Published:Updated:

`அப்பா வளர்த்த கட்சி... மனம் வெதும்பிய நிலையில் மு.க.அழகிரி!’ - சொல்கிறார் செல்லூர் ராஜூ

செல்லூர் ராஜூவுடன் மு.க.அழகிரி
செல்லூர் ராஜூவுடன் மு.க.அழகிரி ( ஃபைல் படம் )

செல்லூர் ராஜூ, ``தி.மு.க-வில் உதயநிதி கட்டாயமாகத் திணிக்கப்படுகிறார். தி.மு.க நாடக கோஷ்டிபோல ஆகிவிட்டது. தமிழக மக்கள் போலியை நம்பி வாக்களிக்க மாட்டார்கள்” என்றார்.

``அப்பா வளர்த்த கட்சி இப்படி ஆகிவிட்டதே என்று மு.க.அழகிரி மனம் வெதும்பியிருக்கிறார்..." என்று செல்லூர் ராஜூ கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மதுரையில் செய்தியாளர்களிடம பேசும்போது, ``முதல்வரின் தீர்க்கமான நடவடிக்கையால் நிவர் புயல் பாதிப்பை ஏற்படுத்தாமல் சென்றிருக்கிறது. விலைமதிப்பற்ற மனித உயிர்கள் காக்கப்பட்டிருக்கின்றன.

புயலைப் பொருட்படுத்தாமல் குடையைப் பிடித்துக்கொண்டு முதல்வர் நேரில் ஆய்வு செய்தார். முதல்வரின் நடவடிக்கையால் வீடியோ கான்ஃபரன்ஸிலிருந்த ஸ்டாலின் நேரில் ஆய்வுக்கு வந்தார். புயலைவைத்து தி.மு.க விளம்பரம் தேடிவருகிறது.

செல்லூர் ராஜுவுடன் மு.க.அழகிரி
செல்லூர் ராஜுவுடன் மு.க.அழகிரி

சட்டமன்றத் தேர்தலில் ஸ்டாலின் எதைவைத்து பிரசாரம் செய்வார் என தெரியவில்லை. குரங்கு தன் குட்டியைவிட்டு ஆழம் பார்ப்பதுபோல ஸ்டாலின் உதயநிதியைவிட்டு அரசியல் ஆழம் பார்க்கிறார்,

தி.மு.க-வில் உதயநிதி கட்டாயமாகத் திணிக்கப்படுகிறார். தி.மு.க நாடக கோஷ்டிபோல ஆகிவிட்டது. தமிழக மக்கள் போலியை நம்பி வாக்களிக்க மாட்டார்கள். தி.மு.க ஆட்சிக்காலத்தில் வந்த புயலின்போது செய்த உதவிகளை ஸ்டாலின் எண்ணிப் பார்க்க வேண்டும்.

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ
ஈ.ஜெ.நந்தகுமார்

2015-ம் ஆண்டைவிட தற்போது மழை அதிகம் பெய்திருக்கிறது. குடிமராமத்துப் பணிகளால் பாதிப்பு ஏற்படவில்லை. தமிழக அரசின் நடவடிக்கைகளை மக்கள் பாராட்டிவருகின்றனர்,

மழைநீர் வீணாகக் கடலில் கலக்காமலிருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரியை முதல்வர் பாதுகாத்திருக்கிறார்” என்றார்.

செய்தியாளர்கள் விவசாயிகள் போராட்டம் பற்றிக் கேட்டதற்கு, "பிற மாநிலங்களைவிட தமிழகத்தில் வேளாண் பொருள்களுக்கு குறைவாகக் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. வேளாண் சட்டங்களுக்காக எதிர்கட்சிகள் நடத்திய போராட்டங்களை மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை" என்றவர்,

ஏழு தமிழர் விடுதலை தொடர்பாகப் பேசுகையில், ``ஏழு பேர் விடுதலை தொடர்பாக தி.மு.க-வினர் ஆளுநரைச் சந்தித்தது நாடகத்திலும் நாடகம். தி.மு.க ஆட்சிக்காலத்தில் நளினியைத் தவிர அனைவரையும் தூக்கில் போட வேண்டும் எனச் சொன்னார்கள். தி.மு.க என்பது தமிழ் விரோதக் கட்சி. தி.மு.க-வில் மட்டுமே தாத்தா முதல் பேரன் வரைக்கும் பதவிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. உண்மையான தி.மு.க-வினர் மனம் வெதும்பியிருக்கிறார்கள்.

செல்லூர் ராஜூவுடன் மு.க.அழகிரி
செல்லூர் ராஜூவுடன் மு.க.அழகிரி

அண்ணா தொடங்கிய தி.மு.க., குடும்பக் கட்சியாக மாறியிருக்கிறது. நாலு வரியைப் பார்த்துப் படிக்கத் தெரியாதவர் ஸ்டாலின். கலைஞரின் மூளை ஸ்டாலினினுக்கு இல்லை, மு.க.அழகிரியிடம் இருக்கிறது. அப்பா வளர்த்த கட்சி இப்படி அகிவிட்டதே என்று மு.க.அழகிரி மனம் வெதும்பியிருக்கிறார்" என்றார் அதிரடியாக.

ஜெயலலிதாவால் கடுமையாக எதிர்க்கப்பட்டவராக அறியப்பட்ட மு.க.அழகிரியை செல்லூர் ராஜூ புகழ்ந்து பேசியிருப்ப்பது தி.மு.க-வினரை மட்டுமல்ல, அ.தி.மு.க-வினரையும் அதிர்ச்சியடையவைத்திருக்கிறது!

அடுத்த கட்டுரைக்கு