Published:Updated:

ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழா: `மதுரைக்காரன் எதையும் வித்தியாசமா செய்வான்’ - செல்லூர் ராஜூ

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

`எங்கள் அம்மா ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டி தந்திருக்கிறார் முதல்வர். அதைக் காண தொண்டர்களை அழைத்துச் செல்கிறேன்’ என்றார் செல்லூர் ராஜூ.

சென்னை மெரினாவில் ஜெயலலிதா நினைவிட திறப்புவிழாவில் மதுரையிலுள்ள கட்சியினர் கலந்துகொள்ள, தனி ரயிலை ஏற்பாடு செய்து அவர்களுடன் அமைச்சர் செல்லூர் ராஜூ பயணித்த சம்பவம் அனைவராலும் கவனிக்கப்பட்டது.

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

ஜெயலலிதாவின் நினைவிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் இன்று திறந்துவைக்கிறார்கள். இதற்காக பல்வேறு மாவட்ட கட்சி நிர்வாகிகள் வாகனங்களில் சென்னை வந்திருக்கிறார்கள்.

இந்தநிலையில் மதுரையைச் சேர்ந்த 5,000-க்கும் மேற்பட்ட கட்சியினரை சென்னைக்கு அழைத்துச் செல்ல முடிவெடுத்த செல்லூர் ராஜூ, பேருந்துகள் மட்டும் போதாது என்று தனி ரயில் மூலம் அழைத்துச் சென்றார்.

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

திருமங்கலம் அருகில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஜெயலலிதாவுக்குக் கோயில் கட்டி, வருகின்ற 30-ம் தேதி முதலைமைச்சர் அதைத் திறக்கவிருப்பது குறித்து, கட்சியினரால் அதிகம் வியந்து பேசப்பட்டுவருவதால், தானும் ஜெயலலிதாவுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவு செய்த செல்லூர் ராஜூ, இந்தத் தனி ரயில் ஐடியாவை நடைமுறைப்படுத்தியிருக்கிறார்.

செல்லூர் ராஜூவின் ஐடியாவைப் பற்றி கடைசி நேரத்தில் தெரிந்துகொண்ட சக அமைச்சர்கள் ஆச்சர்யப்பட்டுப்போனார்களாம். நேற்று இரவு 7:30 மணிக்கு மதுரையிலிருந்த புறப்பட்டு சென்னைக்கு வந்த ரயில், இன்று மாலை 5 மணிக்கு மீண்டும் மதுரைக்குப் புறப்படுகிறது.

தனி ரயில்
தனி ரயில்

இந்த ரயிலில் தொண்டர்களோடு அமைச்சர் செல்லூர் ராஜூவும் சேர்ந்து வந்தார். நேற்று இரவு ரயில் புறப்படுவதற்கு முன்னர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசும்போது, ``ஏற்றுக்கொண்ட, தலைவருக்கு நன்றியை வெளிப்படுத்துவதை வித்தியாசமாகச் செய்ய வேண்டும்.

அதனால்தான் தமிழகத்தில் முதன்முறையாக கட்சித் தொண்டர்களை ரயிலில் அழைத்துச் செல்கிறேன். அவர்களுடன் நானும் செல்கிறேன். நான் ஸ்டாப்பாக எங்கள் ரயில் சென்னைக்குச் செல்கிறது. மதுரைக்காரன் பாசக்காரன், ரோஷக்காரன். எதையுமே வித்தியாசமாகச் செய்பவன். ஜெயலலிதாமீது பற்றுள்ளவன்.

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

எங்கள் அம்மா ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டித் தந்திருக்கிறார் முதல்வர். அதைக் காண தொண்டர்களை அழைத்துச் செல்கிறேன்" என்று கண்கலங்கக் கூறினார். 18 பெட்டிகளுடன் செல்லும் தனி ரயிலுக்கு வாடகை 18 லட்சம் ரூபாய் என்று கட்சியினரால் சொல்லப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு