Election bannerElection banner
Published:Updated:

`ரஜினிக்கு என் வாழ்த்துகள்!’ - வரவேற்கும் சீமான்

சீமான்
சீமான்

`அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை’ என்று அறிவித்திருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். இதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

தமிழக அரசியலையே புரட்டிப்போட்டுவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த், தான் அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என்று அறிவித்திருக்கிறார். ரஜினியின் இந்த திடீர் அறிவிப்பு, தமிழக அரசிலையே தகிக்கவைத்திருக்கிறது. ஹைதராபாத்தில் நடந்த `அண்ணாத்த’ ஷூட்டிங்கில், நான்கு பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஷூட்டிங் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன. ரஜினிக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என்றாலும், ரத்த அழுத்தத்தில் திடீர் மாறுபாடு ஏற்பட்டு ஹைதராபாத்திலுள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூன்று நாள்கள் சிகிச்சையிலிருந்த ரஜினி, டிசம்பர் 27-ம் தேதி சென்னை திரும்பினார்.

ரஜினி
ரஜினி

`ஒரு வாரம் முழு ஓய்வில் இருக்க வேண்டும், அதிக பணிகளை மேற்கொள்ளக் கூடாது’ என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதனால், திட்டமிட்டபடி டிசம்பர் 31-ம் தேதி, தன் அரசியல் கட்சி பற்றிய அறிவிப்பை ரஜினி வெளியிடுவாரா என்கிற கேள்வி எழுந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக, `அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை’ என இன்று அறிவித்திருக்கிறார் ரஜினி.

`கட்சி தொடங்கவில்லை; கூட வருபவர்களை பலிகடாவாக்க விரும்பவில்லை!’ - ரஜினி

ரஜினி அரசியல் கட்சியைத் தொடங்கினால், அவருக்கு எதிரான அரசியலைத் தீவிரமாக முன்னெடுக்கப்போவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பகிரங்கமாகவே கூறியிருந்தார். `இது மராட்டியனா, மானத்தமிழனா என்பதற்கான போர்’ என்று வெளிப்படையாகவே ரஜினியின் மீது தாக்குதலைத் தொடுத்திருந்தார் சீமான். இதைத் தொடர்ந்து சீமானிடமிருந்து ரஜினியைக் கடுமையாகத் தாக்கி, பேட்டிகளும் வந்தன. இந்தச் சூழலில், அரசியல் கட்சி ஆரம்பிக்கப்போவதில்லை என்று அறிவித்திருக்கிறார் ரஜினி. ரஜினியின் இந்த அறிவிப்பு குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் பேசினோம்.

சீமான்
சீமான்

``ரஜினியின் இந்த முடிவை முழுமையாக வரவேற்கிறேன். அவருக்கு என் வாழ்த்துகள். ஒரு நேர்மையான அரசியலுக்காக கடந்த பத்தாண்டுகளாக களத்தில் நிற்கிறோம். எங்கள் கொள்கைகள், போராட்டங்கள், கருத்துகளை ரஜினி பார்க்கட்டும். அவருக்குப் பிடித்திருந்தால் எங்களுக்கு வாழ்த்து சொல்லட்டும்.`நீங்க நிம்மதியா இருங்க, எங்களுக்கு ஆதரவு கொடுங்க’ என்றுதான் ரஜினியிடம் நான் சொல்லிவருகிறேன். கட்சி ஆரம்பித்திருந்தால், உட்கட்சிப் பிரச்னையைச் சமாளிப்பதற்கே ரஜினிக்கு நேரம் போதாது. இளம் வயதிலேயே அமைதி, தியானம் என்று மனநிம்மதியைத் தேடி ஓடிய ரஜினிக்கு, இந்த அரசியல் சூழல் சரிப்பட்டு வராது. முதுமையான இந்த வயதில் அமைதியைத்தான் அவர் பெரிதும் விரும்புவார். அவர் எடுத்திருக்கும் முடிவை வரவேற்கிறேன்” என்றார்.

''எந்த நடிகனுக்கும் கட்சி ஆரம்பிக்கும் எண்ணம் வரக் கூடாது'' - விஜய் மீது சீமான்  பாய்வது ஏன்?
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு