக்காகக் காத்திருக்கிறோம் என சட்ட அமைச்சர் ரகுபதி சொல்கிறார். 35 ஆண்டுகள் காத்திருந்தது போதாதா? சட்ட விதி 161-ஐ பயன்படுத்தி, மாநில அரசாங்கமே இவர்களை விடுதலை செய்ய முடியும். ஆளுநரின் அனுமதிக்காகக் காத்திருக்கவேண்டியதில்லை என ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் திமுக தலைவர் கருணாநிதி ஆலோசனை சொன்னார். தற்போது திமுக-தானே இங்கு ஆளுங்கட்சியாக இருக்கிறது. ஏன் அதைச் செய்ய மறுக்கிறார்கள்?

மாரிதாஸ் கைதுசெய்யப்பட்ட விவகாரம் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது. எதிர்க்கட்சியாக இருந்தபோது கருத்துச் சுதந்திரம் குறித்துப் பேசிய தி.மு.க-வினர், தற்போது கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை நெரிக்கின்றனர். ஐந்து மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்காகத்தான் மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள நகராட்சி, மாநகராட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும்” எனத் தெரிவித்தார்.