Published:Updated:

பிறந்தநாளில்`மணல்' சேகர்ரெட்டி எடுத்த சபதம்! - திருப்பதி தேவஸ்தானத்தில் மீண்டும் நுழைந்த பின்னணி

சென்னையில் கொண்டாடப்பட்ட தொழிலதிபர் சேகர்ரெட்டியின் பிறந்தநாள் விழாவின்போது பறிக்கப்பட்ட அறங்காவலர் உறுப்பினர் பதவி மீண்டும் கிடைத்துவிட்டது.

 சேகர் ரெட்டியுடன் அ.தி.மு.க. பிரமுகர்
சேகர் ரெட்டியுடன் அ.தி.மு.க. பிரமுகர்

தொழிலதிபர் சேகர்ரெட்டியை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். பணமதிப்பிழப்பு சமயத்தில் வங்கியின் வாசல்களில் மக்கள் கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தபோது புத்தம் புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் மற்றும் தங்கக் கட்டிகள் ஆகியவற்றை சேகர் ரெட்டி வீடு அலுவலகங்களிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டன. தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் சேகர்ரெட்டியும் இருந்த புகைப்படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரெய்டு அடிப்படையில் சேகர்ரெட்டி மற்றும் அவரின் கூட்டாளிகள் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டனர். அதில் 2 வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் ரத்துசெய்துவிட்டது. அதன்பிறகுதான் சேகர்ரெட்டி மீண்டும் திருப்பதி தேவஸ்தான டிரஸ்ட்டின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 சேகர் ரெட்டியுடன் அ.தி.மு.க பிரமுகர்
சேகர் ரெட்டியுடன் அ.தி.மு.க பிரமுகர்

இதனால் அவரின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அறங்காவலர் உறுப்பினரான சேகர்ரெட்டி, தன்னுடைய 55 வயது பிறந்தநாளையொட்டி தி.நகர் திருப்பதி கோயிலில் சிறப்பு பிராத்தனை பூஜைகள் நடத்தப்பட்டன. அந்த விழாவில் அவருக்கு நெருக்கமானவர்கள் கலந்துகொண்டனர். அப்போது சி.டி ஒன்றும் வெளியிடப்பட்டது. சென்னை அ.தி.மு.க பிரமுகரான ஜெ.எம்.பஷீர் என்கிற விஜயகார்த்திக் பிறந்தநாள் விழாவில் பங்கேற்று சேகர்ரெட்டிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்புக்குப் பின்னணியில் மீண்டும் தமிழகத்தில் மணல் பிசினஸ் டீலிங் இருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவித்தன. இதுகுறித்து நம்மிடம் பேசிய சேகர்ரெட்டிக்கு நெருக்கமானவர்கள், ``தொழிலதிபர் சேகர்ரெட்டி மீது சி.பி.ஐ பதிவு செய்த 3 வழக்குகளிலிருந்து இரண்டு வழக்குகள் ரத்து செய்யப்பட்டுவிட்டன. மீதமுள்ள ஒருவழக்கிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.

பெருமாள் பாடல் சிடி வெளியிடும் விழாவில் சேகர்ரெட்டி
பெருமாள் பாடல் சிடி வெளியிடும் விழாவில் சேகர்ரெட்டி

இந்த வழக்குகள் காரணமாகத்தான் திருப்பதி தேவஸ்தான போர்டிலிருந்து சேகர்ரெட்டியின் உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது. தற்போது வழக்குகள் ரத்து செய்யப்பட்டது குறித்து மீண்டும் திருப்பதி தேவஸ்தான போர்டுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்துதான் சேகர்ரெட்டிக்கு உறுப்பினர் பதவி மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மணல் பிசினஸை சட்டத்துக்குட்பட்டு நடத்திவந்தோம். அந்தப் பிசினஸ் மீண்டும் தொடர வாய்ப்புள்ளது" என்றனர்.

தி.நகரில் கொண்டாப்பட்ட தொழிலதிபர் சேகர்ரெட்டியின் பிறந்தநாள் விழாவின்போது தனக்கு நெருக்கமானவர்களிடம் அறங்காவலர் உறுப்பினர் பதவி கிடைத்துவிட்டது. அடுத்து மீண்டும் தமிழகத்தில் கோலோச்சுவோம் என்று கூறியுள்ளார். அதை, அவர் சபதமாகவும் எடுத்திருப்பதாக ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

Vikatan

சேகர்ரெட்டிக்கு அறங்காவலர் உறுப்பினர் பதவி வழங்கப்பட்டதன் பின்னணியில் தமிழக, ஆந்திர அரசியல் பிரமுகர்கள் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் தலைமைச் செயலாளர் ஒருவர்தான் சேகர்ரெட்டிக்கு உறுப்பினர் பதவி வழங்க உறுதுணையாக இருந்துள்ளார். பறிக்கப்பட்ட அறங்காவலர் உறுப்பினர் பதவி கிடைத்துவிட்டது. அடுத்து மீண்டும் மணல் பிசினஸில் சேகர்ரெட்டி டீம் கோலோச்சுவதில் ஆர்வம் காட்டத் தொடங்கியிருக்கிறது.