Published:Updated:

ஒன் பை டூ : தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய சக்தியா பா.ம.க?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
செல்வப்பெருந்தகை - திலகபாமா
செல்வப்பெருந்தகை - திலகபாமா

வாக்குகள் அடிப்படையில் பார்த்தாலும்கூட நாங்கள்தான் மூன்றாவது பெரிய கட்சி!

பிரீமியம் ஸ்டோரி

செல்வப்பெருந்தகை, சட்டமன்றக்குழுத் தலைவர், காங்கிரஸ்

‘‘உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பா.ம.க நிறுவனர் இப்படிச் சொல்லியிருக்கிறார். சொல்லட்டும்... அப்படிச் சொல்வதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது. அது அவரது சொந்தக் கருத்து. ஆனால், நாடாளுமன்றத் தேர்தலாகட்டும்... சட்டமன்றத் தேர்தலாகட்டும்... ஏன், தற்போது நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலாகட்டும்... தமிழகத்தின் மூன்றாவது பெரிய சக்தி காங்கிரஸ் இயக்கம்தான் என்பது மீண்டுமொரு முறை நிரூபணமாகியிருக்கிறது. சொல்லப்போனால், மாவட்ட கவுன்சிலர் இடங்களில் நாங்கள் ஒன்பது இடங்களில் வெற்றிபெற்றிருக்கிறோம். ஆனால், பா.ம.க-வால் ஒரு இடத்தில்கூட வெற்றிபெற முடியவில்லை. பிறகு எப்படி அவர்கள் தங்களை ‘மூன்றாவது பெரிய சக்தி’ என்று சொல்லிக்கொள்ள முடியும்? இவ்வளவுக்கும் பெரும்பாலும் வன்னியர் சமூகத்தினர் அடர்த்தியாக வாழ்கிற மாவட்டங்களில்தான் ஊரக உள்ளாட்சித் தேர்தலே நடந்துள்ளது. மருத்துவர் ராமதாஸின் சொந்த மாவட்டத்திலேயே அவரது கட்சியால் ஒரு மாவட்ட கவுன்சிலர் இடத்தைக்கூடப் பிடிக்க முடியவில்லை. ‘ஒன்றிய கவுன்சிலர்கள் இடங்களில் அதிகம் வென்றிருக்கிறோம்’ என்கிறார்கள். ஒரு மாவட்ட கவுன்சிலர் என்பது பத்து ஒன்றிய கவுன்சிலர்களுக்குச் சமம்; அது ஐம்பதாயிரம் முதல் ஒரு லட்சம் வாக்குகளைக்கொண்டது. வாக்குகள் அடிப்படையில் பார்த்தாலும்கூட நாங்கள்தான் மூன்றாவது பெரிய கட்சி!’’

செல்வப்பெருந்தகை
செல்வப்பெருந்தகை
திலகபாமா
திலகபாமா

திலகபாமா, பொருளாளர், பா.ம.க

‘‘அய்யா சொன்னது மிகச்சரியான கருத்து. தனித்து நின்று எங்களின் தனிப்பெரும்பான்மையை நிரூபித்திருக்கிறோம். நாங்கள்தான் தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய கட்சி என்று சொல்லிக்கொண்டிருந்த காங்கிரஸ், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் ஒன்றுமே இல்லாமல் போய்விட்டன. பா.ம.க சார்பில் போட்டியிட்டவர்கள் பல இடங்களில் போட்டியின்றித் தேர்வாகியிருக்கிறார்கள். ஒன்பது மாவட்டங்களில் நடந்த தேர்தலை வைத்து நாங்கள் மாவட்ட கவுன்சிலர் இடங்களைப் பிடிக்கவில்லை என்று சொல்வது சரியல்ல. ஏற்கெனவே 27 மாவட்டங்களுக்கு நடந்த தேர்தலில் நாங்கள் எத்தனை இடங்களைப் பிடித்தோம் என்பதையும் பார்க்க வேண்டும். காங்கிரஸ், வி.சி.க ஆகியவை கூட்டணியில்தான் வெற்றிபெற்றிருக்கின்றன. நாங்கள் தனித்து நின்று நாற்பதுக்கும் மேற்பட்ட ஒன்றிய கவுன்சிலர் இடங்களை வென்றிருக்கிறோம். ஆளுங்கட்சியினர் எப்படித் தேர்தலை நடத்தினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். எங்களைத் தோற்கடிப்பதற்காகவே ஏழு எம்.பி-க்கள் வேலை பார்த்தார்கள். அதையெல்லாம் தாண்டி நாங்கள் நிற்பதும், இவ்வளவு இடங்களைப் பிடித்திருப்பதும் மிகப்பெரிய வெற்றியே!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு