Published:Updated:

`20-ம் தேதி மாநகராட்சி தேர்தல் அறிவிப்பா?!' - நேர்காணல் நடத்திய செல்லூர் ராஜூ

செல்லூர் ராஜு
செல்லூர் ராஜு

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க அதிக இடங்களைப் பிடித்துள்ள நிலையில், மாநகராட்சி, நகராட்சித் தேர்தல் உடனே வராது என்று அ.தி.மு.க-வினர் நினைத்திருந்தனர்.

வருகின்ற 20-ம் தேதி நகராட்சி, மாநகராட்சி தேர்தலுக்கான அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளதாகவும், அதற்குத் தயாராகும் வகையில் வேட்பாளர் நேர்காணலை அ.தி.மு.க தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. சில நாள்களுக்கு முன் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில், தி.மு.க அதிக இடங்களைப் பிடித்துள்ள நிலையில், மாநகராட்சி, நகராட்சித் தேர்தல் உடனே வராது என்று அ.தி.மு.க-வினர் நினைத்திருந்தனர். இந்த நிலையில், அ.தி.மு.க -வில் ஏற்கெனவே விருப்ப மனு கொடுத்தவர்களைத் திடீரென இன்று முதல் அழைத்து நேர்காணலை நடத்திவருகிறார்கள். மதுரையிலுள்ள 100 மாநகராட்சி வார்டுகளில் போட்டியிட, 800-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க-வினர் விருப்ப மனு கொடுத்துள்ளனர்.

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

அவர்களை தமிழ்நாடு ஹோட்டலுக்கு வரச்செய்து, மாநகரச் செயலாளரும் அமைச்சருமான செல்லூர் ராஜூ, புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பா, தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் கோபாலகிருஷ்ணன், கிரம்மர் சுரேஷ் ஆகியோர் வார்டு வாரியாக நேர்காணல் நடத்திவருகிறார்கள். நேர்காணலில் கலந்துகொண்டவர்களிடம் பேசியபோது, "கட்சியில் எப்போது சேர்ந்தீர்கள், வகிக்கும் பொறுப்பு, வார்டில் உள்ள செல்வாக்கு, எவ்வளவு செலவுசெய்வீர்கள் என்று கேட்டார்கள். பணம் உள்ளவர்களுக்குத்தான் சீட் என்றால், உன்மையான கட்சிக்காரர்கள், மக்கள் செல்வாக்குள்ளவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது போல" என்று புலம்பித் தீர்த்தார்கள். உள்ளாட்சியில் பெரிய வெற்றியைப் பெறாவிட்டாலும் நகராட்சி, மாநகராட்சித் தேர்தலுக்கு அ.தி.மு.க-வினர் தயாராகிவிட்டார்கள்.

அடுத்த கட்டுரைக்கு