Election bannerElection banner
Published:Updated:

`கடன் தள்ளுபடி செய்தாலும் விவசாயி கடனாளியாக இருக்கிறான்!’ - சீமான்

சீமான்
சீமான்

`விவசாயக் கடன் தள்ளுபடி செய்தாலும் விவசாயி கடனாளியாக இருக்கிறான். அடிப்படையில் பிரச்னைகளைச் சரிசெய்ய வேண்டும்’ என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலை அடுத்த முடிகரை எனும் கிராமத்திலுள்ள வீரகாளி கோயிலில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் மகனுக்கு காதணி விழா நடைபெற்றது. 108 ஆட்டுக்கிடாய் வெட்டப்பட்டு கோயில் வெளியே விருந்தும் வைக்கப்பட்டது. பல்வேறு மாவட்டங்களில் இருந்துவந்த நாம் தமிழர் கட்சியினர் ஃபிளெக்ஸ் பேனர்களை வைத்திருந்தனர். இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட முக்கிய சினிமா பிரபலங்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ``எனது இல்ல காதணி விழாவுக்காகவும், குலதெய்வ வழிபாட்டுக்காகவும் இங்கு வந்தோம். கிடாய் வெட்டி விருந்துவைத்து விழா நடத்தி மகிழ்ச்சியோடு நிற்கிறேன்.

சீமான்
சீமான்

மதுரை தோப்பூரில் 20 லட்சம் கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார்கள்; வந்ததா? ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையிலும் என்ன செய்தார்கள்... ஒரு வெற்று அறிவிப்பு, பசப்பு வார்த்தைகள்தான் செய்கின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிதியை ஏன் நிறுத்த வேண்டும்? மத்திய அரசு செய்வதெல்லாம் ஏமாற்று வேலை. தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால், வெற்றி நடைபோடும். பெட்ரோல், டீசல் விலை குறித்து சுப்பிரமணியன் சுவாமி சொன்னதுபோல ராவணன் நாடு, சீதா நாடுகளிலெல்லாம் விலை குறைவாக இருக்கு. ராமன் நாட்டில் விலை ரொம்ப கூடுதலாக இருக்கு.

``வைகோவும் விஜயகாந்தும் கரைந்துபோய்விட்டனர்!’’ - சொல்கிறார் சீமான்

இவற்றையெல்லாம் தனியார்மயம் ஆக்கியதால், அவர்களுக்கு நினைத்த நேரம்போல் விலையேற்றுவது வாடிக்கையாகிவிட்டது. கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், பெட்ரோல் - டீசல் விலை உயர்கிறது. அன்று இருட்டில் முகமூடி போட்டுக்கொண்டு கத்தியைக் காட்டி மிரட்டி கொள்ளைக்காரன் கொள்ளையடித்தான். இப்போது கட்டையைக் குறுக்கே போட்டு பகல் கொள்ளைக்காரனாக கொள்ளையடிப்பவர் இருக்கிறார்கள். இரண்டுக்கும் வித்தியாசம் இல்லை. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் புதைந்த மரம், செடி, கொடிகள் மக்கி கரியானதும் இடைவெளியில் புகுந்த காற்று மீத்தேனாகவும் பூமிக்குள் மறைந்திருக்கிறது. அதுபோலதான் கீழடியும். தொல்லியல் ஆய்வுகளை வரவேற்கிறேன்.

கிடாய் விருந்து
கிடாய் விருந்து

விவசாயிகள் கடனாளியாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நெல்லை வாங்கி விற்பவனும், தவிடாக்கியவனும்கூட பணகாரர்களாக ஆகியிருக்கிறார்கள். விளைவித்தவன் கடனாளியாகக் காரணம் என்ன? ஒவ்வொரு முறையும் விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்தாலும், விவசாயி கடனாளியாக ஆகிறான். அடிப்படையில் பிரச்னை இருக்கிறது. உழவன் உற்பத்தி செய்த பொருளுக்கு அவனே விலை நிர்ணயிக்க முடியாத நிலையை மாற்ற வேண்டும்" என்று சீமான் கூறினார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு