Published:Updated:

தி.மு.க-வுடன் உறவு கொண்டாடி ஒப்பந்தம் எடுக்கும் எண்ணமில்லை!

சேகர் ரெட்டி
பிரீமியம் ஸ்டோரி
சேகர் ரெட்டி

- சேகர் ரெட்டி திட்டவட்டம்...

தி.மு.க-வுடன் உறவு கொண்டாடி ஒப்பந்தம் எடுக்கும் எண்ணமில்லை!

- சேகர் ரெட்டி திட்டவட்டம்...

Published:Updated:
சேகர் ரெட்டி
பிரீமியம் ஸ்டோரி
சேகர் ரெட்டி
தமிழக அரசியலில் மீண்டும் புயலைக் கிளப்பியிருக்கிறது சேகர் ரெட்டியின் பெயர். இவர் தலைமையிலான நால்வர் கூட்டணிக்கு மீண்டும் மணல் குவாரி அமைப்பதற்கு ரகசியமாக ஒப்பந்தமாகியிருப்பதாகவும், இதற்காக தி.மு.க பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தரப்புக்கு 300 கோடி ரூபாய் கைமாறியிருப்பதாகவும் ஆடியோ உரையாடல் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி, தி.மு.க வட்டாரத்தை உலுக்கியெடுத்திருக்கிறது. இந்தச் சூழலில் சேகர் ரெட்டியிடம், சில கேள்விகளை முன்வைத்தோம்.

‘‘துரைமுருகனுடன் ரகசிய ஒப்பந்தம் செய்துகொண்டது உண்மையா?’’

‘‘துரைமுருகனுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஒரே ஊர்க்காரர்கள் என்றாலும், ஒரு முறைதான் துரைமுருகனைச் சந்தித்திருக்கிறேன். அவரிடம் ஒரு ரூபாய்க்குக்கூட வேலையை நான் எடுத்ததில்லை. உண்மையில், மணல் வியாபாரம் செய்ய எனக்கு விருப்பமில்லை. விமர்சனம் வரும் என்பதால் ஒதுங்கிவிட்டேன். அந்த ஆடியோவில் பேசும் நபர்கள் யார் என்றுகூட எனக்குத் தெரியாது. இதுபோல யார்மீது வேண்டுமானாலும் போகிறபோக்கில் குற்றச்சாட்டுகளைச் சொல்லலாம். அவையெல்லாம் உண்மையாகிவிடுமா? துரைமுருகனும் அவர் மகன் கதிர் ஆனந்தும் ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறார்கள். அவர்கள் பெயரைக் கெடுக்கக்கூட யாராவது இப்படிச் செய்திருக்கலாம்.’’

‘‘மணல் வியாபாரம் செய்ய விருப்பமில்லை என்கிறீர்கள். ஆனால், உங்களை `மணல் மாஃபியா’ என்கிறார்களே...’’

‘‘பத்து ஏக்கர் குவாரியை ஒப்பந்தம் எடுத்து நூறு ஏக்கரில் மணல் அள்ளியிருந்தால், என்னை மாஃபியா என்று சொல்லலாம். நான்தான் மணல் குவாரிக்கான ஒப்பந்தமே எடுக்கவில்லையே! 2003-ம் ஆண்டிலிருந்து இப்போதுவரை மணல் குவாரியை தனியார் எடுத்துச் செய்ய முடியாது. சுற்றுச்சூழல் அனுமதியுடன் அரசுதான் குவாரியை நடத்த முடியும். யார் வேண்டுமானாலும் டி.டி கொடுத்து மணல் வாங்கிச் செல்லலாம். அரசாங்கமே மணல் விற்பனை செய்யும்போது, தவறு நடந்திருந்தால் அதற்கும் அரசாங்கம்தானே பொறுப்பு?

மணல் அள்ளிப் போடுவதற்கான லிஃப்ட்டிங் கான்ட்ராக்ட், மணல் வாங்கிச் சென்று யார்டு அமைப்பதற்கான அனுமதி ஆகியவை மட்டுமே கொடுக்கப்படுகின்றன. இந்த இரண்டு ஒப்பந்தத்தையுமே நானும் என் நிறுவனமும் எடுக்கவில்லை. பொதுப்பணித்துறையில், என் நிறுவனத்தின் பெயர்கூட இதுவரை பதிவு செய்யப்படவில்லை. 2016-ம் ஆண்டு வரை 500, 600 லாரிகளைவைத்து மணல் ‘செகண்ட் சேல்’ செய்துகொண்டிருந்தோம். அதாவது, தமிழக அரசின் அனுமதி பெற்று மணல் யார்டு நடத்தி வந்தவர்களிடம், நாங்கள் மணலை வாங்கி பொதுமக்களுக்கு விற்பனை செய்துவந்தோம்.’’

‘‘உங்கள் மீது சர்ச்சை எழும்போதெல்லாம், ராமச்சந்திரன், ரத்தினம் ஆகியோரின் பெயர்களும் தொடர்ச்சியாக அடிப்படுகின்றனவே... யார் அவர்கள்?’’

‘‘எங்களுடைய எஸ்.ஆர்.எஸ் மைனிங் கம்பெனியில், ராமச்சந்திரனும் ரத்தினமும் பங்குதாரர்கள். பொக்லைன், லாரிகளை வாடகைக்கு விட்டுக்கொண்டிருந்தோம். யார்டிலிருந்து மணல் வாங்கி மார்க்கெட்டில் விற்பனை செய்வோம். அதன் மூலம் முப்பது முதல் நாற்பது பர்சன்ட் லாபம் கிடைத்தது. இந்தத் தொழிலைத் தவிர, எங்களுக்கு வேறு எதிலும் நேரடியாகச் சம்பந்தமில்லை.’’

‘‘கொரோனா நிவாரண நிதிக்காக முதலமைச்சர் ஸ்டாலினைச் சந்தித்து ஒரு கோடி ரூபாய் கொடுத்திருக்கிறீர்கள். தி.மு.க-வுடன் உறவை வளர்ப்பதற்கு இதைச் செய்தீர்களா?’’

‘‘அனைத்துக் கட்சிகளிலும் எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். நிதியைப் பலரும் நேரில் சென்று முதலமைச்சரிடம் கொடுக்கிறார்கள், நானும் சென்றேன். அதில் என்ன தவறு? நிதி கொடுத்ததில் உள்நோக்கம் எதுவும் கிடையாது. தி.மு.க-வுடன் உறவு கொண்டாடி மணல் குவாரி ஒப்பந்தம் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்குத் துளியும் கிடையாது. பத்து வருடங்கள் ஆட்சியிலிருந்த அ.தி.மு.க-வுடனும் நெருக்கமாக இருந்ததாக விமர்சனம் செய்தார்கள். அப்படியெனில், பல்லாயிரம் கோடி ரூபாய்க்கு ஒப்பந்தங்களை நான் எடுத்திருந்திருக்கலாமே? அ.தி.மு.க ஆட்சியின்போது, மாநில நெடுஞ்சாலைத்துறையில் இரண்டு வேலைகளை மட்டுமே எடுத்துச் செய்திருக்கிறோம். இப்போது எந்த மாநில அரசுப் பணியையும் எடுப் பதில்லை. தேசிய நெடுஞ்சாலைத்துறை வேலை மட்டுமே நடக்கிறது. தமிழ்நாட்டிலும் ஈ.சி.ஆர்., மதுரை மேலூர் ஆகிய இரண்டு இடங் களிலும் பணிகள் நடக்கின்றன. அனைத்திலும் வெளிப்படைத்தன்மையுடன் இருக்கிறேன். எத்தனையோ பேர் நிதி கொடுக்கிறார்கள். நான் கொடுத்ததால் மட்டும் ஏன் எரிகிறது?’’

தி.மு.க-வுடன் உறவு கொண்டாடி ஒப்பந்தம் எடுக்கும் எண்ணமில்லை!

‘‘அரசியல் சூழலைப் பரபரப்பாக்கிய உங்கள் டைரியின் ரகசியம்தான் என்ன?’’

‘‘நீண்ட நாள்களாக நானும் அதைத்தான் கேட்கிறேன். என்ன டைரி அது? எனக்கு டைரி எழுதுகிற பழக்கமே இல்லை. என்னுடைய நிறுவனத்தின் பெயரில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்குப் பணம் கொடுத்திருக்கிறேன் என்று குறிப்பிட்டிருப்பதெல்லாமே பொய். நாட்டில் எவ்வளவோ பிரச்னைகள் இருக்கின்றன. சேகர் ரெட்டி மட்டும்தான் கண்ணுக்குத் தெரிகிறானா?’’

‘‘நில பத்திரப்பதிவில் மோசடி செய்து அரசாங்கத்துக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியிருப்பதாக உங்கள்மீது வழக்கு வந்திருக்கிறதே...’’

‘‘அரசுக்கு 90 லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தியிருப்பதாக தமிழக ஊழல் கண்காணிப்புத்துறை வழக்கு பதிந்திருக்கிறது. நான் செய்கிற தான தர்மத்தில் 90 லட்சம் என்பது பெரிய பொருளில்லை. லேஅவுட் நிலத்தை விவசாய நிலமாகப் பத்திரப்பதிவு செய்திருப்பதாக அவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். யார் வேண்டுமானாலும் நேரில் வந்து பார்த்துக்கொள்ளட்டும். அந்த நிலத்தில் இப்போதும் விவசாயம்தான் செய்கிறார்கள்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism